வேதவல்லி கந்தையாயும் அவர் மகள் சுகுணாவும்

1962 இல் தயாரித்த கர்ணன் போர் வடமோடி நாடகத்திற்குப்பின்

1963 இல் பேராசிரியர் வித்தியானந்தன் நொண்டி நாடகம் தயாரித்த வேளை

பாத்திரங்கள் தெரிவாகிவிட்டன

நொண்டிச் சாத்தானுக்கு பேரின்பராஜாவும்

செட்டியாருக்கு நானும்

செட்டியாரின் வேலையாள் சொக்கப்பையனுக்கு எதிர்மன சிங்கமும்

அரசனுக்கு அழகரத்தினமும்

அவர்மனைவிக்கு இன்னொரு பெண் மாணவியும்

தெரிவு செய்யப்பட்டு விட்டோம்.

செட்டியின் பெண்டாட்டி அதில் முக்கிய பாத்திரம்

அதில் நடிக்க ஒரு பெண் மாணவி தேவைப்பட்டாள்

.பெண்கள் மேடைக்கு வரத் தயங்கிய காலம் அது
.
சிலர் ஆர்வத்தில் ஆரம்பத்தில் வந்தாலும்

( 1962 இல் தயாரித்த கர்ணன் போரில் கர்ணன் மனையியாக நடித்த ஹம்சவல்லி, அவளது தோழியாக வந்த மாலதி, குந்தியாக வந்த ஈஸ்வரநிதி}

பின்னால் கூத்தில் நடிக்கத் தயக்கம் காட்டினர்

அப்போதுதான் சுகுணா பற்றி அறிய வந்தோம்.

சுகுணா அப்போது முதலாம் வருட மாணவி

மிகஅமைதியும்,
மென்மையாகப்பேசும் சுபாவமும்
சாந்தமுகமும் கொண்டமாணவியாக
அன்று இருந்தவள் சுகுணா.

அதிர்ந்து பேச மாட்டாள்

சற்றுப் பரதம் அறிந்தவளாகவும் இருந்தாள்

நன்றாகப் பாடுவாள்

அவள் ஒரு நாள் நொண்டி நாடக ஒத்திகைக்கு வந்திருந்தாள்

அவளே செட்டிபெண்ணாக நொண்டி நாடகத்தில் நடிக்கவுள்ளாள் என வித்தியானந்தன் எம்மிடம் கூறினார்

பயந்து பயந்து பேசும் இவளுக்கு இத்துணிவு எப்படி வந்தது?

என நாம் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்

பேராசிரியர் வித்தியானந்தனுக்கு பேரா, சிவத்தம்பி கொடுத்த ஆலோசனையின் பெயரில் சுகுணாவின் தாயார் வேதவல்லி கந்தையாவுடன் பேசி அவளை அங்கு வித்தியானந்தன் அழைத்திருந்தமை பின்னால்தான் எமக்குத் தெரிய வந்தது

சுகுணாவின் அம்மா வேதவல்லி யாழ்ப்பாணத்தில் ஒரு சமூக சேவகி.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து இயங்கியவர்.

அவர் கணவர் கம்யூனிஸ்ட் கந்தையா என அறியப்பட்டவர்.

மார்க்ஸீய சித்தாந்தத்தைக் கற்றுத் தேர்ந்தவர்

. அன்று யாழ்ப்பாணத்திலிருந்த முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மிக நெருக்கமானவர்

வட்டுக் கோட்டை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு கூட்டுக் குடும்பத்தில் வேதவல்லி பிறந்தார். பெண்கள் உயர் கல்வி கற்பது அவசியமில்லை என்ற சிந்தனை மேலோங்கியிருந்த அக்காலத்தில் இவர் தனது கல்வியைத் தொடர்வ தற்குப் பக்கபலமாக இருந்தவர் இவரது சிறிய தந்தையார் வ.நாக லிங்கம். பெண்களின் கல்வி மேம் பாட்டுக்காகத் தீவிரமாக உழைத்த வ.நாகலிங்கத்தின் முயற்சியால் வேதவல்லியும் அக்கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணும் உயர் கல்வியை மேற்கொண்டு இருவரும் ஆசிரியத் தொழில் புரிந்தனர்.

