ரிஎன்ஏ புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்னே

ரிஎன்ஏ புதிய அரசியல் யாப்பு அம்சங்களை தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்னே நேற்று மே 8இல் றெய்னர்ஸ்லேனில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்தார். இச்சந்திப்பினை Non Residential Tamils of Sri Lanka – NRTSL ஏற்பாடு செய்திருந்தது.பாராளுமன்ற உறுப்பினரும் புதிய அரசியல் யாப்பு தயாரிப்புக்கு நிபுணத்துவ உதவியை வழங்கும் குழுவிற்கு பிரதம மந்திரியால் தலைவராக நியமிக்கப்பட்டவருமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ண இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பும் தேவையும் சவால்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கேள்வி நேரமும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இது தொடர்பில் தனது கருத்தை வெளியிட்ட ரிஎன்ஏ யுகே இன் தலைவர் டி ரட்ணசிங்கம் எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கும் நடைமுறைச் சாத்தியமானதற்கும் இடையே இடைவெளி உள்ளதாகவும் சாத்தியமானதை நோக்கி நாங்கள் நகரவேண்டும் அதற்கான முயற்சிகளை அனைவரும் எடுக்க முன்வரவேண்டும் என்றும் டி ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

மே 7 யாழில் இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) படுகொலை செய்யப்பட்ட தலைவர் சிறிசபாரட்ணத்தின் நினைவுநிகழ்வில் உரையாற்றிய அவ்வியக்கத்தின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தாவின் உரை தற்போதைய அரசாங்கத்தில் தங்களுக்கு உள்ள நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி இருந்தார். அண்மையில் லண்டன் வந்திருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் சித்தார்த்தனும் இந்நம்பிக்கையீனத்தை தெரிவித்து இருந்தார்.

இதன் அடிப்படையில் தற்போது உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பை அரசாங்கம் எவ்வளவுதுரம் அமூல்படுத்துவதற்கு முன்வரும் என்று தேசம்நெற் சார்பில் கேட்கப்பட்ட போது இதனை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றும் தற்போது அரசியல் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகள் புதிய அரசியல் யாப்பில் அடக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை அழுல்படுத்துவதற்கான சூழலும் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பில் உள்ள யுனிற்றரி, பெடரல் போன்ற குறியீட்டு அம்சங்களுக்காக முரண்பட்டுக்கொள்ளாமல் உள்ளடக்கத்தை கவனிக்க வேண்டும் என்பதை கலாநிதி ஜெயம்பதி தெரிவித்தார். இக்குறியீடுகள் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கலாநிதி ஜெயம்பதி சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு அரசியல் யாப்பும் பிரிவினை வாதத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் என்ற உறுதியை வழங்க முடியாது எனத் தெரிவித்த கலாநிதி ஜெயம்பதி அதிகாரத்தை உள்ளாட்சி வரை பகிர்ந்துகொள்வது மட்டுமே நியாயமான செயல் எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் புதிய அரசயல் யாப்பு மத்தியில் உள்ள அரசியல் அதிகாரத்தை மாநிலங்களுக்கும் பிரதிசெய்யும் என்றும் கவனர்களின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். மேலும் மாநிலங்கள் தங்கள் அதிகாரங்களை உள்ளாட்சிப் பகுதிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் அதுவே நியாயமானதாக அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை முக்கியமானதும் இலங்கை அரசுக்கு சர்ச்சைகு உரியதுமான வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித் கலாநிதி ஜெயம்பதி புதிய அரசியல் யாப்பில் வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை என்றும் ஆனால் மாநிலங்கள் விரும்பினால் இணைந்து செய்ற்படுவதற்கு தடை இல்லை என்றும் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பது பற்றி குறிப்பிடுகையில் முஸ்லீம் மக்களுடன் தொடர்ச்சியான நல்லுறவூடாகவே இது சாத்தியப்படவாம் எனத் தெரிவித்தார். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியிலும் கணிசமான பிரிவினர் வடக்குடன் இணைவதை விரும்புவார்களா என்பதும் கேள்விக்குறியே.

