முற்றுப்பெற்றது அரசியல் நெருக்கடி

(விசு கருணாநிதி)

நாட்டில் சுமார் ஐம்பது நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடி முற்றுப்பெற்றுள்ளது. நாட்டு மக்கள் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதோடு, அரசியல் கொந்தளிப்பு தணிந்திருக்கிறது. தணிந்தது என்பதைவிட முற்றாகத் தீர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம்.நிறைவேற்றதிகாரமா, சட்டவாக்கமா, நீதித்துறையா? என்ற அதிகாரப் போட்டிக்குள் சிக்கித் தவித்த இலங்கை அரசியல் களம், சட்டவாக்கத்தின் உயரிய அதிகாரத்தை தெளிவுபடுத்திக்ெகாண்டு புதிய செல்நெறியில் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.

1978இல் ஜே.ஆர்.ஜயவர்தன உருவாக்கிய நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைக்ெகாண்ட அரசியலமைப்பில், ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, வேறு அத்தனையையும் நிறைவேற்ற முடியும் என்று சொல்லப்பட்டது. எனினும், அதில் சொல்லப்பட்ட அத்தனை அதிகாரங்களையும் எந்தவொரு ஜனாதிபதியும் முயற்சித்துப்பார்க்கவில்லை.

தேர்தல் வேண்டுமா, இல்லையா? என்பதை அறிய ஒரு சர்வஜன வாக்ெகடுப்பை ஜே.ஆர்.நடத்தினார். அவருக்குப் பின்னால் வந்த ஆர்.பிரேமதாச, டி.பீ.விஜேதுங்க ஆகியோரும் நிறைவேற்றதிகாரத்தைப் பிரயோகிக்கவில்லை. அவர்களுக்குப் பின்னர் பதவியேற்ற சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஓரளவிற்கு நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்தினார். அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் கலைத்தது அவர் பயன்படுத்திய அதி உச்ச நிறைவேற்றதிகாரம் என்று சொல்லலாம்.

அதனைத் தொடர்ந்துதான் நிறைவேற்றதிகார முறையை இல்லாதொழிப்பேன் என்று ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்குறுதியளித்து களமிறங்கினார்கள். பாராளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர வேறு என்னென்ன நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கின்றனவென்பதைத் தெரியாத நிலையிலேயே எல்லோரும் நிறைவேற்றதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். தனி நபரிடம் அதிகாரம் குவிந்து கிடப்பதை விரும்பவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறிப்பிட்டிருக்கிறார். அரசியலமைப்பு ஊடாக என்றாலும் அதனைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில், இலங்கை மக்களைப் பொறுத்தவரை அவர்கள் புத்திகூர்மை உடையவர்கள் என்பதைப் புத்திசாதுரியத்துடன் பொறுத்திருந்து புரியவைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால், ஒக்ேடாபர் 26ஆம் திகதி நடந்த ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து எழுந்த தேக்க நிலையை இந்தளவு பக்குவத்துடன் நகர்த்தியிருக்கமாட்டார்கள். வெளிநாடுகளில் இதுபோன்ற அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டால், வன்முறையில் தீர்வு எட்டப்பட்ட வரலாற்றையே தொடர்ந்து அவதானித்து வந்திருக்கின்றோம். அந்த வகையில் இலங்கையும் நாட்டு மக்களும் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமானவர்கள் என்பதை பறைசாற்றியிருக்கிறார்கள்.

மக்கள் மாத்திரமன்றி இந்தப் பெருமையில் அரசியல் கட்சிகளுக்கும் பங்கிருக்கத்தான் செய்கிறது. ஒக்ேடாபர் 26ஆம் திகதி அரசியலமைப்பில் உள்ள நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை மறு தரப்பினர் ஏற்க மறுத்தனர். அவர்கள் அதற்கெதிரான தமது போராட்டத்தை அரசியலமைப்பைக்ெகாண்டே முன்னெடுத்தனர். அது பாராளுமன்றமாக இருந்தாலும் நீதிமன்றமாக இருந்தாலும் இரு தரப்பினரும் தத்தமது அரசியல் பலத்தைச் சட்ட ரீதியாக நிரூபிக்கவே முயற்சிசெய்தார்கள். வேறு விதமாக நோக்கினால், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான மோதலில் கட்சி ஆதரவாளர்களும் பரஸ்பரம் மோதிக்ெகாள்ளும் அரசியல் கலாசாரம் ஒரு காலத்தில் நிலவியதையும் மறந்துவிட முடியாது. ஆனால், அவையெல்லாம், கடந்த கால சம்பவங்கள் மட்டுமே என்ற நிலையைத் தோற்றுவித்துத் தமது நெகிழ்வுப் போக்கிலான அரசியல் பாதையை கட்சி ஆதரவாளர்கள் வகுத்துக்ெகாண்டுள்ளார்கள். பட்டாசுகளைக் கொளுத்திப்போட்டுத் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இதற்குத் தேசிய அரசாங்கம் பதவியில் இருந்ததும், இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவிய கருத்தொற்றுமையும்கூடக் காரணமாகும். என்றாலும், மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டிய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் முஷ்டியை முறுக்கிக்ெகாண்ட சம்பவங்களால், சில அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டுகொள்ள வழியேற்பட்டிருக்கிறது என்கிறார்கள் அவதானிகள்.

