அரசியல் கைதிகள் விவகாரம்: சட்டமா அதிபரின் அறிக்கை கிடைக்கவில்லை

பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து, கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிணை மனுவை, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக பிரதான நீதவான் அமில ஆரியசேன, நேற்று புதன்கிழமை(28) நிராகரித்தார். 18 மாதங்களுக்கு மேல் தண்டனை வழங்கப்படாமலும் விடுவிக்கப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில், சட்ட ஆலோசகர் சேனக பெரேரா மற்றும் துஷார என். தசுன்ஆகியோர் சமர்ப்பித்த  மனுவைக் பரிசீலித்த பின்னரே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு இதற்கு முன்னரும் சில வழக்குகளில் பிணைகள் வழங்கப்பட்டுள்ளதாக சட்ட ஆலோசகர்கள் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும், பயங்கரவாதச் தடுப்புச் சட்டத்துடன் இவ்விடயம் சம்பந்தப்படுவதால், சட்டமா அதிபரின் கருத்தைக் கவனத்திலெடுப்பது அவசியம் என வலியுறுத்தினார்.

இதுதொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு, அவை தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான  சட்டமா அதிபரின் அறிக்கை, இதுவரை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் தாக்கல் செய்யப்படாததாலேயே இந்தப் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.