“நடந்தாய் வாழி வழுக்கியாறு

என்ன? மாரி காலத்தில் மட்டுமே சல சலத்து ஓடும். வானம் பார்த்த வரண்ட பூமிவாழ் கிராமிய மக்களின் பார்வையில் அது கொள்ளை அழகை கொடுத்துப் பாயும். அதன் கருணையில் செழித்துக் கொழிக்கும் நெற் பயிர்கள் நன்றி சொல்ல தாமும் தலை சாயும். நண்டுகள் ஓடும், மீன்கள் துள்ளும். அது கண்டு நாரைகள், கொக்குகள் திரள் திரளாய் பறக்கும் – அவற்றை கொத்திக் கொண்டோட. ஆற்றின் இருமருங்கிலும் உள்ள நெற்பயிர்களுக்கு நீர் பற்றாதிருந்தால் தண்ணீர் பம் மெஷீன்கள் கட, கடவென சப்தம் எழுப்பி றபர் குளாய்களினூடாக ஆற்றில் பாயும் வெள்ள நீரை வயல்களுக்குள் பாய்ச்சும். கமக்காரர் முகங்களில் ஒளி வெள்ளம் பளிச்சிடும். சின்னப் பெடியங்கள் அரைக்காற் சட்டையுடனோ, கோவணத்துடனோ அல்லது அவையின்றி அம்மணமாகவோ உன்னிப்பாய்ந்து நீச்சல் அடித்து கொட்டம் போடுவதையும் எண்ணிப் பார்க்கிறேன். அவர்களுக்கு அது ஆனந்தக் களியாட்டம்.

மாரிப் பருவகால வழுக்கையாறு எந்த மலை உச்சியில் இருந்து உற்பத்தியாகிறது என்ற மடடும் கேட்டு விடாதீர்கள். தெல்லிப்பழை பள்ளக் காணிகளில் தோன்றுவது. நான் எனது மாணவப் பருவ காலத்தில் வழுக்கியாற்றின் அணைகளில் ஏகாந்தமாக கைவீசி, வீசி நடந்து நடந்து கந்தரோடையில் மிதந்து அளவெட்டியை கடந்து அம்பனை வயல் வரம்புகளில் மூசி மூசி களைத்து வேர்த்து மகாஜனா கல்லூரி அமைந்திருக்கும் வீதிக்குச் செல்லாமல் ஒழுங்கைகளால் தெல்லிப்பழை வீமன் காமத்தை சென்றடைவேன் உறவினரைப் பார்க்க. என்ன? கால்கள் நொந்து போகும். மாலை வேளை என்பதால் அவை வெந்து போவதில்லை. கமம் செய்யும் வயல் புலங்களில் சிலிப்பர் போட்டு நடப்பதில்லையே.

அளவெட்டி ஒரு பக்கத்தில் அம்பனை சந்திவரையும் மறுபக்கத்தில் மாசியப்பிட்டி முத்துமாரியம்மன் கோவில் வரையும் நீண்ட பிரதேசம். அதனை அண்மித்த மைலிட்டி, தையிட்டி, துர்க்கை அம்மன் கோவில் பின்பக்கமாக உள்ள மாத்தனை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்போது ஏற்படும் வெள்ளம் கடலுக்குப் போதில்லை. அளவெட்டியில் மழை குறைவாகப் பெய்தாலும் அங்கு வெள்ளம் திரண்டு பெருக அதுவே காரணம். அங்குள்ள பெரிய தம்பிரான் குளம், சின்னக்குளம் என்பன நிரம்பி வழியும். அவற்றில் இருந்து வடியும் வெள்ளம் அம்பனை வயற் காடுகள் முடியுமிடத்திலிருந்து தென்மேற்கு நோக்கி வழுக்கையாற்றை தோற்றுவிக்கும். அது கந்தரோடை பினாக்கைக் குளம், வடக்குக் குளம் என்பவற்றையும் அடுத்து சண்டிலிப்பாய் கண்ணகி அம்மன் கோவில் வயல்களையும் நிரப்பி அராலியை அண்மித்த யாழ் ஏரியில் கலக்கிறது. மொத்த நீளம் 16 கிலோ மீற்றர்.

