கத்தர்

அக்காலகட்டத்தில் –
இந்தியாவின் கம்யூனிஸ்டு கட்சி நடவடிக்கைகளால் சோர்ந்திருந்த இளைஞர்களை மட்டுமல்ல –
புதிய புரட்சிகர சிந்தனைகளை
வரித்துக்கொண்ட இளைஞர்களையும் –
அதிதீவிர இடதுசாரி சிந்தனைகளைக் கொண்ட அமைப்புகள் ஈர்த்தன.

புதிய கலாச்சாரம், மக்கள் கலாச்சாரம்
போன்ற இதழ்கள் குறிப்பிட்ட பகுதி இளைஞர்களால் பரவலாக வாசிக்கப்பட்டன.
சுட்டி என்றொரு பத்திரிகை
நினைவிலிருக்கிறதா?

ஒரு சிகரெட் பெட்டியை இரண்டாகப் பிரித்தால் எவ்வளவு அளவோ, அவ்வளவு அளவில் –
குட்டியாக வெளிவந்த சுட்டி செய்த வாசிப்பு மாயம் அசாத்தியம்.
கவிஞர் கோமகன் நாய்வால் நடத்தி –
சிரிக்கவைத்து செம்படை சேர்க்கலாம்
என்று முயன்றார்.

போன்றே,
நாடெங்கும் ஏராளமான சிற்றிதழ்கள்,
பாடல் ஒலிநாடாகள், பிரசுரங்கள்,
கேலிச்சித்திரங்கள்….
அதேபோழ்துகளில்தான் இவர்களிடை –
கும்மாடி விட்டல் ராவ் என்கிற தோழர்,
கத்தராக உயிர்த்திருந்தார்.

நான் சார்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
இளைஞர் மத்தியிலும் கத்தர் – ஒரு புரட்சிக்கார கந்தர்வனாக மிளிர்ந்தார்.
தெலுகு அவர் மொழி என்பதால் –
ஆந்திரத்தில் அவர் கொடி உயரே பறந்தது.

தத்தம் உரிமைக் குரல்களை
இவரின் எளியப் பாடல்களின் வழியே உணர்ந்து, உயர்த்தி ஒலித்தது சனக்கூட்டம்.
ஒரி ரிக்ஷா, மா பூமி , ஜெய் போலோ தெலங்கானா – சினிமாகளில் இவர் பாடல்கள் எதிரொலித்தன.

அதிதீவிரவாதம் எந்தக் கொள்கை பற்றியதாயிருந்தாலும் – நடைமுறைப்படுத்தலிலும்-அல்லது, புறச்சூழல்களாலும் – பெரும்பாலும் நீர்த்துப்போய்விடுவதைத்தான் –
வாழ்நாள் அனுபவமாகப் பார்த்திருக்கிறேன்.

ஒன்று, யதார்த்தத்தை ஏற்கமுடியாமல்,
நொந்து நூலாகித் தேங்கி வீழ்வான்.
அல்லது எதிர்மறை சக்திகளில் சகதிகளில்
போய் மாட்டிக்கொண்டுவிடுவான்.

கத்தரின் அதிதீவிரப் புரட்சி,
அவர் நம்பியிருந்த அமைப்புகளின்
தேய்மானத்தோடு உள்ளொடுங்கியது.
தனித் தெலங்கானா என்றார்.
நவ தெலங்கானா பிரஜா கட்சி உறுப்பினர் என்றார்.

இந்தியாவில் மார்க்சிய வர்க்கப்போராட்டம்
போதாமை கொண்டது; சாதியப் போராட்டமும் வேண்டும் என்றார். பிறகு –
தன்னை ஓர் அம்பேத்கரிஸ்ட் என்றார்.
பின்னாளில் இந்துத்துவ வலதுசாரிகளோடு
கூடா நட்பும் நிகழ்ந்தது என்கிறார்கள்.

துப்பாக்கிச்சூட்டில் தப்பிப்பிழைத்து –
ஒரு குண்டு உடலில் தங்கிவிட்ட நிலையில்,
தன் இறுதிநாள்களில் – மேலும் பல உடற்சிக்கல்களுக்கும், மன அழுத்தங்களுக்கும் ஆளானார் கத்தர்.
தன் வாழ்நாள் பாதை,
இலட்சியக் கனவுகளுக்கான கொள்கை –
இவற்றில் முற்றிலும் தோல்வியடைந்த மனோபாவத்தால் – அவர் அலைக்கழிந்து கேள்விகளுக்குள் சிக்குண்டிருக்கக் கூடுமென்பதை அவர் போன்றோரின் வாழ்க்கைப்போக்கைத் தொடர்ந்து கவனித்தோர்க்கு எளிதில் விளங்கும்.

நிராசை, கையறுநிலை, நாட்டுச்சூழல் –
அனைத்தையும் உள்ளுக்குள் வைத்து
ஏங்கியிருந்த அவர் மனம் –
பாரத் ஜோடோ யாத்ராவில்
நடந்துவந்துகொண்டிருந்த
ராகுல் காந்தியை ஆரத்தழுவி,
அவர் கன்னத்தில் முத்தம் பொழிந்துபோது –
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டதாகவே
எனக்குத் தோன்றியது.

ஆயிரம் பேருக்கு
செங்கீதம் இசைத்துத் தந்த தோழன் –
பொதுவுடைமைக் கொள்கைக்கு –
தன்னளவில் நீதி செய்ய முயன்ற தோழன் –
புரட்சிப் பாடகன் கத்தருக்கு –
செவ்வணக்கம்!
லால் ஸலாம்!