ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் மூன்றாம் கட்ட விசாரணை

– மக்கள் ஆசிரியர் சங்கம்

மக்கள் ஆசிரியர் சங்கம் ஆசிரிய உதவியாளர்களை இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3 வகுப்பு ஐஐற்கு தகுதியானவர்கள் எனவும் அவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யுமாறு கோரி 2015.07.23ம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து திருந்தது. இதன் மூன்றாவது விசாரணை இம்மாதம் 29ம் திகதி புதன் கிழமை நடைபெற உள்ளதாக மக்கள் ஆசிரியர் சங்க செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இரண்டு முறை விசாரணைகளுக்கு தரப்புகள் அழைக்கப்பட்டடிருந்த போதும் முதலாவது விசாரணையின் போது கல்வி அமைச்சில் இருந்து எவரும் சமூகமளித்திருக்கவில்லை. இரண்டாவது விசாரணையில் கல்வி அமைச்சின் சார்பாக கலந்து கொண்ட அதிகாரி, இந்நியமனம் கடந்த ஆட்சிக்கால அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். அமைச்சரவை தீர்மானம் ஆசிரியர் சேவை பிரமானக் குறிப்பிபை மீறுவதாக அமைதலாகாது என்பதை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியிடம் மக்கள் ஆசிரியர் சங்கம் எடுத்தக்கூறியது. இரு பக்க கருத்துக்களையும் கேட்ட பின்னர் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி, கல்வி அமைச்சின் அதிகாரியை தமது பக்க நியாயம் தொடர்பாக எழுத்துமூலமாக காலம் தாழ்த்தாது அறிவிக்குமாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையை 2017ம் ஆண்டு ஏப்ரல் மாத முடிவில் எழுத்து மூலம் சமர்ப்பிப்பதாக கல்வி அமைச்சின அதிகாரி ஏற்றுக் கொண்டிருந்தார். எனினும் கல்வி அமைச்சு இதுவரை தனது எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்திருக்கவில்லை.

இந்நிலையிலேயே மூன்றாவது விசாரணை இம்மாதம் 29ம் திகதி நடைபெறவிருக்கிறது. கல்வி அமைச்சு திட்டமிட்டே முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ள நிவாரணங்களுக்கான தன்பக்க நியாயங்களை கூறாது இருக்கின்றது. குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் காலம் இழுத்தடிப்பு செய்யும் வகையில் இடம்பெறுதாக இவ் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்கு மக்கள் ஆசிரியர் சங்கம் கொண்டு வந்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் குறிப்பிட்டார்.