இயற்கை அனர்தங்களுக்கு உதவி புரிவோம்

நான் இலங்கை வந்து 82 மாதங்கள் கடந்துவிட்டது. 2009 யுத்தம் முடிவடைந்தபின் அது விட்டுச்சென்ற காயங்கள் இன்னும் முற்றாக மாறவில்லை. பல நெஞ்சங்களில் வடுக்களாகிவிட்டன. 82 மாதங்களிலும் பார்த்த சந்தித்த மக்கள் கூறிய விடயங்களினால் என் மனம் மரத்துப்போய்விட்டது. ஆதலால் யாராவது தமது சிறுபிரச்சனைகள் கூறினால் ஆறுதல் சொல்வதோடு விட்டுவிடுவதுண்டு. ஏனெனில் மனம் மரத்துவிட்டது. கடந்த 3 நாட்களாக மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டபின் மனம் ஒரு இடத்தில் இல்லை. வடக்கில் நடந்தது யுத்தம். வட்டுக்கோட்டை தமிழீழ தீர்மானம் எடுத்தவுடன் எனது தந்தையும் மாமனாரும் எனது ஊர் இளைஞர்களிற்கு இத்தீர்மானம் எமது அடுத்த சந்ததியினை ஒன்றுக்கும் உருப்படாமலும் எமது மக்கள் சிதறி தமது அடையாளங்கள் தெரியாமல் கோவணம் இன்றி நடுரோட்டில் விடப்படுவீர்கள் என்று பிரச்சாரம் பண்ணினார்கள். அவர்களின் கூற்று சரியென 2009 நிரூபிக்கபட்டுவிட்டது.

தமிழ்தலைவர்களால் உருவாக்கப்பட்ட யுத்தம் தாங்களும் அழிந்து இளைஞர்களையும் வீதியில் விட்டுச்சென்றுள்ளது. இந்த அழிவையே கடந்த 82 மாதங்களாக சொல்லி அழுது கொண்டு வருகின்றோம். ஆனால் மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைவிட மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஒரே இரவில் மண்ணோடு மண்ணாகிவிட்டனர். இயற்கையின் கோரத்தாண்டவம். ஏன்? இந்த மக்களிற்கு இப்படி ஒரு தண்டனை தேவையா?வடக்கின் திமிர் பிடித்த தலைவர்களிற்கு வடக்கின் மக்கள் அனுபவித்த தண்டனை பத்தாது ஆனால் அனுபவித்தது அப்பாவி சாதாரண மக்களே. இலங்கை அரசியல் வாதிகளினால்(தமிழ், சிங்கள) பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு இயற்கையின் இந்த தண்டனை மோசமானது. எனவே வடபகுதி தமிழர்கள் யாவரும் இன்று பிராயச்சித்தம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஏதாவது உங்களுக்கு தெரிந்த தொடர்புகள்மூலம் தங்களால் இயன்ற அத்தியாவசிய உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
(ந. தமிழ் அழகன்)