புலம் பெயர் தேசங்களில் இந்திய மாணவர்கள்

பிரபல அமெரிக்க இதழ் ‘டைம்’ தன் இணையத்தளத்தில் “எப்படி ஹிந்து தேசியவாதிகள் வரலாறை முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாக்குகிறார்கள்?” என்ற ஆட்ரி ட்ருஷ்க்கேவின் கட்டுரை ஒன்றை அக்டோபர் ஆறாம் தேதி வெளியிட்டிருந்தது தற்செயலாகக் கண்ணில் பட்டது.

கட்டுரையை விட்டுவிட்டு – யார் இந்த ஆட்ரி ட்ருஷ்க்கே என்று தேடப்போனபோது – அதிர்ச்சிச் சேதிகள் இணையத்தில் தட்டுப்பட்டன.
நியூ ஜெர்ஸியிலுள்ள ரட்ஜர் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய வரலாற்றுப் பேராசிரியர் ஆட்ரி ட்ருஷ்க்கே. வரலாற்று ஆய்வாளர், மொகலாயர் ஆட்சி குறித்த விரிந்த ஆய்வில் ஈடுபட்டவர். இந்திய சமூகத்தின் மொழி வரலாறு பண்பாடுகள் குறித்த ஆய்வில் மூன்று முக்கியப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

எப்படி உண்மையைச் சொல்லலாமென்று இவரைப் படாத பாடு படுத்தியிருக்கிறார்கள் – மாணவர்கள் என்ற போர்வையில் – ஹிந்து அடிப்படைவாத வெறியர்கள். அவர் செல்லும் கருத்தரங்கங்களுக்குச் சென்று கலாட்டா செய்வது – சமூக வலைத்தளங்களில் மிரட்டுவது – அவர்களின் வழக்கமான ஸ்டைலில் “எங்கள் கடவுள் ராமனை இழிவுபடுத்தினார்” என்று அவதூறு பரப்புவது – அவர் குடும்பத்தாரை அச்சுறுத்துவது என்று பலான வேலைகளில் வருடக்கணக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் பல்கலைக்கழகமும் கல்வியாளர்களும் உறுதியாக ஆட்ரி பக்கம் நின்றிருக்கிறார்கள் என்பது ஆறுதல்.

என்ன எது என்று பேராசிரியர் ஆட்ரி ட்ருஷ்க்கேவை கேரவன் இதழ் பேட்டி கண்டிருக்கிறது.

ஆட்ரி ட்ருஷ்க்கே சொல்வதைக்
கொஞ்சம் கேளுங்கள் :

“ஹிந்து தேசியவாத குழுக்கள் அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்து தீவிரமயமாக்க முயற்சிப்பது ஊரறிந்த விஷயம். நமது நியூ ஜெர்சியில் சகிப்பின்மை மற்றும் வெறுப்பு பரவுவதைப் பற்றி கவலைப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட உரிய அதிகாரிகளுக்கு இது குறித்து நான் அறிந்த தகவல்களை வழங்கியிருக்கிறேன்.

ஹிந்துத்துவாவுக்கு ஆதரவாக வாதிடுபவர்கள் – எப்போதும் தங்கள் சித்தாந்தத்தை ஊக்குவிக்க வன்முறை – அச்சுறுத்தல் – தாக்குதல்களை நம்பியிருக்கிறார்கள். ஒரு ஹிந்து அடிப்படைவாதி மகாத்மா காந்தியைப் படுகொலை செய்தான். மோடியின் இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை ஹிந்துத்துவா இன்று முனைப்புடன் விரைவுபடுத்துகிறது.

ஒரு பெண்ணாக, ஹிந்துத்துவாவின் பெண் வெறுப்புக்கு – நம் சமூகத்தில் பரவலாகப் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக நான் செயலாற்றுவதால் – கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகிறேன்.
என்போன்ற நிலைமையில் – தாக்குதல்களுக்கு ஆளாகும் – ஹிந்துத்துவ அடிப்படைவாதத்துக்கு எதிராக நிற்கும் ஹிந்துக்கள் உட்பட பல இந்தியப் பெண்களுடன் நான் ஒற்றுமையாக நிற்கிறேன்.