சண்டிலிப்பாய் சந்தியிலிருந்து மானிப்பாய் வீதியில் ஒரு கூப்பிடு தூரத்தில் உள்ள கட்டுடை கிராமத்தை அண்மிக்கமுன் ஐந்து கண் மதவு உள்ளது. வழுக்கியாறு பெருக்கெடுத்து அதன் அணைகளில் உடைப்பெடுத்தால் மட்டும் அரச பணியாளர்கள் அவற்றின் வான் கதவுகளை ஊர்மக்கள் பயிர்கள் நாசமாகி விடுமே எனப் பதகளித்து கேட்கும் வரை காத்திருந்து அளவுக்குத் தேவையான முறையில் திறந்து விடுவார்கள். ஆற்று நீர் சீறிப்பாய்ந்து செல்லும் அராலி வரை.

நீரோட்டம் கோடையில் முளைக்த அடர் பற்றைகளால், சிறு மரங்களால், செடிகளால் தடைப்படக்கூடாது என்பதற்காக அரச ஒப்பந்தக்காரர்கள் அவற்றை கோடை காலத்தில் அகற்றி துப்பரவு செய்துவிடுவார்கள். அப்போது கூட ஆற்றில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு ஒரு தனி அழகைக் கொடுத்துவிடும். நீரோடும் அழகு மானசீகமாகக் கண்ணில் படும்.

எனது தந்தையாருக்கு சொந்தமாக பல வயற்காணிகள் இருந்தன. அவற்றில் ஒன்று வழுக்கியாற்றுக்கு அப்பால் உள்ள “தாழையடி” வயல். இப்பால் சில நெல் வயல்களை தாண்டினால் சற்று உயர்நில மட்டத்தில் எமது வீடு. தாழையடி வயலைக் கடந்தால் வில்லவன்தாள் குளம். வழுக்கியாற்றைப் பார்த்த வண்ணம் நான் வணங்கும் கல்வளைப் பிள்ளையார் உள்ளார். அவர் மீது அந்தாதி பாடிய வரகவி சின்னத்தம்பிப் புலவரின் தந்தையார் புலவர் நாகநாதர் வில்லவராயர் நல்லூரிலிருந்து கல்வளையானை தரிசிக்க வரும்போதெல்லாம் தமது தாள்களை கழுவிய குளம் என்பதால் அதற்கு வில்லவன்தாள் குளம் எனப் பெயர் வந்தது என எனது பெரிய தந்தையார் அமரர் ஐ. குமாரசாமி அடிக்கடி உணர்த்தி வந்தார். இந்தக் குளம் தற்போது தூர்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

தாழையடி வில்லவன்தாள் குளத்தின் அயற்கிராமம் சங்குவேலி. அதன் ஒரு பக்கத்தில் மானிப்பாய். இந்த சங்குவேலி சரித்திர நாவல் எழுத்தாளர் சாண்டில்யன் தமது அரச கதைகளில் சங்குவேலித் துறைமுகம் என்பார்.

தாழையடியும் அதை அண்டிய வயல்களும் மணற்பாங்கானவை. நெல் அறுவடையை அடுத்து சணல் பயிர் மட்டும் வளர்ப்பார்கள். மணற்பாங்கான வயல்களே கயிறு உற்பத்திக்கான மூலப் பொருளென விளங்கும் சணல் பயிரிடப் பொருத்தமானவை.

ஒரு தடவை தாழையடியை அடுத்து கிணறு ஒன்று தோண்டப்பட்டது. அதில் ஊற்றுக்கண் திறக்குமென எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் பலகை, பலகையாக அடுக்குகள் காணப்பட்டன. கிணறு வெட்டியவர்கள் சாதாரண தொழிலாளர்களே தவிர புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் அல்லவே. துண்டந்துண்டமாக கொத்தி எடுத்து வெளியே போட்டனர். எனக்கு அவற்றைப் பார்க்க பெரும் அதிசயம் ஏற்பட்டது. முழுக் கிராம மக்களும் துண்டங்களைக் காணத் திரண்டனர். ஆசிரியர்கள் சிலரும், முதியவர்கள் சிலரும் இவை ஒரு படகின் துண்டங்களே என அத்தாட்சிப் படுத்தினர். தாழையடி, சங்குவேலியை புதைபொருள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் பலஅ பூர்வ சங்கதிகள் வெளிவரும் என நம்புகிறேன்.

