மன்னிப்பு கேட்காத ராகுல் காந்தி சிறையிற்கு சென்றாலும் இந்திய மக்களின் மனங்களிலும் வாழ்வார்

சிறையில் இருந்த போது தனது மகள் இந்திரா பிரியதர்சினியிற்கு எழுதிய கடிதங்களே உலகிற்கு சிறந்து ஆளுமையுள்ள இந்தியப் பிரதமர் இந்திரா ஐ எமக்கும் கொடுத்தது.

நேருவின் சுதந்திரத்திற்கு பின்னரான இந்திய பிரதமர் பதவிதான் உலகத்தின் மகத்தான அணிசேராக் கொள்கையாளராக்கி பின்பு சோசலிச சோவியத்தின் நண்பராக வாழ வைதத்து.

அது இன்று வரை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை பல தேசிய இனங்களையும், மொழிகளையும், மத நம்பிக்கைகளையும் இணைத்துப் பயணப்பட வைத்திருக்கின்றது.

அது மாத்திரம் அல்ல யுத்தம் புரிந்த சீனாவையும் இன்றுவரை முறுகல் நிலையில் உள்ள பாகிஸ்தானையும் அருகருகே வைத்திருந்து கொண்டு ‘நட்பு’ பாராட்டும் அளவிற்கும் வளர்த்திருக்கின்றது.

கூடவே உள்நாட்டில் உருவாக்கிய பல்வேறு ஐந்து ஆண்டு திட்டங்கள்தான் இன்று ஒரு வருடத்திற்கும் மேலான உணவுத் தானியங்களை வருடா வருடம் நாட்டின் சேமிப்பில் வைத்திருக்கும் உற்பத்தியையும் உருவாக்கியது.

அம்தேக்கார் என்ற சமூக நீதி பேசும் விளம்பு நிலை மக்களின் தலவனை இந்தியாவின் அரசியல் யாப்பையும் எழுதவும் வைத்தது.

அதனால்தான இன்றுவரை இந்திய அரசியல் அமைப்பை யாராலும் தூக்கி கடாசிவிட்டு செயற்பட முடியாத அளவிற்கு தற்போதைய பாஜக அரசிற்கும் கடிவாளம் போட வைத்தது.

இந்திய அரசியல் அமைப்பிற்கு ஏற்பட்டுவரும் அபாயங்களில் இருந்து இந்திய தேசத்தைக் காப்பாற்றும் போராட்ட அரசியல் வாழ்வில் பயணப்படும் ராகுலின் செயற்பாடுகள்.

அது பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் என்று விரிந்திருப்பது தற்போதைய பாஜக அரசிற்கு பெரிய இடைஞ்சலாக உள்ளது.

பால்குடிக் குழந்தை என்பதாக ‘பப்பு’ என்று விழித்து ஒதுக்கியதை தள்ளி வைத்துவிட்டு நரைதாடியுடன் இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் ஒரு யாசகர் போல் மக்கள் தொண்டனாக அவதாரம் எடுத்த அவரின் நடைப்பயணம் தற்போதைய அரசியல் ஜனநாயக விரோத ஏகபோக செயற்பாட்டிற்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதன் செயல் வடிவம்தான் தூசி தட்டு எடுக்கப்பட்டு அவசரக் கோலத்தில் அவர்களின் மாநில நீதிமன்றத்தில் வசதியாக தீர்ப்பை வழங்கி சிறையில் அடைத்தல், பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் காலி செய்தல், தேர்தலில் பங்கு பற்ற முடியாது என்ற முடிவையையும் கொடுத்திருக்கின்றது.

குஜராத் மாடல் என்பது ஒரு கொலைகார மாடல் என்பதை சர்வதேசம் உரக்கச் சொல்லியதை மோடியினால் ஜீரணிக்க முடியவில்லை.

மறுதலித்து சர்வேதேச நீதி மன்றங்களில் அதனை வெளியிட்ட ஊடகத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடியவில்லை.

அவர் பேசியதை… செய்தவற்றை…. அது அம்பலப்படுத்தி ஆவணப்படுத்தியருந்தது.

