இலங்கையில் மாகாணசபைகள் இருக்கின்றன – ஆனால் இல்லை (தொடர் – 3)

(அ. வரதராஜா பெருமாள் )

தேர்தலுக்காக சட்டரீதியாகவும் செயற்படவில்லை 

மாற்று சட்ட மூலத்துக்கும் முயற்சிக்கவில்லை 

மாகாண சபைத் தேர்தல்களை ஆட்சியாளர்கள் நடத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என்றும் அதனை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியற் பிரமுகர்கள் அவ்வப்போது தமது ஊடக அறிக்கைகள் மற்றும் பேட்டிகளில் கூறி வருகிற போதிலும், அது தொடர்பான தொடர்ச்சியான காத்திரமான அரசியற் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றே. தங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி இருக்கிறது – அது இருந்தால் ‘போதுமடா சாமி’ என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றாலும், இது தொடர்பாக மாகாண, மாவட்ட மற்றும் உள்ளுர் மட்டங்களில் உள்ள சமூகப் பிரமுகர்கள, அரசியல் அக்கறை கொண்ட இளம் தலைமுறையினர் ஏன் தமது கட்சித் தலைமைகளை மாகாண சபைகள் தொடர்பில் காத்திரமாகச் செயற்படுவதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை – குரல்களை எழுப்பவில்லை என்பது இங்கு ஒரு பெரும் கேள்வியாகவே உள்ளது.