மக்கத்துச் சால்வை எஸ்.எல்.எம். ஹனீபா பச்சோந்தியான கதை – 03

பெரும்பாலான நகரங்களில், கிராமங்களில், ஊர்களில் முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளூர்த் தலைமைகளை நியமிக்கும்போது ஒவ்வோர் இடத்திலும் ஒருவரை மாத்திரம் தலைவராக நியமிக்காமல் இருவரை நியமித்து விடுவார்.

அந்தத் தவறான ஏற்பாட்டுக்கு அவரே ஒரு நியாயத்தையும் சொல்லிக்கொள்வார். ஒவ்வோரிடத்திலும் இரண்டிரண்டு தலைவர்களை நியமித்து விட்டால் இருவருமே தத்தமது ஊர்களில் தீவிரமாக இறங்கிப் பிரச்சாரம் செய்வார்கள், அதிக வாக்குகளைப் பெறும் போட்டியில் இருவருமே மும்முரமாக வேலை செய்வார்கள், முடிவில் எப்படிப் பார்த்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கே வாக்குக் கேட்பதால் உள்ளூர் மக்களின் மொத்த வாக்குகளும் முஸ்லிம் காங்கிரஸுக்கே கிடைத்து விடும் என்பதே தன்னளவில் அவர் கொண்டிருந்த பாரிய நம்பிக்கை.

ஆனால் அந்தக் கணிப்பு வேறுவிதமான பாரிய பிரச்சினைகளை உருவாக்கியது. அவற்றைச் சற்றுப் பின்னர் அலசுவோம்.

மொஹிதீன் அப்துல் காதரின் குடும்பம் மிகவும் விசாலமானது, வசதி வாய்ப்புகளிலும் செல்வாக்கிலும் மிகவும் உயர்ந்தது.

அவரது மாமனார் காயல்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த பெரும் செல்வந்தர். அவருக்கு நூறு ஏக்கருக்கும் மேல் காணி நிலங்கள் இருந்தன. ஓட்டமாவடியில் ஒரு குட்டி ராஜாவைப் போல் வாழ்ந்தார்.

ஏழடி உயரமான மதில்களால் முழுவதும் சூழப்பட்ட ஒரு பெரும் குடிமனை அவர்களுடையது. அந்த இல்லங்களுக்குள் ஊரார் எவருமே நுழைய முடியாது. அவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. அவர்கள் எல்லா வகையிலும் ஊராரை விடவும் ஏதோ விஷேடமான தனித்தன்மைகள் கொண்ட, அசாதாரண மேட்டுக்குடி மக்களாகவே தங்களைக் கருதி இருந்தனர். அவர்கள் தங்களை முதலாம் தர முஸ்லிம்களாகவும் ஊரில் இருந்த ஏனையோரை இரண்டாம் தர முஸ்லிம்கள் போலவுமே கருதி வந்தார்கள்.

மொஹிதீன் அப்துல் காதர் எம்.பி.யாகும் வரை தலைவர் அஷ்ரப் மொஹிதீனின் இல்லத்தில் ஒரு நாள்கூடத் தங்கியதில்லை. மொஹிதீன் அப்துல் காதர் அரசியலில் நுழைவதை அவரது மாமனார் ஆரம்பத்தில் அனுமதிக்கவே இல்லை. நான்தான் மொஹிதீன் அப்துல் காதரின் மாமனாரிடத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து உரையாடி முடிவில் ஒருவாறு அவரை இணங்கச் செய்தேன்.

