நினைவாஞ்சலி: கலைவாதி கலீல்

அவரை முதன் முதலில் சந்தித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. நான் சாதாரண தர கல்வி (O/L) பரீட்சை கற்றுக்கொண்டிருந்தபோது, பரீட்சைக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்தரங்குக்கு எங்கள் வகுப்பு மாணவர்கள் மிகுந்து மாவத்தை பாடசாலைக்கு அனுப்பட்டிருந்தோம். அங்கு எங்களுக்கு தமிழ் மொழி கருத்தரங்கு ஆசிரியராகத் தான் அவர் 89இல் அறிமுகமானார்.

அவரின் நகைச்சுவைகளை என் சக மாணவர்கள் எலோரும் அதிக ரசித்தோம். அந்த நகைச்சுவைகள் பல நாட்களாக எங்கள் உரையாடல்களில் கலந்திருந்தன.

அதன் பின்னர் மறைந்த தோழரும், என் ஆரம்பகால மாக்ஸிய குருவுமான செ.கணேசலிங்கம் அவர்களோடு பழகிய காலத்தில் அவர் எங்களுக்குத் தந்த குமரன் இதழ்களில் கலைவாதி கலீல் என்கிற பெயரில் கவிதைகளைக் கண்டேன். நாங்கள் ஏற்கெனவே அறிந்திருந்த ஆசிரியர் தான் கவிஞர் கலைவாதி கலீல் என்று அறிந்தபோது மிகுந்த நெருக்கமாக உணர்ந்தேன். அவர் முற்போக்குத் தளத்தோடு தொடர்புடையவர் என்பது அவர் மீதான மதிப்பு அதிகமானது.

அதன் பின்னர் முகநூலில் அவரோடு தொடர்பை ஏற்படுத்தி பழக முடிந்தது. சில வருடங்களுக்கு முன்னர் வரை உட்பெட்டியில் என்னோடு உரையாடலில் இருந்தார். அவருக்கு ஆரம்பத்தில் என்னை நினைவில் இல்லை. என் போன்ற மாணவர்கள் அவருக்கு ஆயிரங்களில் இருப்பார்கள்.

அவரைப் பொறுத்தவரை அவர்களில் கடந்துபோன மாணவர்களில் ஒருவன் மட்டுமே நான். ஆனால் மனதில் பதியுமளவுக்கு நிலைத்து நிற்கக்கூடிய ஆசிரியர்கள் சிலர் தான் வாழ்க்கையில் இருப்பார்கள். இரண்டு வாரங்கள் பழகிய என் நினைவுகளில் அவர் நிலைத்திருந்தார் என்றால் அவரின் பாத்திரம் அத்தகைய வலுவானது என்றே எடுத்துக்கொள்ளலாம்.

கலைவாதி கலீல் என்கிற ஆசானுக்கு என் இதய அஞ்சலி.