அது மாத்திரமல்ல, அரசியல்வாதிகளின் தரத்தையும் பெறுமானத்தையும் எடைபோட்டுக்ெகாள்வதற்கான ஒரு வாய்ப்பினையையும் இந்த அரசியல் நெருக்கடி ஏற்படுத்திக்ெகாடுத்திருக்கிறது. அத்தோடு நின்றுவிடாமல், தமது நாட்டின் அரசியலமைப்பைப் புரட்டிப்பார்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் இந்த 50 நாள் காலகட்டம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக்ெகாடுத்திருக்கிறது. தனிமனித ஆளுமையில் தங்கியிருப்பதாகச் சொல்லப்படும் நிறைவேற்றதிகார அரசியலமைப்பில், அந்த அதிகாரம் குறைக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா? என்பதை அரசியல் தலைவர்களும் நாட்டு மக்களும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினையும் இந்த நெருக்கடியான காலம் வழியேற்படுத்திக்ெகாடுத்திருக்கிறது.

குறிப்பாக, பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தை வாசித்துப் பார்க்காதவர்கள் மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனைபேர் வாசித்தாலும், அத்தனைபேருக்கும் சந்தேகங்கள் களையப்பட முடியாதவையாகவே தொடர்ந்தது என்பதை மறுக்க முடியாது. ஏன், சட்டத்தரணிகள்கூட இந்தத் திருத்தச் சட்டத்தை இந்தக் காலகட்டத்தில்தான் தூசு தட்டியிருக்கிறார்கள்.

வாசித்து அதன் உள்ளார்த்தத்தைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியவர்கள், அதில் கோட்டைவிட்டதுதான் இதில் விந்தையானது!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவைப் பொறுத்தவரை, அவர் ஒரு ‘ஜென்டில்மன்’ (கனவான்) என்ற பெருமைக்குரியவர். தோல்விகளின்போது துவண்டுவிடாமல், ஏற்றுக்ெகாண்டு முன்னோக்கிச் செல்பவர். இதனைப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றியடைந்தபோது, பிரதமர் இல்லத்திலிருந்து உடனடியாக ‘சூட்கேசுடன்’ வெளியேறியவர். எந்தச் சந்தர்ப்பத்திலும் அடம்பிடித்தது கிடையாது. அப்படிபட்டவர், ஒக்ேடாபர் 26இற்குப் பின்னர் அலரிமாளிகையைவிட்டுச் செல்லவே இல்லை! இஃது ஏன்? என்ற கேள்வி அப்போது பலராலும் எழுப்பப்பட்டது. காரணமில்லாமல் அவர் தங்கியிருக்கமாட்டார் என்றார்கள் பலர். தாம் நீக்கப்பட்டது சட்டவிரோதமானது என்ற திடமான முடிவோடு அவர் இருந்ததுதான் அந்தப் பிடிவாதத்திற்குக் காரணம் என்பது நாட்செல்லச்செல்ல புரிந்துபோனது.

அதாவது பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அஃது அவ்வாறு இடம்பெறவில்லை என்றும் ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்குவதற்குச் சர்வஜன வாக்ெகடுப்பு நடத்தப்பட்ட வேண்டும் என்றும் 2002இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. எனவே, அதற்கமைவாகவே 33(2)சீ என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது என்றெல்லாம் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால்தான் மக்களுக்கும் பெருங்குழப்பம் ஏற்பட்டது.

எவ்வாறெனினும், ஜனாதிபதியின் முக்கால்வாசி அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதைத் தெளிவுபடுத்தி உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அனைத்துவித சந்தேகங்களுக்கும் முடிவுகட்டியிருக்கிறது. ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் இந்தத் தீர்ப்புக்குத் தலைவணங்கி அதற்கேற்ப செயற்படத் தொடங்கியுள்ளனர். இதை நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இதன்படி, இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை மீண்டும் ஏற்றுக்ெகாள்கிறார். அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தாம் பிரதமராகவும் பதவி வகித்துள்ளதைப் பதிவுசெய்யும் வகையில், நேற்று இராஜினாமா செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார். சட்ட வல்லுநர்களின் வாதத்தின்படி, திரு.ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை மீண்டும் ஏற்க வேண்டிய அவசியம் கிடையாது என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், ஜனாதிபதி நியமித்த இடைக்கால அரசாங்கத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடையை விதித்திருக்கிறது. அப்படியென்றால், புதிய பிரதமர் அதுபற்றிய தீர்ப்பிற்குப் பின்னரே நியமிக்கப்பட வேண்டும். அது மேலும் நிலைமையைச் சிக்கலாக்கும். ஆகவேதான், மகிந்த ராஜபக்‌ஷ ராஜினாமா செய்கிறார் என்று ஒரு தெளிவுபடுத்தலைத் தருகிறார் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன.

எஃது எப்படியோ, இன்று அமையும் புதிய அரசாங்கத்தின் உருவாக்கத்திற்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழங்கிய ஆதரவு முழு நாட்டிலும் சிலாகித்துப் பேசப்படுகிறது.

எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் அவர்கள் ஆற்றவேண்டிய பொறுப்புகள் ஏராளம். மறுபுறம், இலங்கை விடயத்தில் சர்வதேசம் இனித் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் இலங்கை நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாகத் தொழிற்படுகிறது என்ற செய்தியையும் உச்ச நீதிமன்றம் உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.

நிறைவாக ஒன்றைச் சொல்லவேண்டும், அதாவது, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்குத் தேர்தல் என்றே வழியென்று சொல்லப்பட்டது. ஆனால், இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியில், பொருளாதார ரீதியாகத் தேர்தலொன்றை இந்த நாடு தாங்குமா? என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தவர்களை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆசுவாசப்படுத்தியிருக்கிறது.