பற்குணம் A.F.C (பகுதி 77 )

1972 இல் சீவல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் கலாநிதி என்.எம்.பெரேரா அவர்களால் உருவாக்கப்பட்டது.இதன் பின்னணியில் எம்.சி. சுப்பிரமணியத்தின் பங்கு உண்டு.இக் காலத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைகள் முக்கியம் பெற்றன.இவற்றில் ்தமிழர்கள் நுழைய முடியவில்லை .இதனைத் தொடர்ந்து வடபகுதியில் பனை அபிவிருத்திச் சபை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் சிலருக்குப் பிறந்தது.ஆனால் இது ஐ.தே.க அரசாங்கத்திலேயே உருவாக்கப்பட்டது.இதன் தலைவராக கே.சி.நித்தியானந்தா பொறுப்பேற்றார்.

இந்தச் சபையில் உயர்சாதியினர் மட்டுமே வேலைவீய்ப்புகளைப் பெற்றனர்.இக் காலத்தில் பொறுப்பற்ற ஆசிரியராக இருந்த நடராசா சாவகச்சேரி சீவல் தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவராகவும் அதன் சமாஜத்தின் செயலாளராகவும் பதவி வகித்தார்.ஏதோ ஒரு வகையில் கே.சி.நித்தியானந்தாவை அணுகி பனம்பொருள் அபிவிருத்துச் சபையில் ஊழியராக சேர்ந்தார்.

கே.சி.நித்தியானந்தாவின் பின்னர் கனகசூரியர் பதவி ஏற்றார்.நடராசா கடமைக்கு ஒழுங்காக வராததால் அவரை வெளியே அனுப்பிவிட்டார்.இந்தக் காலத்தில் அரசாங்கத்தில் இராசதுரை இணைந்தார்.அவருக்கு இந்து சமய கலாச்சார அமைச்சு பதவி வழங்கப்பட்டது.அதன் பின் அந்த அமைச்சின் கீழ் பனம் பொருள் அபிவிருத்தி சபை கொண்டுவரப்பட்டது .

கனகசூரியர் ஒரு புதிய பதவிக்கு மாற்றப்பட அந்த இடம் வெற்றிடமானது.இந்த பதவியை சி.ஈ. குணரத்தினம் அடைய விரும்பினார்.இவர் ஐ.தே.கட்சி உறுப்பினர்.காங்கேசந்துறை சீமந்து தொழிற்சாலையில் முகாமையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.அங்கு பணி புரிந்த காலங்களில் பல ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியவர்.இலஞ்ச விவகாரங்களில் சிக்காதவர்.

இந்த பதவியை பெறுவதற்காக சிலரை இணைத்து செயற்பட்டார்.அவரகளில் ம.செ.அலெக்சாந்தரும் இணைந்திருந்தார்.அவர் நடராசாவையும் இணைத்து செயற்படுவது பலம் என குணரத்தினத்துக்கு கூறினார்.அவர் அதை விரும்பவில்லை.ஆனாலும் அவரையும் இணைத்து செயற்பட்டார் .

அவரகளோடு உறவாடிக்கொண்டே நடராசா தன் வேலையை தொடங்கினார்.இராசதுரையை சந்தித்து தனது ஆதரவை மறைமுகமாக தெரிவித்தார்.அவருக்கு ஆதரவு வழங்குவதுபோல் காட்ட சீவல் தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர்களை கூட்டாக அழைத்துச் சென்று ஆதரவை மறைமுகமாக தெரிவித்தார்.இதில் என் சகோதரன் ஒருவரும் அடங்குவார்.பின்னர் அவர் மூலமாக ஜே.ஆர். அவர்களையும் இந்தக் குழு சந்தித்தது.அங்கே ஆங்கிலம் தெரிந்த. ஒருவர் நடராசா அவர்களே.

அவர் சாதிப்பிரச்சினைகளையும் தனிநாட்டு பிரிவினையையும் பற்றி ஆங்கிலத்தில் விளக்கினார்.தன்னை தேசியவாதியாக காட்டினார்.

அதன்பின்பு இதை சாக்காக வைத்து பனம் பொருள் அபிவிருத்தி சபை தலைவர் பதவியை கோரினார்.இந்த தகவல் குணரத்தினதுக்கு எட்டியது.குணரத்தினம் கட்சி ரீதியாக பெற முயற்சி செய்தார்.

ஆனால் இராசதுரை இப்பதவியை பற்குணத்துக்கு கொடுக்கவே விரும்பினார்.இது பற்குணத்துக்கு தெரியாது.

நான் ஒரு தடவை திடீர் என மன்னாருக்குப் போனேன்.அப்போது பற்குணம் தான் இரவு கொழும்புசெல்வதாகவும் என்னை திரும்பி போகும்படி கூறினார்.பின்னர் சிலநேரம் கழித்து நான் தனியாகவே போகிறேன் விரும்பினால் என்னுடன் வா என்றார்.பின் நான் அவருடன் சென்றேன்.

மறுநாள் காலை கொழும்பு கொள்ளுப்பிட்டி காலி வீதியில் நானும் பற்குணமும் அவரது அலுவலகம் ஒன்றை தேடி நடந்து சென்றபோது வழியால் வாகனத்தில் வந்த இராசதுரை கண்டுவிட்டார்.உடனே மறித்து முடிந்தால் தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார்.

அதன் பின் நானும் பற்குணமும் பின்னேரம் இராசதுரை அலுவலகத்துக்குப் போனோம்.அங்கே நடராசா,வெளியில் அமைச்சருக்காக காத்திருந்தார்.ஆனால் பற்குணம் வந்ததும் உள்ளே அழைத்தார்.அவரிடம் பேசிவிட்டு பற்குணம் வெளியே வந்தார்.பின் நடராசாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அதன் பின்பு நடராசா அழைக்கப்பட்டார்.அவர் சந்தித்து முடிந்தபின் என்னையும் நடராசாவையும் பற்குணம் கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்.அப்போது நடராசா பற்குணம் நீர் சேர்மன் பதவிக்கு முயற்சிக்கிறீர்களா எனக் கேட்டார். பற்குணம் இல்லை ஆனால் அமைச்சர் விரும்புகிறார் என பதிலளித்தார்.

இதைப் பற்றி பின்னர் நான் பற்குணத்திடம் கேட்டேன்.இராசதுரை அரசியல்வாதி.அவர் சில எதிர்பார்புகளுடன் இந்த பதவியை தரவிரும்பினார்.எனக்கு அந்த நிபந்தனைகள் ஏற்க விரும்பவில்லை.எனவே அந்தப் பதவியில் விருப்பமில்லை என சொல்லிவிட்டேன் என்றார்.ஆனால் இந்தப் பதவி தானாக வந்தால் சில காரியங்களை எமது சமூகத்து செய்ய முடியும் என்றார்.

ஆனால் அந்தப் பதவியை இராச்துரை நடராசாவுக்கு வழங்க விரும்பவில்லை.சி.ஈ.குணரத்துனத்துக்கு அந்த பதவிபோனால் தமக்கு நட்டம் ஏற்படும் என்ற காரணத்தால் அமிர்தலிங்கமே பகை மறந்து இராதுரையிடம் கேட்டதால் காழ்ப்பணர்வை தவிர்க்க நடராசாவுக்கு அந்த பதவி வழங்கியதாக அறிந்தேன்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)