இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து ஒக்.15 ஆரம்பம்

அதற்கமைய  நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கபடும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்க கூட்டு பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நாகை துறைமுகத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் நேற்று தூர்வாரும் பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள்ஆரம்பிக்கப்பட்டது. இந்த பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆரம்பித்து  வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து துறைமுகத்தில் நடந்து வரும் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் உள்ள இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பலில் 2½ மணி நேரத்தில் சென்று விடலாம் என ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் கப்பல் நிற்கும் இடத்தில் மணல் திட்டுக்கல் உள்ளதால் அந்த இடத்தை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 3 மீட்டர் ஆழத்திற்கு மேற்கொள்ளப்படும். இங்கு தூர் வாரப்படும் போது பயணிகள் கப்பல் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.

மத்திய அரசுக்கு சொந்தமான கொச்சி பகுதியில் இருந்து தான் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் கப்பல் வரும். இந்த கப்பல் 150 பயணிகளை ஏற்றிச்செல்லும். பயணிகளை பாதுகாப்புடன் அழைத்து செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்திகொடுத்துள்ளது,

நாகை துறைமுகத்தில் கப்பல் நுழையும்போது தமிழ்நாட்டின் கலாசார சின்னங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படும். எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளில் இருந்து பயணிகள் வந்து செல்லும் வகையில் மேம்படுத்தப்படும்.

இந்த பணிகள் அனைத்தும் அக்டோபர் மாதம் (02)திகதிக்குள் நிறைவு பெறும் எனவும் மத்திய அரசின் அனுமதியுடன் ஒக்டோபர் மாதம் (15)ஆம் திகதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.