தற்போது அந்த ஹாஜியார் நம்மிடையே இல்லை. தன்னுடைய 65 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டு நான்கு ஆண்டுகள் படுக்கையில் கிடந்து இறைவனிடத்தில் மீண்டு சுமார் 26 ஆண்டுகளும் கடந்து விட்டன. தன்னுடைய சொந்தப் பிள்ளைகள் உட்பட ஊரில் இருந்த பிள்ளைகளையும் “புண்ணா, வாடா புண்ணா, போடா புண்ணா..” என்றுதான் கூப்பிடுவார், பேசுவார்.. என்ன அர்த்தத்தில் அந்த வார்த்தையை அவர் பாவித்து வந்தாரோ அவருக்கே வெளிச்சம். வல்ல அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக. அந்தக் குடும்பம் பற்றி நிறையச் சொல்ல வேண்டும். இந்த இடத்தில் விரிவாகச் சொல்ல முடியாது. அதை வேறொரு பதிவில் தனியாகச் சொல்கிறேன்.

அப்போதெல்லாம் கிழக்கில் அஷ்ரபின் தனிப் பெரும் தொண்டனாக, நபிகளாருக்கு ஓர் அபூபக்கர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் உற்ற தோழராகத் திகழ்ந்தது போல அஷ்ரபுக்குப் பின்னால் நான் தான் இருந்து வந்தேன்.

தலைவர் எங்கள் பகுதிக்கு வந்தால் மொஹிதீன் அப்துல் காதரின் வீட்டில் தங்கச் செல்ல மாட்டார், எனது வீட்டில்தான் தங்குவார். எனது வீட்டிலும் அப்போது மின்வசதி இருக்கவில்லை, குப்பி லாம்புதான் பாவனையில் இருந்தது. தலைவர் எனது வீட்டில் தங்க வரும் நாட்களில் அவருக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இரவு முழுவதும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து காற்று விசிறிக் கொண்டிருப்பேன்.
மொஹிதீன் அப்துல் காதர் எம்.பி.யான பிறகுதான் தலைவர் அவருடைய இல்லத்தில் தங்கச் செல்வார். இப்படித்தான் அந்த நாட்களில் எங்களுடைய நிலைமைகளும் உறவுகளும் இருந்தன.

தலைவர் அஷ்ரப் முஸ்லிம் அரசியலின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்ந்த அதேவேளை தன்னளவில் பாதகமான பெரும் குறைகளையும் கொண்டிருந்தார். அவற்றில் மிகப் பிரதானமானது, அஷ்ரப் முக்கியமான தீர்மானங்களைத் தானாகவே – தான் மட்டுமே எடுப்பார். இஸ்லாம் மிகவும் வலியுறுத்தும் கூட்டுக் கலந்தாலோசனை முறைமை (மஷூறா) அவரிடம் அறவே இருக்கவில்லை. ஆகக் குறைந்த பட்சம் தனக்கு மிக நெருக்கமான ஒரு சிலரோடுகூடக் கலந்தாலோசிக்க மாட்டார். அந்தப் பாரிய குறைபாட்டால் தனிப்பட்ட ரீதியில் அவரும் முஸ்லிம் சமூகமும் சந்தித்த இழப்புகளும் சிக்கல்களும் ஏராளம்.

அது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருந்த காலப்பகுதி. கட்சி பிழவுபட்டு உட்கட்சி மோதல் உச்சத்தில் இருந்தது. பொதுத் தேர்தலொன்றைச் சந்தித்து வெற்றி பெறலாம் எனும் நம்பிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது பிரேமதாசாவுக்கு.

அந்த நெருக்கடியான அரசியல் சூழலில் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானிக்கிறார் அஷ்ரப். அந்தத் தீர்மானத்தால் அவரும் முஸ்லிம் அரசியலும் பெரும் அவப் பெயருக்கு ஆளாக நேர்ந்தது. “சோனிகள் தொப்பி புரட்டிகள்” அதாவது கொள்கை இல்லாதவர்கள், சந்தர்ப்பவாதிகள் எனப் பெயர் வாங்கினோம்.