வேதவல்லி தனது ஆசிரியத் தொழிலை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்பித்தார். இவரது சேவை பாடசாலையுடன் மட்டுப்பட்டிருக்கவில்லை. கிராமத்தில் இளம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். சமூகப் பிரச்சினைகளிலும் ஈடுபாடு கொண்டார்.

இவரது சமூக சேவைச் செயற்பாடு நீர்வேலிக் கிராமத்தைச் சேர்ந்த கல்விமானான எஸ்.கே. கந்தையாவின் கவனத்தை ஈர்த்தது

. இருவரும் மனமொத்துத் திருமணபந்தத்தில் இணைந்தனர்.

இருவரும் ஆசிரியர்கள்

. கணவனின் வழியில் வேதவல்லியும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகினார்

,சித்தாந்தத் தேர்ச்சியும் பெற்றார்.

சமூக சேவகியான வேதவல்லி கந்தையா அரசியல் செயற்பாட்டாளராகவும் ஆகினார்.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்ட அதேவேளை தொழிற்சங்கம்

, கூட்டுறவுச்ந் சங்கம்,

மாதர் முன்னேற்றம் எனப் பல தளங்களில் இவரது மக்கள் பணி விரிந்தது

கணவனிடம் ஆங்கிலம் கற்று அன்று எஸ்,எஸ்,ஸி பரீட்சையில் ஆங்கிலத்தில் சித்தி பெற்றார்

கணவர் இறந்த பின்னரும் வேதவல்லி சமூகசேவைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்

வேதவல்லி கந்தையாநிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் உடையவர்.மிகத் துணிச்சலானவர்

அவரைக் கண்டாலே எமக்கு ஓர் மரியாதை பயம்

அவர் கொடுத்த துணிவில்தான் அவள் மகள் சுகுணா அங்கு வந்திருந்தாள் என நாம் அறிந்து கொண்டோம்

நொண்டி நாடகம் தென்மோடி நாடகம்
தென்மோடி ஆடல் பாடல்களைச் சுகுணா அண்ணவியாரிடம் பயின்றாள்

மிக அமைதியான பெண்ணாகக் காட்சிதரும் சுகுணா ஒத்திகையில் நடிக்க ஆரம்பித்தால் வேறு ஒரு பெண்போலத் தோற்றம் தருவாள்

இனிமையான குரல் வளம் கொண்டவள் சுகுணா

நொண்டி நாடகத்தில் செட்டியாரின் பெண்ணாக வந்து அவள் பாடும் பாடல்கலள் எங்கள் அனைவரையும் கவர்ந்தன

நொண்டி நாடகத்தை பேரா,வித்தியானந்தன் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்றார்

அதில் சுகுணாவுடன் இன்னும் ஐந்து பெண்கள் (பிற்பாட்டு) பங்கு கொண்டனர் அவர்களை வெளி இடங்களுக்குக் கூட்டிச் செல்கையில் வித்தியானந்தன் வேதவல்லியையே வரச் சொல்லிவிடுவார்

நாங்கள் வேதவல்லிக்கு வைத்த பெயர் மேற்றன்

பேரா,வித்தியானதன் 1964இல் இராவணேசன் தயாரித்தார்.அதி அவர் சுகுணாவை மண்டோதரிக்கு நடிக்க வைத்தார்.அதில் நான் இராவணனுக்கு நடித்தேன்

ஒத்திகைகள் மேடையேற்றங்கள் அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் யாவும் பதியப்பட் வேண்டியவை

ஈராவணேசனில்
கணவனுக்குப் புத்திகூறும் மனைவியாக
,மகன் இறப்பினால் கலங்கி அழும் தாயாக
கணவன் இறக்க உயிர்விடும் பெண்ணாக

