பற்குணம் (பதிவு15)

எமது ஊரில் ஒரு நெசவு பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டது.இதன் திறப்பு விழாவுக்கு திரு.வி.என.நவரத்தினம் அழைக்கப்பட்டார்.இந்த நெசவு பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுபவர்கள் அம்பது ரூபா பணம் செலுத்தும்படி சின்னத்துரை,நடராசா ஆகியோர் வலியுறுத்தினர். இந்த திறப்பு விழாவுக்கு பற்குணமும் ஒரு பேச்சாளராக அழைக்கப்பட்டார்.ஆனால் பற்குணம் உரிய நேரத்துக்கு வருவதை தவிர்த்தார்.அதுவும் காரணமாகவே.மேடையில் நடராசாவும்,சின்னதுரை என்பவரும் பணம் வசூல் பற்றிப் பேசினார்கள்.அவரகள் பேசி முடிந்தவுடன் பற்குணம் தாமதமாக வந்துவிட்டேன் மன்னிக்கவும் என்று நடராசாவிடம் கூறினார்.நடராசா பற்குணத்தை பேச அழைத்தார்.

பற்குணம் இந்த பயிற்சி இலவசமானது. யாரும் பணம் கட்டவேண்டியதில்லை.கொடுத்து ஏமாற வேண்டாம் என உரையாற்ற நடராசா,சின்னத்துரை ஆகியோர் திகைத்து நின்றனர்.அதுவே அவர் தமிழரசுக்கட்சியின் முதல் மேடையும் கடைசி மேடையும் ஆகும்.அன்றைய காலத்தில் அம்பது ரூபா என்பது பெரிய தொகை.இதன் பின் நடராசா மிகவும் எச்சரிக்கையுடன் பற்குணத்தோடு நடந்தார்.சின்னத்துரையும் பலவகைகளில் எங்கள் குடும்பத்தை பழிவாங்க முயன்றார்.

பற்குணம் 1967இல் பல்கலைக்கழக படிப்பை முடித்து பரீட்சை முடிவு வரும்வரையில் பல்கலைக்கழக விடுதிக் காப்பாளராக பணிபுரிந்தார் .அவர் பொருளாதார பாடத்தை தெரிவு செய்து படித்தார்.அண்ணனின் மதிப்பு மிக்க ஆசிரியராக பேராசிரியர் ரோனி இராஜரத்தினம் இருந்தார்.ஆனாலும் சகல பேராசியரகளிடமும் நல்ல உறவுகளை வைத்திருந்தார்.கைலாசபதியும் இவரது அபிமானத்துக்குரியவர்.1968 இல் இரண்டாவது வகுப்பில் சித்தியடைந்து பொருளாதார விரிவுரையாளராக பணியேற்றார்.இதனத் தொடர்ந்து எங்கள் குடும்ப வறுமைகள் தணிய தொடங்கியது.

இக்காலப் பகுதியில் சி.தங்கராசா என்பவர் மட்டுவில் மகாவித்தியாலத்தில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவானார்.இவரே இரண்டாவதாக எமது ஊரில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவானவர்.இவருக்கு யாரும் உதவி இல்லை. பொறுப்பற்ற அப்பா.அவர் பலவிதமான பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டவர்.இதனால் இவரின் மேற்படிப்பு கேள்விக்குறியானது.இவருக்கும் சில சிக்கல்கள் இருந்தன.அவற்றை எல்லாம் சரி செய்து இவரை பல்கலைக்கழகம் அழைத்துச் சென்று சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்.சில வருடங்களின் பின் பற்குணத்துடன் முரண்பட்டு தரக்குறைவாக வசை பாடினார்.இதன் பின்னணியில் நடராசாவும் இருந்தார்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் சேகரிக்கப்பட்ட நிதி மோசடிகள் தொடர்பாக நடராசாமீது எமது ஊரில் கடும் விமர்சனம் இருந்தது.இது தொடர்பாக எமது நாலாவது அண்ணன் இரத்தினசிங்கம் வெளிப்படையாக கதைக்க நடராசாவின் தம்பி செல்லத்துரையும் அவரது சகாக்களும் அவரை மோசமாக தாக்கினர்அந்த அண்ணனின் வயது அப்போது 18.அவரகளோ 25 வயதைக்,கடந்தவர்கள்..செல்லத்துரை ஒருவரே நடராசாவின் சகோதரர்களில் படிக்காதவர்.அந்தக் குடும்பத்தில் ஓரளவு நேர்மையானவர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு குடும்பங்களிலும் விவாதங்கள் தொடர்ந்தன.நடராசா தன் மோசடியை மறைக்க அந்த சண்டையை நியாயப்படுத்தினார்.எமது குடும்ப வளரச்சி மீதும் பொறாமை கொண்டனர்.

(விஜய் பாஸ்கரன்)
(தொடரும்……)