நீயா, நானா? யாருக்கு யார் அச்சுறுத்தல்?

வன்னியின் அடர் காடுகளுக்குள் இப்போது மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மரங்கள் வெட்டுதல், கனரக வாகனங்களைப் பயன்படுத்திக் காடுகளை அழித்தல், மணல் அகழ்வுகள் என்பவற்றால், காட்டு யானைகள் பெருங்காடுகளை விட்டு வெளியேறி, அவற்றின் வலசப் பாதைகளை விட்டுத் தடுமாறி, உணவு தேடி, மக்கள் குடியிருப்புகளை நாடி அலையும் அவல நிலையில், யானைகளின் வாழ்க்கை காணப்படுகிறது.

மனிதனின் தான்தோன்றித்தனமான சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக, யானைகள் குறுகிய காட்டுப்பிரதேசங்களுக்குள் வாழ வேண்டிய சூழலுக்குள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இதனால், ஆண்டாண்டு காலமாக அவை சென்றுவந்த பாதைகள் (வலசப் பாதை) துண்டிக்கப்படுவதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கிய காரணமாக விளங்குகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

‘இன்று இதுவும் கடந்துபோகும்; நாளையும் வரும்’ என்ற வழமையான பிரச்சினைகளில் ஒன்றாக யானைகளால் விளையும் அச்சுறுத்தல்களும் அழிவுகளும் பாதிப்புகளும், தீர்வு காணப்படாத பிரச்சினைகளாகத் தொடர்கின்றன. குறிப்பாக, வனப் பிரதேசங்களை அண்டிய எல்லைப்புறக் கிராமங்களில், காட்டு யானைகளின் தொல்லையும் அச்சுறுத்தல்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

வன்னிக் காடுகளின் எல்லைப்புறக் கிராங்களில் வாழுகின்ற மக்கள், அன்றாடம் தமது வாழ்வாதாரத்தையும் தொழில் வாய்ப்புகளையும் தினமும் தேடி அலையும் நிலையில், காட்டுயானைகளிடமிருந்து தங்களுடைய வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகளையும் வாழ்விடங்களையும் தம்மையும் தமது எதிர்காலச் சந்ததிகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் பேரில், ஓர் அபாயகரமான நிலையிலேயே வாழ்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடுக்குளம் முதல் இரணைமடுக்குளத்தின் சாந்தபுரம் வரையான பகுதியும் அதேபோல், திருமுறிகண்டி முதல் பல்லவராயன்கட்டு, வேரவில், வலைப்பாடு, ஸ்கந்தபுரம், முட்கொம்பன், வன்னேரிக்குளம் போன்ற பகுதிகளிலும் யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துக் காணப்படுவதாகவே விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக, கல்மடுப் பகுதியில் காட்டுயானைகள் உட்புகுந்து வயல் நிலங்களையும் பெறுமதி வாய்ந்த தென்னை மரங்களையும் அழித்து வருகின்றன. இன்று தேங்காய் ஒன்றின் விலை 75 ரூபாய்க்கு மேல் விற்பனையாகின்ற நிலையில், 30 வயதையுடைய பயன்தரக்கூடிய பெருமளவான தென்னைமரங்கள், யானைகளால் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்தத்தென்னை மரங்களின் வருமானத்தை நம்பி வாழும் மக்கள், தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு, குடிமனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, 2009ஆம் ஆண்டு போர் ஓய்வுக்குப் பின்னர் கோரிக்கை விடுத்து வருகின்றபோதும், யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு, யானைவெடிகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்படுகின்ற யானை வெடிகளுக்கு, யானைகள் பழக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தென் பகுதியிலும் இதேபோன்று, யானைத்தொல்லைகள் காணப்படுகின்றபோதும், அங்கே யானை வேலிகள் அமைக்கப்பட்டு பயிர்செய்கைகள் பாதுகாக்கப்படுகின்றன.

