புலிகளும் வசதியான புலி உறுப்பினர்களும்

1987ல் இந்தியப் படைகள் வருவதற்கு முன்னர் புலிகள் இயக்கத்தில் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளும், மேட்டுக்குடிகளும் இணைந்திருந்தனர். புலிகளின் கரும்புலிகள் இல்லாத காலத்தில் புலிகளின் மேல் மட்டத்தில் சரி கீழ் மட்டதில் தளபதிகளாகவும் இருந்தவர்கள் வசதியான குடும்பங்களில் இருந்து வந்தவர்களே அதிகம். பிரபாகரன் இந்தியப் படையினருடன் யுத்தம் ஆரம்பித்ததும் இந்த மேட்டுக்குடிகளைச் சேர்ந்தவர்களும், வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தப்பியோடி இந்தியாவுக்கும், கொழும்புக்கும் சென்று வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டனர். காரணம் அவர்கள் வெளிநாடு செல்லக்கூடிய வசதி படைத்தவர்களாக இருந்தனர்.

இந்தியப்படையுடன் புலிகள் யுத்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் அன்றைய பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் நட்பு மலர்ந்திருந்தது. இது பல புலி உறுப்பினர்களுக்கு தப்பியோடுவதற்கு வசதியாக இருந்தது. பல நூற்றுக் கணக்கான புலி உறுப்பினர்கள் புலி இயக்கத்திலிருந்து தருணம் பார்த்து விலகித் தப்பி வெளிநாடுகளுக்குச் சென்றார்கள். குறிப்பாகக் கிட்டுவின் சகாக்கள் தான் அதிகம். வடமராட்சியைச் சேர்ந்த பல புலிகளின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளிலிருந்துகொண்டு புலிகள் இயக்கத்திலிருந்த தமது சகோதரகளை வெளிநாடுகளுக்கு எடுத்துவிட்டனர்.

ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இயங்கியவர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று வாழக்கூடிய வசதி படைத்தவர்களாகவே இருந்தார்கள். முன்பு வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள். அரசியல் தலைவர்களைக் கொன்றவர்கள், இலங்கை அரசாங்கத்தால் தேடப்பட்ட பலர் இன்னும் வேறு இயக்கங்களில் இருந்தவர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். உரும்பிராய் பெற்றோல் நிலைய அதிபர் நடரஜாவைக் குண்டு வீசிக் கொன்றவர். தற்போது கனடாவில் இருக்கிறார். பிரபாகரனின் சகாவான ராகவன் மற்றும் அமிர்தலிங்கத்தின் புத்திரனும் இங்கிலாந்தில் குடியேறி இருக்கிறார்கள். இப்படி இன்னும் பலர் ஐரோப்பாவிலும் , கனடாவிலும் இருக்கிறார்கள். இவர்களையும் முன்னாள் போராளிகள் என்று அழைக்கலாம்.

இந்திய இராணுவம் வெளியேறிய பின் புலிகள் இயக்கத்தில் வசதி குறைந்தர்களின் பிள்ளைகளும், தழ்த்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகளுமே புலிகள் இயக்கத்தில் இணைந்தனர். குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தபோது குடாநாட்டைவிட்டு வெளியேற புலிகள் வயதுக் கட்டுப்பாடு விதித்தனர். இருந்தாலும் பணம் படைத்தவர்கள் புலிகளுக்கு கப்பம் செலுத்தி குடாநாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

1995ம் ஆண்டு அனுருத்ர ரத்வத்தை குடாநாட்டிலிருந்து புலிகளை வன்னிக்குள் துரத்தியபின் வன்னியில் வாழ்ந்துகொண்டிருந்த இந்திய வம்சாவளி மக்களின் பிள்ளைகளும், தாழ்த்தப்பட்ட, மற்றும் வசதிகுறைந்த வறிய மக்களின் பிள்ளைகளும் புலிகள் இயக்கத்தில் இணையவேண்டிய நிலையை புலிகள் ஏற்படுத்தினர். வன்னியிலிருந்து யாரும் இலகுவில் வெளியேற முடியாத நிலைக்கு வன்னி பிரபாகரனின் திறந்த வெளிச் சிறைச்சாலையாகிவிட்டது. புலிகளின் வயதுக் கட்டுப்பாடு கடுமையான அமுலில் இருந்தது. குடும்பங்கள் கூடத் தப்பிச் செல்ல முடியவில்லை. வெளியில் செல்பவர்கள் திரும்பி வரக்கூடிய நிபந்தனைகளின் பேரில்தான் புலிகளிடம் விசேட அனுமதி பெற்று வன்னியிலிருந்து வெளியில் சென்றுவந்தார்கள். அதுவும் குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக செல்ல அனுமதி இல்லை.

