கணவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்: போலீசாரிடம் மன்றாடும் கௌசல்யா

கோவை : கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என ஆணவக்கொலை தாக்குதலில் படுகாயமடைந்த கௌசல்யா கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் தேவையில்லாத பதற்றம் உருவாகும் என்று கூறி அவரை அனுமதிக்க போலீசார் மறுப்பதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே கொமரலிங்கத்தில் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சங்கரின் உடலை வைத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாதி மாறி காதலித்து, திருமணம் செய்து கொண்டதால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் திருப்பூர் மாவட்டம் உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் எனும் 22 வயது இளைஞர். அவரோடு அவரின் காதல் மனைவி கவுசல்யாவும் கொடூரமான கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் 3 பேர் சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். சிசிடிவியில் பதிவான தாக்குதல் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன.. உடலை வாங்க மறுத்து சங்கரின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்களைச் சமாதானப்படுத்தி உடலை ஒப்படைத்தனர். உடனடியாக இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

போலீஸ் பாதுகாப்போடு சங்கரின் உடல், சொந்த ஊரான கொமரலிங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடல் ஊருக்குக் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போலீசார் உத்தரவுப்படி நேரடியாக எரியூட்டும் மயானதுக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடலை எரியூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு அப்பகுதி இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடலை எரியூட்ட வைத்திருந்த பொருட்களை அகற்றினர். டியூப் லைட் உள்ளிட்ட சில பொருட்களையும் சேதப்படுத்தி உடலை எரியூட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து உடல் மீண்டும் ஊருக்குள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. அங்கு உடலை வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கௌசல்யா, தனது கணவர் இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினார். ஆனால் போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் அவரை சந்தித்த சிலர், கௌசல்யாவை சங்கரின் இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அதற்கு போலீசார் மறுத்து விட்டனர். கௌசல்யா அங்கு சென்றால் தேவையில்லாத பதற்றம் உருவாகும் என போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில் தன்னை அனுமதித்தே ஆக வேண்டும் என தொடர்ச்சியாக மன்றாடி வருகிறார் கௌசல்யா.

ஒரு புறம் உடலை ஊருக்குள் கொண்டு செல்லாமல் நேரடியாக சங்கரின் உடலை மயானம் கொண்டு சென்று எரித்து விடுவது செய்வது என்ற திட்டம் பொய்த்து விட்ட நிலையில், மறுபுறம் கௌசல்யா இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கோரி வருவதும் போலீசாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

கௌசல்யா நல்ல உடல் நிலையோடு இருக்கிறார். அபாய கட்டத்தை அவர் தாண்டி விட்டார். ஆனால் கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி மறுப்பது நியாயமற்றது என மாதர் சங்கம், தலித் விடுதலை கட்சி ஆகியவை கோரியுள்ளன. இதனால் பதற்றம் நீடிக்கிறது.