வடக்கில், காடுகளின் எல்லையோரக் கிராமங்களில் வாழுகின்ற மக்களின் பயிர்செய்கைகளைப் பாதுகாப்பதற்கு மின்சார வேலிகளை அமைக்கவேண்டுமெனப் பல்வேறு வலுவான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோதும், அதற்கான வேலைத்திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை என்ற குறைபாடுகள் காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்துக்கு உட்பட்ட ஊரியான் கிராமத்தில், வீட்டிலிருந்த சிற்றம்பலம் குருநாதன் என்ற விவசாயி, காட்டுயானை தாக்கி அண்மையில் உயிரிழந்துள்ளமையும் வன்னேரிக்குளம் பகுதியில் வயலில் காவலுக்குச் சென்ற விவசாயியான கணேசலிங்கத்தை யானை தாக்கி பலத்தகாயடைந்தமை, கல்மடு றங்கன் குடியிருப்பு பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டமை என்று, வன்னிக்குள் அன்றாடம் பலர் யானைகளால் தாக்கப்படுகின்றார்கள்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர், வன்னியில் காட்டு யானைகளின் தொல்லை மிகக் குறைவாகவே காணப்பட்டது. காரணம், யுத்தக் காலத்தில் அடிக்கடி பல பிரதேசங்களில் ஏற்படுகின்ற யுத்தத்தின் வெடிச்சத்தங்கள் காரணமாகவும் காடுகளின் எல்லைப்புற கிராமங்களில் பயிர்களைப் பாதுகாப்பதற்கு விவசாயிகள் தாங்களாகவே அனுமதிப்பத்திரம் இன்றி, சட்டவிரோதமாக துப்பாக்கிகளை (கட்டுத்துவக்கு) பயன்படுத்தியமை போன்ற காரணங்களால், இன்றுள்ளமை போல மோசமான நிலைமை யானைகளால் இருக்கவில்லை.

உணவு, தண்ணீர், சீதோஷ்ண நிலை, வளர்ப்பு, பிரச்சினைக்குரிய சூழல் போன்ற காரணங்களுக்காக யானைகள் 50 கிலோ மீட்டர் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இடம் பெயரும் தன்மை கொண்டவை. பண்டைக் காலம் முதலாக, கிளிநொச்சிப் பிரதேசத்தின் அடர் காடுகளுக்குள் இருந்து, காட்டு யானைகள் ஆனையிறவு கடல்நீரேரி ஊடாக கடல் வற்றுக் காலங்களில் மருதங்கேணி, பளை ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அங்கே தமக்கான உணவைத் தேடிக்கொண்டு, அங்கேயே வாழ்ந்து விட்டு, மீளவும் ஆடி, ஆவணி மாதங்களில் அந்தப்பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, மீளவும் கிளிநொச்சிக் காடுகளை நோக்கி நகரும். இவ்வாறு யானைகள் கடக்கின்ற ஒரு பகுதியாகக் காணப்பட்ட ‘ஆனையிறவு’ என்ற வெட்டை அல்லது, இறவு என்ற பகுதியே, காலப் போக்கில் ‘ஆனையிறவு’ என்றாகியது என்பது, இன்றுள்ள முதியவர்கள் சொல்லக் கேள்விப்படுகின்றோம். இந்தச் சம்பவங்கள் அவர்கள் வழிவழியாக அறிந்துகொண்டவையாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடு குளத்திலிருந்து இரணைமடுக்குளம் வரையான பகுதிக்கும் இரணைமடுக்குளம் முதல் திருமுறிகண்டி வரையான பிரதேசங்களின் அடர் காடுகளின் எல்லையோரங்களில் சுமார் 23 கிலோ மீட்டர் நீளமான பகுதிகளுக்கு யானை வேலிகளை அமைப்பதற்கான முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில், நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் “இந்த யானை வேலிகளை இரண்டு மாத காலத்துக்குள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்; அதற்கு சகல திணைக்களங்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட காலத்துக்குள் வேலைகளை பூரணப் படுத்த முடியும்” என்று வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே, இந்தக் காட்டு யானைகளின் தொல்லை, மனிதன், இயற்கை மீது செலுத்துகின்ற ஆதிக்கம் மற்றும் இயற்கையை அழிக்கின்ற காரணத்தால் நிகழ்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதேவேளை, விலங்குகளும் மனிதனும் பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதுதான் இயற்கை விதித்திருக்கும் விதியாகும்.

இங்கு மனிதனுக்கு யானை அச்சுறுத்தலா, யானைக்கு மனிதர்கள் அச்சுறுத்தலா என்பதற்கு அப்பால், இரண்டு விலங்கினங்களும் வாழவேண்டும். அதேவேளை காடுகளின் மத்தியில் இடம்பெறும் வளஅபகரிப்புகளும், சட்டவிரோத செயற்பாடுகளும் நிறுத்தப்படவேண்டும். அவ்வாறு நிகழுமாயின் யானைகள், மக்கள் குடியிருப்புகளை நோக்கி நரும் சந்தர்ப்பங்கள் வெகுவாகக் குறையும் என்பது திண்ணம்.