நாடு முழுவதும் பரவலாக அதிருப்திக்கு உள்ளாகியிருந்த அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை அஷ்ரப் ஏன் எடுத்தார் ? அதற்குப் பலமான பாரிய காரணங்கள் இருந்திருக்க வேண்டும் என்றுதானே எல்லோரும் நினைப்போம். உண்மையான நிலைமை என்னவென்றால் அத்தகைய முக்கியமான காரணங்களோ நியாயங்களோ ஏதுமிருக்கவில்லை. அதைச் சொல்லவே சங்கடமாக உள்ளது.

பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பாக உண்மையில் அஷ்ரப் சிறிமாவோ அம்மையாருக்கு ஆதரவளிக்கும் எண்ணத்தில்தான் இருந்தார். அதன் நிமித்தம் அந்த அம்மையாரைச் சந்தித்து உரையாட அஷ்ரப் ரொஸ்மீட் ப்ளேஸில் உள்ள அம்மையாரின் இல்லத்திற்குச் சென்றார். சென்ற வேளையில் சிறிமாவோ அம்மையாரின் புத்திரர் அனுர பண்டாரநாயக்கா அங்கு ஓர் ஆசனத்தில் காலுக்கு மேல் கால்போட்டு மிடுக்காக உட்கார்ந்திருந்தாராம். அஷ்ரபைக் கண்டதும் எழுந்து நின்று அஷ்ரபை வரவேற்று வாழ்த்துச் சொல்லவில்லையாம்.

அவர் அஷ்ரபைக் கண்டுகொள்ளவே இல்லையாம். அனுர பண்டாரநாயக்காவின் இந்தப் ‘புறக்கணிப்பு’ அஷ்ரபைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

போன விஷயத்தைச் சரியாகக் கதைத்துப் பொருத்தமான நல்லதொரு தீர்மானத்துக்கு வராமல் ‘சிறிமாவுக்கு ஆதரவளிப்பதில்லை’ என்று தனக்குள் அந்த இடத்திலேயே தீர்மானம் செய்துகொண்டு வந்துவிட்டார்.
அஷ்ரபின் இந்த நடத்தையை என்னவென்று சொல்வது ! சிறிமாவோவின் குடும்பம் என்ன, அவர்களது சமூக, அரசியல், பொருளாதார அந்தஸ்து என்ன ! சிறிமாவோ சோழர் பரம்பரையின் ஒரு செல்வச் சீமாட்டியான பேத்தியும் முன்னாள் பிரதமரும் ! அனுர பண்டாரநாயக்கா அந்தக் குடும்பத்தின் ஓர் இளவரசன் போன்றவர் ! அவருக்கும் அஷ்ரபுக்கும் என்னதான் ஒப்புவமை !

இந்த மாதிரியான சின்னப் புத்தியை வைத்துத்தானா மிக முக்கியமான அரசியல் தீர்மானங்களை எடுப்பது ? அஷ்ரபிடம் வளர்ந்திருந்த ஒருவித வரட்டுத்தனம் அவரைப் பல்வேறு தருணங்களில் தவறான முடிவுகளுக்குத் தள்ளிவிட்டுள்ளது !

ஆக, இந்தச் சின்னத்தனமான காரணத்தால்தான் சிறிமாவை விட்டுவிட்டு, பிரேமதாஸாவை ஆதரிக்கத் தீர்மானித்தார் அஷ்ரப்.

இதே போன்றதொரு தவறான முடிவை எடுத்து, தவறான ஒரு வசனத்தையும் பிரயோகித்தார் அஷ்ரப் சந்திரிக்கா ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இருந்தபோது.

அந்தத் தி(தெ)ருவசனம் தான் “சாரதி ஆசனத்தில் ரணில் உட்கார்ந்திருக்கும் வரை நான் ஒருபோதும் UNP Bus இல் ஏற மாட்டேன்!” என்பது.