அதனை பாராளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் நரைத் தாடியான (சோல்ற் அன்ட் பெப்பர்) (Salt and Pepper) தாடியுடன் சொல்ல முற்பட்ட ராகுல் காந்தியின் வார்த்தைகளை பாசிசத்தினால் பொறுக்க முடியவில்லை.

அம்பானிகளிடம் நாட்டை விற்கும் செயற்பாடுகளை சர்வதேசம் அம்பலப்படுத்தி பங்குச் சந்தை சரிந்ததை தனது உற்ற நண்பனுக்கு ஏற்பட்ட இழப்பை தனது இழப்பாக கருதும் மோடி பரிவாரங்களினால் கடந்து போக முடியவில்லை.

இது பற்றிய விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்களுக்கு பாராளுமன்றத்தில் நேரம் ஒதுக்க தயாராக இல்லை.

இதனையும் மீறி யாராவது கருத்து தெரிவித்தால் அவற்றை அவைக் குறிப்பில் இருந்து அகற்றும் அரசியல் அமைப்புச் சட்ட விரோத செயற்பாட்டை செய்தும் வருகின்றது.

இவற்றையெல்லாம் கேள்வி கேட்பவரை ‘….மன்னிப்பு கேளுங்கள் வழக்கில் இருந்து விடுவிக்கின்றோம்….’ என்பதை ராகுல் காந்தி மறுதலித்தார்.

பிறகு என்ன..? சிறை, தடை என்று ஜனநாயகம் தனது பாசிச கண்களைத் திறந்து நிற்கின்றது.

இதே மாதிரியான அரசியல் பழி வாங்கலாக இலங்கையில் ஜேஆர் ஜெயவர்த்தனா திருமதி சிறிமாவோ பண்டார நாயக்காவின் மீது குடியுரிமை பறிப்பு என்றாக 1977 இல் செய்தார் அதன் தொடர்ச்சிகளை இலங்கை நாடு இன்று வரை அனுபவிக்கின்றது என்பதை இவ்விடத்தில் குறிப்பிடுவது சாலச் சிறந்ததாக உணர்கின்றேன்.

கேரளத்து நாராயண குரு சிந்தனைகளும், தமிழகத்து பெரியார் சிந்தனைகளையும் மக்ளை விழிப்படைவில் வைத்திருப்பதினாலே பா.ஜ.கா வின் மத அரசியல் பாசிச செயற்பாடுகள் இங்கு அதிகம் வேக முடியவில்லை.

இந்த நிலமை குஜராத்தில் இல்லை. கொன்றவர்களை கொண்டாடுங்கள் என்ற மனிநிலையில் உருவானதுதான் குஜராத் மனநிலை.

முழு மக்களும் அல்ல…. தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் அளவிற்கான மக்கள் தொகையினரே அவ்வாறு உள்ளனர்.

அதன் உச்சமாக இன்று இரு வருடச் சிறை, அதன் பின்பு ஆறு வருடம் தேர்தலில் பங்கு பற்றுவதற்கு தடை என்ற ராகுல் இன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இரண்டாயிரம் கிலோ மீற்றருக்கு மேலான நடைப்பயணமும் மக்களைச் சந்தித்ததும் அவருக்கு கிடைத்த ஆதரவும்… காரணமாகி நிற்கின்றது

ஏக தலைவன் நான் நினைத்ததை செய்வேன் ஒரு மதம் ஒரே மொழி ஓரே நாடு என்று பல மாநிலங்களை இணைத்த ஒன்றியமாக இந்தியா இருத்தலை மறுதலித்த மோடியின் பழிவாங்கல்கள்.

27 வருடங்களாக சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா ‘மன்னிப்பு கேட்க மாட்டேன்….’ என்ற அவரின் மக்களுக்கான பிடிவாதமான போராட்டம்தான் அவரை பெரும் தலைவராக ஆக்கியது.

அதன் வழியில் ராகுலின் பயணம் தொடரும்…. தொடர வேண்டும்.

அதுவரை அதிகாரத்தில் உள்ள தலைவராக..? பிரியங்கா இருப்பதற்கான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்…. பாதை யாத்திரை போக வேண்டும்.

