கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும்:– அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 01

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

மெலிஞ்சிமுனை நோக்கிய பயணம்:

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் விருது வழங்கல் (யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபம்), மண்டைதீவு கண்டல் காடு ஒதுக்கு கள விஜயம், பறவை ஆய்வுகள், யாழ்ப்பாணம் கொக்குவில் ராமகிருஸ்ண வித்தியாசாலையில், எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் அமைப்பின் சர்வதேச ஈரநிலக் கொண்டாட்டம், பரிசளிப்பு விழா, பலாலி வீதி, கோண்டாவில் எழுதிரள் பணிமனையில் சூழலியல்சார்ந்த செயற்பாடுகளின் கலந்துரையாடல், மற்றும் நண்பர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் என பல சந்திப்பும், உரையாடல்களுக்கும் பிறகு, ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனை செல்வதற்காக நண்பர்கள், சத்தியனும், வசிகரனும் யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு காரில் ஏற்றிக்கொண்டுவிட்டார்கள். சத்தியன் பஸ் நடாத்துனருடன் என்னை எங்கே இறக்கி விடவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்ததுடன், நான் இறங்கும் இடத்தில் என்னை அழைத்துச் செல்பவரையும், நடாத்துனரையும் தொலைபேசியில் தொடர்பாக்கி விட்டிருந்தார். நான் இறக்கி விடுகிறேன் என்றார் நடாத்துனர்.