அதிருக்கட்டும். வழுக்கியாறை கவனிப்போம். வர்ண பகவான் ஒரு பருவத்திலாவது கருணையுடன் பொழியும் மழையை கந்தரோடையிலோ, சண்டிலிப்பாயிலோ அல்லது அராலி – யாழ் ஏரியில் கலப்பதற்கு முன்னால் எங்கோ ஓரிடத்திலோ நீரேந்து பகுதியை ஏற்படுத்தினால் வருடம் முழுவதும் கமக்காரர்கள் அந்த நீர்த்தேக்கத்தினால் பயனடைவார்களே!

கந்தரோடை – கந்தர் ஓடை தாண்டி சண்டிலிப்பாய் வழியாக கட்டுடை கட்டு – உடை கடந்தே இந்த ஆறு அராலியை அடைகிறது. ஓடை, உடை என்ற பதங்களை சற்று மனதில் நிறுத்திப்பாருங்கள். ஓடையில் நீர் பாயும் கட்டு உடைந்தாலும் நீர் பாயும்.

சண்டிலிப்பாய் கிராமத்தில் நடுக்குறிச்சியில் அமைந்திருப்பது கல்வளை. இது ஒரு நீர் நிலையின் பெயர். முள்ளியவளை, கண்டாவளை, ஆழியவளை, கும்பழாவளை, களுதாவளை என்பது போல். கல்வளை என்ற நீர் நிலை ஒரு பெரிய குளமாக இருந்திருக்கிறது,

வழுக்கியாற்றை அண்மித்து. அங்கு தாழை மரங்கள் அதிகமிருந்தன என்பார் சின்னத்தம்பிப் புலவர், தமது செய்யுள்களில் ஆங்காங்கே.

வழுக்கியாறு ஒரு காலத்தில் ஆழமானதாக இருந்திருக்கிறது. தமிழ்நாட்டுடன் தமிழ் மக்கள் போக்குவரத்து, வாணிபம் என்பவற்றில் ஈடுபட இது ஓர் நீர் வழிப்பாதையாக முக்கியத்துவம் பெற்றிருந்தது என கல்வளைப் பிள்ளையார் கோவில் வரலாறு எடுத்துக் கூறுகிறது. வழுக்கையாற்றை அண்டி இருந்ததால் மருதநில கல்வளைப் பகுதியும் பிரபலம் பெற்றிருந்தது. தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஆற்றங்கரைத் திருத்தலங்கள் போல கல்வளைத் தலமும் விளங்குவதாக அதன் வரலாற்றில் சுட்டிக் காட்டப்படுகிறது. ஆதி திராவிடரின் நாக வழிபாடும் வழுக்கையாற்றின் கரையோரமாக இங்கு பரவியது. கல்வளையில் நாகதம்பிரான் வழிபாடு முதன்மையானதாக விளங்கியிருக்கிறது. அயலூர் மக்களும் வந்து நாகதம்பிரானுக்கு பொங்கிப் படைக்கும் வழக்கம் இருந்தது.

கல்வளைப் பிள்ளையார் கோவில் தோற்றம் பற்றி ஒரு கர்ணபரம்பரைக் கதையும் உண்டு. கந்த வழிபாட்டைக் கடைப்பிடித்து வந்த மாருதப்புரவீரவல்லி என்னும் சோழப் பரம்பரை அரசிளங்குமரி தன் வழிபாட்டில் பூரண மனநிறைவு காணாமல் விக்கினம் தீர்க்கும் விநாயகரை வணங்கி அவருக்கு வழுக்கியாற்றங் கரையோரமாக பல கோவில்களை நிறுவினாள். அனேகமான கோவில்கள் வழுக்கியாற்றுக்கு மேற்குக் கரையோரமாக அமைந்தன. அவற்றில் ஒன்று பரமானந்தப் பிள்ளையார் கோவில் என்ற ஆதியில் அழைக்கப்பட்ட கல்வளைப் பிள்ளையார் கோவில்.

(V.N. Mathialagan)