வேண்டுமானால் தனது சகோதரனின் காலணிகளை அணிந்து கொள்ளட்டும் பயணத்தின்போது.

இது குடும்ப அரசியலா…? என்றால் ஒரு குடும்பத்தில் உள்ள பலர் ஒரே கொள்கையில் அது மதச் சார்பின்மை மத நல்லிணக்கம் அனைவருக்குமான வாழ்வு என்று புறப்படுவது பயணப்படுவது பிழையா என்றால் இல்லை என்பதே பதில்.

மன்மோகன் சிங், நரசிம்மராவ் என்று அவரது கட்சியில் நேரு குடும்பத்தில் இல்லாதவர்கள் பிரமமர்களாக தமது ஆட்சிக் காலத்தை முடித்தவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தற்போது நேரு குடும்பத்தில் இல்லாதவ ஒருவர் மல்லிகா கார்கே தான் தலைவராக இருக்கின்றார்.

ராகுல் இதுவரை தன்னை பிரதம வேட்பாளராக முன்நிறுத்தவில்லை.

மாறாக இந்திய தேசத்தை ஒருக்கிணைப்பது என்று சகலருக்குமான இந்தியா என்ற தனது அரசியல் பயணத்தைதான் அதிகம் மேற்கொண்டார்.

பகவத் சிங்கை தூக்கில் இட்ட அதே தினத்தில்தான் ராகுல் இற்கு சிறைத் தண்டனை என்ற தீர்ப்பும் வந்திருக்கின்றது.

பகவத் சிங்கிற்கான தூக்குதண்டனை இந்திய இளைஞர்கள் மத்தியில் அன்றைய காலகட்டத்தில் ஏற்படுத்தி எழுச்சியை மகாத்மா காந்தி இந்திய மக்களை ஒருகிணைத்து தேச விடுதலையை பிரித்தானிய அதிகார வர்க்கத்திடம் இருந்து பெறுவதற்கு ஆதாரமாக பாவித்தார்.

அதே போல் ராகுல் இன் சிறைத் தண்டனையும், அவருக்கான பேசும் உரிமை மறுக்கும் தேர்தலில் பங்கு பற்ற தடை விதிப்பது பாராளுமன்றத்திற்குள் நுளைவதை தடுக்கும் தடையும் ஒரு எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்.

இந்த எழுச்சி அண்மைய காலத்தில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் ராகுல் ஏற்படுத்திய உணர்வலைகளை விட அதிகமாக இருத்தல் வேண்டும்… இருக்கும்…

இதற்கான போராட்டங்களில் எனைய தலைவர்கள் வீதிக்கு வந்தாக வேண்டும் மக்களை இணைத்தாக வேண்டும்.

அது காங்கிரஸ் என்ற கட்சியிற்கு அப்பால் அனைவரும் என்பதாக தமிழ் நாட்டு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் போல் செயற்பட்டாக வேண்டும்.

அன்றேல் இன்னொரு நாள் இதே பாசிசம் உங்கள் கதவை தட்டும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

இந்தியாவின் அடையாளமாக மதச் சார்பின்மை பல தேசிய இனங்களின் ஒன்றியமான ஜனநாயக நாடு என்றவாறு இது நகர்ந்தாக வேண்டும்.

இது இந்தியாவிற்கு அப்பால் உலகத்தின் வாழ்விற்கு அவசியமானது.

பூகோள அரசிலில் இன்றைய நிலைமையில் இந்தியாதான் எமக்கு வேண்டும் என்ற அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் நாடுகள், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் தற்போதைய நிலமையில் ராகுலுக்கு எதிரான பாஜக அரசின் செயற்பாட்டில் இவை அதிகம் மௌனமாக இருக்கவே செய்வர்…?

ஆளும் இந்தியாவின் அரசுடனான உறவு தேவையாக உள்ள சூழல் இதற்கான மட்டுப்படுத்தல்களை செய்திருக்கின்றது.

இன்று ஏற்பட்டிருக்கும் புதிய சூழல் பாஜக என்ற பாசி அரசின் வீழ்ச்சியிற்கான பயணத்தை வேகப்படுத்தியிருப்பதாகவே உணரப்படுகின்றது.