இந்து வலதுசாரிகளால் என்னுடன் விவாதிக்க முடியாது. அவர்கள் கல்விசார்ந்த அறிவுசார்ந்த விவாதங்களில் ஈடுபட மறுக்கிறார்கள், விமர்சன சிந்தனையை அவர்கள் நிராகரிக்கிறார்கள். அது அவர்களை மதவெறி மற்றும் அவதூறுக்கு இட்டுச்செல்கிறது.

அவர்கள் என்னை மிரட்டி அச்சமூட்டினார்கள். கடந்த பல நாள்கள் பயங்கரமாகவும் திகிலூட்டுவதாகவும் இருந்தன. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வெறுக்கத்தக்க ஆபாசமான அச்சமூட்டும் செய்திகளை நான் அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறேன்,
அவை பைத்தியக்காரத்தனமானவை; மதவெறி கொண்டவை; வன்முறையானவை. என் மோசமான எதிரிக்குக்கூட இந்த மாதிரி அனுபவம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

இத்தகைய தாக்குதல் எவரையும் நிலைகுலையச்செய்யும். என்னை பயமுறுத்துவது – பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்தில் அவர்கள் வெற்றியடைந்தார்கள் என்றே சொல்வேன். அவர்கள் எந்த மாதிரி ஆட்கள் என்று புரிந்துகொண்டேன்.

முதலில் என்னைத் தாக்குவதன் மூலம், தெற்காசிய வரலாற்றாளர்களை கல்வியாளர்களை அவர்கள் எச்சரிக்க முயற்சிக்கிறார்கள்.
ஹிந்து வலதுசாரிகள் இன்று முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நடத்தும் அடக்குமுறை மற்றும் வன்முறையை நியாயப்படுத்தும் முயற்சியில் மொகலாய வரலாற்றை திருத்தி எழுத முயற்சிக்கிறார்கள். உண்மையைச் சொல்வதால் என்மீது பாய்கிறார்கள்.

ஹிந்து தேசியவாதிகள் கடந்த காலத்தில் நடந்த அட்டூழியங்களைக் கண்டுபிடித்து, தப்பெண்ணங்களை மீண்டும் மீண்டும் நிறுவுவதன்மூலம் = தங்கள் நியாயத்தை நிலைநாட்டப் பார்க்கிறார்கள்.

வரலாற்றாசிரியர்கள் கடந்த காலத்தைப் பற்றி பொய் சொல்லமுடியாது. இது ஹிந்து தேசியவாத திட்டத்திற்கு எதிராக எங்களை நிப்பாட்டுகிறது.
கடந்த பதினைந்து வருடங்களாக ஐந்து பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கணக்கான ஹிந்து மாணவர்களுக்கு நான் கற்பித்திருக்கிறேன்.

ஆனால் தனிப்பட்ட யாரும் ஒரு மாணவரும் எனக்கு எதிராக புகார் சொன்னதில்லை. ‘ஹிந்து ஆன் கேம்பஸ்’ Hindu On Campus என்ற பெயரில் என்னை அச்சுறுத்துபவர்களின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

மோடி காலத்தில் வரலாறு இந்தியாவில் ஒரு போர்க்களமாக மாற்றப்பட்டுவிட்டது என்று நீங்கள் கேட்பதற்கு என் பதில் இதுதான் – வரலாறுகளை வாட்ஸாப்புகளிலும் ட்வீட்டர்களிலும் ஆதாரமற்ற சமூக வலைத்தளங்களிலும் அல்ல, மாணவர்கள் வகுப்பறைகளில் வரலாறைப் பயிலவேண்டும் என்று நான் உறுதியாகச் சொல்வேன்!”