பின்வந்த காலங்களில் இந்த வசனத்தை நமது ‘கிழக்கு ராஜ்ஜிய’த்தின் முஸ்லிம் அரசியல் குறுநில மன்னர்கள் ரணிலுக்கும் UNP க்கும் அவர்களோடு அணிசேரும் ஏனைய முஸ்லிம் தலைவர்களுக்கும் எதிராக ஏதோ குர்ஆன் – ஹதீஸ் வேத வசனம் போல தொடர்ந்து பாவித்து வந்தார்கள், இன்றும் பாவிக்கிறார்கள். குறிப்பாக அதாவுல்லாஹ் தன் அரசியல் வண்டியை இத்தனை காலமும் ஓட்டியதே இந்தவொரு வசனத்தை வைத்துக்கொண்டுதான்.

“ரணில் எம்.பி.யாக இல்லாத இந்த (2020) நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று புளகாங்கிதப்பட்டுப் பேசி வரிஷம் ரெண்டு போகேல்லை, அதே பாராளுமன்றத்தில் அதே ரணில் ஜனாதிபதி, அவரிடமிருந்து ஓர் அமைச்சுப் பதவி கிடைக்காதா என்று காத்திருந்து ஏமாறிய அதாவுல்லாஹ் எம்.பி.! அதுதான் அரசியல். அரசியலுக்குப் பெரும் எதிரிகள் கோபமும் பிடிவாதமும் ! அப்படிப் பார்த்தால் ரணிலுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்க வேண்டும் கடந்த 30 ஆண்டுகளாக !

ரணில் மீது அஷ்ரப் அவ்வளவு கடுமையான பகைமை பாராட்டும்படி என்னதான் நடந்தது அப்படி ?

சந்திரிக்கா அரசில் மொத்தப் பாராளுமன்றமும் ஏகோபித்துத் தீர்மானித்து ஓர் அரசியல் திட்ட வரைபைத் தயாரித்தனர். அதில் அஷ்ரபுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தில் அஷ்ரப் அந்த யாப்பு மசோதாவை முன்வைத்து உரையாற்ற எழுந்தவுடன் ரணில் அஷ்ரபைக் கணக்கில் எடுக்காமல் எழுந்து நாடாளுமன்றத்தை விட்டும் வெளியேறப் போனார்.

அப்போது அஷ்ரப் ரணிலை விளித்து “நீங்கள் இப்படி எழுந்து போவது சரியில்லை, என்னை நீங்கள் அவமதிப்பதாகத் தோன்றுகிறது” என்று சொல்லியுள்ளார்.

ரணில் இயல்பிலேயே முஸ்லிம்களை அவ்வளவு கணக்கில் எடுக்காத பேர்வழி, இப்படி அஷ்ரப் அவருக்குச் சொன்னால் ரணில் என்ன செய்வார் ? அஷ்ரபின் இந்த வார்த்தைகளுக்கும் எந்தப் பதிலும் சொல்லாமல் வெளியே போய்விட்டார். அஷ்ரப் கோபத்தின் உச்சத்தைத் தொட்டுவிட்டார். அப்போது அஷ்ரபுக்கு இறங்கிய வேத வசனம்தான் மேற்சொன்ன UNP Bus Ranil Driver….

இப்படித்தான் அஷ்ரப் தன் அரசியல் வாழ்வு நெடுகிலும் அவசரப் பட்டார், கோபப் பட்டார், எரிந்து வீழ்ந்தார், தீர்மானங்களை எடுத்தார்…

சரி, பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் முடிவைத்தான் அஷ்ரப் எடுத்து விட்டாரே, அந்த முடிவின் மூலமாகவேனும் மிகச் சரியான பலன்களை அடைந்தாரா ? அத்தகைய கோரிக்கைகள் எவற்றையேனும் புத்திசாலித்தனமாக முன்வைத்தாரா…?

இதற்கான விடைகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்…

பெஜிரோ ஜீப்பை விற்றுக் காசாக்கிய கதை இன்னும் வரலைன்னு ஞாபகம் வருதாக்கும் ஒங்களுக்கெல்லாம்…

சரி, சரி, அடுத்த பகுதியில் அதைக் கட்டாயம் சொல்லி விடுகிறேன் மக்காள்…

(தொடரும்…)