கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் – முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஜெ. நினைவிடத்தில் தியானத்துக்கு பின் ஓபிஎஸ் அதிரடி பேட்டி: சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரி குற்றச்சாட்டு

தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தனர் என்றும் முதல்வராக தான் சிறப்பாக பணியாற்றியது சசிகலாவின் குடும்பத்தாருக்கு எரிச்சல் ஏற்படுத்தியது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 9 மணியளவில் திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தார். அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தை வலம் வந்து அஞ்சலி செலுத்தியவர் 40 நிமிடங்கள் அங்கேயே தியான நிலையில் அமர்ந்திருந்தார். அவர் தியானத்தில் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ்., முன்னாள் முதல்வர் நினைவிடத்தில் மவுன அஞ்சலி செலுத்திய தகவல் பரவியதையடுத்து அங்கு ஊடகவியளாளர்கள் குவிந்தனர். அவர் தொடர்ந்து மவுன நிலையிலேயே இருந்தார். அவ்வப்போது கண்களில் கசிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தார். அதிமுக நிர்வாகிகள் பலரும் அங்கு குவிந்தனர். தியானத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், “எனது மனசாட்சியின் உந்துதலால் நான் மவுன அஞ்சலி செலுத்தினேன்.

சில உண்மைகளை உங்களிடத்தில் சொல்ல வந்திருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான்தான் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். இரண்டு முறை ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவரை விடுத்து வேறு ஒருவரை முன் நிறுத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்ததாலேயே பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் பதவி மதுசூதனனுக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு மாறாக சசிகலா அதிமுக பொதுச் செயலாளரானார். அதற்கு முன்னதாக திவாகரன் தனது அக்கா சசிகலாவை ஊருக்கு கூட்டிச் செல்லவிருப்பதாகக் கூறியதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து சொன்னார், “சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர்” என்றார். நானும் சம்மதித்தேன். அதன் பின்னரே சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

அந்த வேளையில் ‘வார்தா’ புயல் தாக்கியது. புயல் பாதிப்புகளில் இருந்து சென்னை நகரை மீட்டெடுப்பதில் சிறப்பாக பணியாற்றினேன். எனது சிறப்பான பணி அவர்களை (சசிகலா குடும்பத்தாரை) எரிச்சல் படுத்தியது. தொடர்ந்து சென்னை நகரின் குடிநீர் தேவையை ஈடுகட்ட ஆந்திர அரசிடம் பேசி தண்ணீர் பெற்றேன். அதுவும் அவர்களுக்கு எரிச்சலூட்டியது. பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. அதிலும், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு வெற்றி கண்டேன். அதிலும் அவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது. பின்னர்தான், அதிமுக சட்டமன்ற குழு கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்தார்கள்.

அந்தக் கூட்டம் நடைபெறப்போவதே எனக்குத் தெரியாது. அந்த நிலையில்தான் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவை நான் சந்தித்தேன். அப்போது, எனது பதவியை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார்கள். சசிகலா முதல்வராவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என வினவினேன். ஆனால், என்னைத் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். நான் வேண்டாம் என்ற பதவியை கொடுத்துவிட்டு இப்போது அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்துவது நியாயமா எனக் கேட்டேன்.

ஆனால், அவர்களோ என் கையைப் பிடித்துக் கொண்டு இதற்கு சம்மதிக்காவிட்டால் கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாகிவிடும் என்று வற்புறுத்தினர். அதனாலேயே பதவியை ராஜினாமா செய்தேன். என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.

அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்” என்றார். தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கவுள்ள நிலையில் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடிப் பேட்டி.

(The Hindu)