ஐ.எம்.எப் பேச்சுவார்த்தை: வெற்றி பெறுவதில் வெற்றி

ஒரு நாடு என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் அதே வேளை, ஒரு கொள்கைக் கட்டமைப்புக்குள் செயற்பட்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரச, அரை அரச மற்றும் தனியார் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருடத்தின் முதல் காலாண்டின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 2024ஆம் ஆண்டு இந்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமாயின், அரச துறை மாத்திரமன்றி தனியார் துறையும் வலுப்பெற வேண்டுமென ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

இன்று மக்கள் படும் இன்னல்களை தாம் மறந்து விடவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எவ்வாறேனும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சமுர்த்திக் கொடுப்பனவு கிடைக்காத சுமார் 20 இலட்சம் குடும்பங்களுக்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 கிலோ அரிசி வீதம் வழங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.