வன்னியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானோரின் பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார்கள்.. அந்தக் காலத்தில் வன்னிப்பகுதிகள் வாழ்ந்தவர்கள் தீவுப்ப குதிகளிலிருந்தும் குடாநாட்டிலிருந்து அங்கு விவசாயம் செய்யச் சென்றவர்களே அதிகம் , முல்லைத்தீவுப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் கடற்தொழிலுக்காக அங்கு சென்றவர்களே!

தென்னிலங்கையில் கலவரங்களில் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் வன்னிக்கு அகதிகளாக வந்து குடியேறினார்கள். இவர்கள் யாருக்கும் சொந்தக்காணிகள் இருக்கவில்லை. இவர்கள் குடாநாட்டில் குடியேற குடாநாட்டு மக்கள் அனுமதிக்கவில்லை. கிளிநொச்சி நகரப்பகுதிகளில் மட்டும் வசதியான மேட்டுக்குடிகள் சிலர் வாழ்ந்தார்கள். புலிகள் அங்கு கால் வைத்ததும் பலர் அங்கிருந்தும் வெளியேறிவிட்டார்கள். வறுமையயும், குடும்ப நிலமையும் புலிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்ப்புக்குச் சாதகமாகியது. வன்னியிலிருந்த அன்றாடம் காய்ச்சி இந்திய வம்சசவளி மக்களின் பிள்ளைகள் ஆயிரக்கணக்கானோர் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டனர்

வன்னியில் பிரபாகரனின் சர்வாதிகார ஆக்கிரமிப்பு முறியடிக்கப்பட்டு வன்னியில் சகஜ நிலை ஏற்பட்டதும் புனர் வாழ்வு பெற்று வெளியில் வந்த முன்னாள்ப் புலிகளுக்கு எதிர்காலம் பாதிக்கப்பட்டது. இருந்து சில முன்னாள்ப் புலிகள் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புடன் இருந்திருக்கின்றனர். ஆனால் இந்த இந்திய வம்சாவளிம் மக்களின் பிள்ளைகள் எப்படி வெளிநாடு செல்ல முடியும்.. அவர்களுக்கு வசதியும் இல்லை. வன்னியில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்களின் பிள்ளைகள் எத்தனை பேர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இந்த முன்னாள்ப் புலிகளுக்கு உதவ யாழ்ப்பாணத் தமிழரும் தயாராக இல்லை.

இன்று காட்டப்படும் முன்னாள் போராளிகள் என்பவர்களின் குடும்ப நிலைமைகளை நேரிலேயே பார்க்கும்போது இந்த நிலைமை ஒரு உண்மையை உணர்த்துகிறது. மாவீரர் நாளில் தங்கள் பிள்ளைகளின் கல்லறைகளின் முன்னால் கதறி அழுகின்ற பெற்றோர்களைப் பார்க்கும்போது அவர்களின் தோற்றம் அவர்கள் வசதி படைத்த மேட்டுக் குடியினரா? அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினரா? வறிய குடும்பத்தினரா? இந்திய வம்சாவளியினரா என்பதை ஊகிக்க முடியும். முள்ளிவாய்க்காலில் புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட மக்களைப் பார்த்தால் பிரபாகரனின் திறந்தவெளிச் சிறையான வன்னியில் இந்திய வம்சாவளி மக்களும், தாழ்த்தப்பட்ட வறிய மக்களும் என்ன கோலத்தில் இருந்தார்கள் என்று புரியும். அந்த மக்களின் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேறினால் பிரபாகரனின் இருப்புக்கு ஆபத்து. அவர்களின் குழந்தைகள் சிறுவயதிலேயே மூளைச்சலவை செய்யப்பட்டு புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டனர்.

தமிழினி தனது கல்வியைத் துறந்து புலிகள் இயக்கத்தில் இணைந்தவர். தமிழினி இறந்த பிறகுதான் தமிழினியின் குடும்ப நிலைமை பலருக்குத் தெரிந்தது. வறியவர்களினதும், தாழ்த்தப்பட்டவர்களினதும் பிள்ளைகள்தான் அதிகமாக புலிகள் இயக்கத்தில் இணைந்து தங்கள் எதிர்காலத்தை அழித்து தங்கள் பெற்றோர்களை மேலும் வறிய நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் .

இங்கேயுள்ள படங்களைப் பார்த்து இந்த முன்னாள் புலிகளினதும், மாவீரர்களினதும் குடும்ப சூழ்நிலையையும் அவர்களின் பின்னணியையும் ஊகித்துக் கொள்ளலாம்.

(Rahu Rahu Kathiravelu)