உணர்ச்சி ததும்ப நடித்து இராவணேசனின் முதல் மண்டோதரியும் ஆனாள்

இராவணேசன் இலங்கை எங்கணும் கொண்டு செல்லப்பட்டது.வேதவல்லியும் மேற்றனாக எங்களுடன் பயணம் வந்தார்

பஸ்ஸில் முன் சீட்டில் அவர் ஜம் என அமர்ந்திருப்பது இப்போதும் கண்முன் நிற்கிறது

மெல்ல மெல்ல எங்கள் அனைவருக்கும் ஓர் தாயும் ஆனார்

எமக்குச் சுகவீனம் ஏற்பட்டபோது ஒரு தாய் போல் பரமரித்தார்

நாம் அனைவரும் அவரின் பிள்ளைகளானோம்

நாம் அனைவரும் 1965 இல் பல்கலைக் கழகப்படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறினோம்

1967 இல் முதன் முதலில் இராவணேசனை மட்டக்களப்பு நகரமண்டபத்தில் பேரா, வித்தியானந்தன் மேடையிட்டார்

வெளியே இருந்த நாங்கள் மீண்டும் மகிழ்சியுடன் கூடினோம்,இப்போது நாங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல

முதன் முதலில் பெண் ஒருத்தி கூத்து ஆடியதைகண்டு பிரமித்துப்போய் இருந்தது மட்டக்களப்பு

அவளது ஆடலும் பாடலும் அனைவரையும் வசீகரித்தன

சுகுணாவுக்கு நிறைய மலர் மாலைகள் விழுந்தன.

மட்டக்களப்பின் பிரபலயமான பெண்கள் பாடசாலையான வின்சன் பாடசாலை உப அதிபர் திரவியம் ராமச்சந்திரன் சுகுணாவுக்கு மாலை அணிந்து வாழ்த்தியதுடன் தாயாரையும் பாராட்டினார்

இன்னும் பலரும் சுகுணாவுக்கு ,மாலை அணிந்து மகிழ்ந்தனர்

மட்டக்களப்பு சுகுணாவை ஒரு போதும் மறக்காது என்றார் திரவியம் அக்கா

சுகுணாவுக்குத் திருமணமானதும் .மட்டக்களப்பில் வங்கியொன்றில் அவள் கணவருக்கு வேலை
கிடைத்தது

அவள் மட்டக்களப்பு வாசியானாள்

.மகளைக் குடியமர்த்த வேதவல்லி யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தார்.

நாம் அவர்கள் இங்கு குடியேறவும் வாழவும் உதவியாக இருந்தோம்

பின்னால் நானும் மட்ட்க்களப்பைவிட்டு கொழும்பு வாசியானேன்.

பின்னர் யாழ்ப்பாண வாசியானேன்

பிரச்சனை காலத்தில் சுகுணா இறந்த செய்தி கிடைத்தது.

மரணவீட்டுக்குச் செல்ல முடியவில்லை

பின்னர் வேதவல்லியும் காலமானார்

இருவரும் நெஞ்சில் பதிந்த பெரும்தகைகள்

இவர்களைப் போன்றோர் இல்லாவிட்டால் பேரா, வித்தியானந்தன் அச் சாதனைகள் சாதித்திருக்க முடியாது

இன்று கூத்து பற்றிப்பேசப் பலர் வந்து விட்டனர்.

ஆனால் அன்று இன்றைய பேச்சுக்களுக்கெல்லாம் வித்திட்ட பலர் உள்ளனர் என்பதை இத்தலைமுறையிற் பலர் அறிவதில்லை

அல்லது அவர்களுக்கு இவை அறிவுறுத்தப்படுவதில்லை

இவை தெரியாமையே கரணம்

எல்லாச் சாதனைகளுக்குப் பின்னாலும் பெயர் தெரியாத பெயர் அறியாத பல மனிதர்களின் உதவிகளும் உழைப்பும் நிறைந்து கிடக்கின்றன

மௌனகுரு


1.செட்டி பெண்ணாக சுகுணா

  1. மண்டோதரியாக சுகுணா
    3 வேதவல்லி கந்தையா