பிரபாகரனின் கடைசி மணிநேரங்கள்… என்னதான் நடந்தது? ஏன் மே 17 திகதி வரை காத்திருந்தனர்? Project Beacon, Operation Beacon பற்றி ஏன் பேசுகின்றார்கள் இல்லை?

By த ஜெயபாலன்March 6, 2023

“பேச்சு வாரத்தைக்கு வாருங்கள். அதனை விட வேறு வழியேதும் இல்லை” எனறார் விசாக தர்மதாஸ. இவருடைய மகன் இராணுவத்தில் இருந்தவர் கிளிநொச்சியில் நடைபெற்ற யுத்தத்தின் போது காணாமல் போயிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினதும் யுத்தத்தின் போது காணாமல் போன படைவீரர்களைப் பெற்றவர்களதும் அமைப்பின் ஸ்தாபகரான விசாகா தர்மதாஸாவை நான் லண்டனில் சந்தித்து நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். இந்த நேர்காணலை தமிழர் தகவல் நடுவத்தின் காலம்சென்ற பொறுப்பாளர் வைரமுத்து வரதகுமார் ஏற்பாடு செய்துதந்திருந்தார். வரதகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு மிக வேண்டப்பட்டவர். பிரபாகரனின் மிக நெருங்கிய வட்டத்தில் ஒருவர். எதிர்பாராத விதமாக இந்நேர்காணல் புலிகளின் ஆயுதங்கள் மௌனிப்பதற்கு ஓராண்டு முன்பாக 2008 மே 18 இல் நடைபெற்றது. பிரித்தானியாவில் சறே பகுதியில் விசாகா தர்மதாஸ தங்கியிருந்த வீட்டில் தான் இந்நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.