ஐ.நாவிலிருந்து விலகுவதாக பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் தலையிடுவதாக மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே, ஐக்கிய நாடுகளிலிருந்து விலகுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியேற்படும் என எச்சரித்துள்ளார்.

போதைப் பொருளுக்கெதிராக ஜனாதிபதி டுட்டேர்ட்டேயால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகத் தொடர்ந்தும் விமர்சனங்களை ஐ.நா வெளியிட்டுவரும் நிலையிலேயே, இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். ஜனாதிபதியாக டுட்டேர்ட்டே வென்ற பின்னர், இதுவரை 900 பேர் வரை, போதைப்பொருள் சம்பந்தமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று கருதப்படுகிறது.

எனினும், உயிரிழப்புகளுக்கு பொலிஸார் காரணமன்று எனத் தெரிவித்த ஜனாதிபதி டுட்டேர்ட்டே, வேண்டுமானால், அந்த உயிரிழப்புகள் தொடர்பாக ஐ.நா நிபுணர்கள் விசாரணை செய்யலாம் எனவும் தெரிவித்தார். “நீங்கள் மிகவும் முட்டாள்தமான நிபுணர்கள் என்பதை உலகத்துக்கு நான் நிரூபிப்பேன்” எனத் தெரிவித்த அவர், போதைப்பொருள் சம்பந்தமான நடவடிக்கையால் உயிரிழந்தோரை மாத்திரம் கணக்கெடுக்காமல், போதைப்பொருள் காரணமாக உயிரிழக்கும் அப்பாவிகளின் உயிர்களையும் பற்றிக் கவனமெடுக்குமாறும் கோரினார்.

அதன் பின்னர், ஐ.நா மீதும் பிலிப்பைன்ஸின் நட்பு நாடான அமெரிக்கா உட்பட ஐ.நா அங்கத்துவ நாடுகள் மீதும் விமர்சனங்களை முன்வைத்தார். தங்களது சொந்த ஆணையை நிறைவேற்ற முடியாத ஐ.நாவும் அதன் அங்கத்துவ நாடுகளும், குற்றவாளிகளின் என்புகள் குவிவதைப் பற்றிக் கவலைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

“உங்களை அவமானப்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால், ஐக்கிய நாடுகளிலிருந்து விலகுவது பற்றி நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருக்கலாம். இந்த முட்டாள்தனத்தை நாங்கள் ஏன் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்?” என்று அவர் மேலும் தெரிவித்தார்.