எல்லாம் அல்லது இல்லை என்ற நிலையை கைவிட்டு தற்போது எது சாத்தியமானதோ அதனை ஏற்றுக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை கலாநிதி ஜெயம்பதி அங்கு குறிப்பிட்டார். இந்த சந்தர்ப்பம் தவறவிடப்பட்டால் இன்னும் 25 ஆண்டுகளுக்கு எதனையும் எட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது என்றும் கலாநிதி ஜெயம்பதி அங்கு எச்சரித்தார்.

கலாநிதி ஜெயம்பதி முன்வைத்த புதிய அரசியல் யாப்பு அம்சங்களை வரவேற்பதாகக் குறிப்பிட்ட தமிழ் ரைம்ஸ ஆசிரியர் பி ராஜநாயகம் நடைமுறைச்சாத்தியமானதை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கலை இலக்கிய விமர்சகர் மு நித்தியானந்தன் புதிய அரசியல் யாப்பு மலையகத் தமிழர்களை தேசிய சிறுபான்மை இனமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

காலத்திற்குக் காலம் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அலை ஏற்படும் என்றும் சிறிது காலம் மனித உரிமைகள் காலமாக இருந்தது, சிறிது காலம் போர்க்குற்ற விசாரணைக் காலமாக இருந்தது, இனப்படுகொலை காலமாக இருந்தது இப்போது அரசியல் யாப்பு காலம் என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார் தமிழர் தகவல் நடுவத்தின் தலைவர் வி வரதகுமார்.

கலாநிதி ஜெயம்பதி லங்கா சமசமாஜக் கட்சி இடதுசாரி பாரம்பரியத்துக்கூடாக வந்தவர் அவரின் தலைமையில் உருவாக்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பு முன்மொழிவுகள் முற்போக்கானவையாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இம்முன்மொழிவுகள் எவ்வளவுது}ரம் ஆட்சியாளர்களால் உள்வாங்கப்படும் என்பது கலாநிதி ஜெயம்பதியின் எல்லைக்கு அப்பாற்பட்டது.

இதே போன்று இடதுசாரி பாரம்பரியத்தில் வந்த திஸ்ச விதாரணவின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு (எபிஆர்சி) முன்வைத்த முன்மொழிவுகளை அப்போதைய அரசு நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை தற்போது ஆட்சியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது என்பதை கலாநிதி ஜெயம்பதி அங்கு சுட்டிக்காட்டினார். அவர் இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா தனது 2ம் தவணைப் பதவியை ஓராண்டில் முடிவுக்கு கொண்டுவர முன்வந்த போதும் ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவை வழங்கவில்லை. சுதந்திரக் கட்சி முழுமையாக ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியைத் தொடர்ந்தால் யூஎன்பி இல் இருந்து 16 பேர் வரை கட்சிதாவி தங்களிடம் வருவார்கள் என சுதந்திரக் கட்சியினர் நம்பினர். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி சந்திரிகாவின் தீர்வுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் கலாநிதி ஜெயம்பதி தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏன் அப்போது இம்முடிவுக்கு வந்தது என தேசம்நெற் சார்பில் கேட்ட போது இரா சம்பந்தன் தீர்வுத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவாகவே இருந்தார் எனக் குறிப்பிட்டார் கலாநிதி ஜெயம்பதி. ஆனால் கட்சியில் இருந்த கடும் போக்காளர்கள் அதற்கு எதிராக இருந்தனர் என்றும் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய இரா சம்பந்தன் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இரண்டு வாக்குகளே குறைவாக இருந்தால் தானும் ரவிராஜம் வந்து வாக்களிப்பதாக உறுதி அளித்ததாகவும் கலாநிதி ஜெயம்பதி தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

கலாநிதி ஜெயம்பதியின் முன்மொழிவுகள் பற்றி கருத்துவெளியிட்ட மருத்துவர் பாலா யுனிற்றரி – பெடரல் போன்ற குறியீடுகள் பற்றிய தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் இனங்களிடையே நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.