துரையப்பா கொலையும் வன்னி நோக்கிய பெயர்வும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவுநாளில் நிகழ்ந்த துயரங்கள் தமிழ் மக்களிடையே சீற்றத்தை உண்டுபண்ணின.  அரசாங்கம் நிகழ்வுக்குப் பொறுப்பேற்காததுடன் குற்றத்திற்குப் பொறுப்பானோரைத் தண்டிக்கவும் தவறியது. இது ஏற்கெனவே தரப்படுத்தலால் வெகுண்டிருந்த தமிழ் இளைஞர்களிடையே மேலும் சினத்தை மூட்டியது. இதைத் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ்த் தேசியவாத அரசியலும் அரசியல் வன்முறையும் வளர்க்கப்பட்டன.