கனடாவில் தியாகிகள் தினம்.

 

இன்று கனடாவின் ரொறன்ரோவில் 26 வது தியாகிகள் தின நிகழ்வு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு 9 மணியளவில் முடிவுற்றது. தோழர் ஜேம்ஸ் இன் தலமையில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வினை பத்மநாபா மக்கள் முன்னணி(PPF)யினர் ஒழுங்கு செய்திருந்தனர். தோழர் பிரதாப் இன் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது. ஆரம்பத்தில் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்பணித்த அனைத்துப் போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் 1 நிமிட மௌன அஞ்சிலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. இந்த தியாகிகள் தின நினைவு கூறல் நிகழ்வில் TELO, PLOTE, EPDP. EROS, EPRLF, பழம் பெரும் கம்யூனிஸ்ட்டுக்கள், சம உரிமை இயக்கம், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தோழர் ஈழமணி, தோழர் நேசன்(சம உரிமை இயக்கம்), ஆதவன், தோழர் மகேஸ் (ஈபிடிபி). தோழர் முருகன்(வாத்தி) (ரெலோ) தோழர் மித்திரன்(ஈபிடிபி). ஜோர்ஜ்(தாயகம்) தோழர் செழியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தோழர் ஜேம்ஸ் தனது தலமை உரையில் தமிழ் நாட்டில் ஆரம்பித்து மட்டக்களப்பு ஈறாக ஐரோப்பிய நாடுகள் பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானியா என்று நடைபெற்று முடிந்த தியாகிகள் தினம் சூரியன் இறுதியாக அஸ்தமனமாகும் கனடாவில் தற்போது ஆரம்பமானது என்று தனது உரையை ஆரம்பித்தார். ஈரோசிலிருந்து ஆரம்பித்த விடுதலை அமைப்பின் பயணம் ஈபிஆர்எல்எவ் என்று பரிணாமம் அடைந்து பத்மநாபா ஈபிஆர்எல்எவ் என்று மாற்றம் அடைந்து யுத்தத்தின் முடிவிலான 2009 இற்கு பிற்பட்ட 6 வருடப் பயணத்தில் எமக்கு கிடைத்த அனுபவங்கள் வரலாற்று தேவைகளை கருத்தில் கொண்டு பத்மநாபா மக்கள் முன்னணி(PPF) என்ற மக்கள் அமைப்பாகவும் இதன் அரசியல் கட்சியாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும்(SDPT) இந்த வருடம் மார்ச் மாதம் யாழ்பாணத்தில் நடைபெற்ற பேராளர் மகா நாட்டின் முடிவில் உருவானது என்ற புதிய கட்சிஇ முன்னணியின் தோற்றத்தை தெளிவு படுத்தினார்.

மேலும் தோழர் ஜேம்ஸ் தனது உரையில் தோழர் ஸ்ராலின் அண்ணா தோழர் நாபா இருவரும் தாம் பிறந்த நாட்டிற்கு அப்பால் ஏனைய நாடுகளின் விடுதலை பற்றியும் சிந்தித்தவர்கள்; செயற்பட்டவர்கள். தோழர் நாபா தமிழ்நாட்டு மலைவாழ் மக்கள் மதியிலும் ஏனைய உழைக்கும் மக்கள் மத்தியிலும் தனது இரகசிய அரசியல் வேலைகளை தமிழ் நாட்டின் மாக்ஸ்சிட்ஸ் லெனிஸ்ட் கட்சியுடன் இணைந்து முன்னெடுத்ததைப் போல் தோழர் ஸ்ராலின் அண்ணாவும் ஈழவிடுதலைக்கான சகல அர்பணிப்புக்களையும் தனது தேசம் கடந்து செயற்படுத்தியவர். இவர்கள் இருவரும் சாரம்சத்தில் சர்வதேசியவாதிகளாக தமது போராட்ட வாழ்வை கொண்டிருந்தவர்கள் என்றார்.

தோழர் ஸ்ராலின் அண்ணாவின் முன் முயற்சியினாலும் அன்றைய ஈபிஆர்எல்எவ் இனராலும் சுய தயாரிப்பில் உருவாக்கப்பட்ட மோட்டார் ஆயுதமே திம்பு பேச்சுவார்த்தயின் தோல்வியின் பின்னரான முகாங்களை விட்டு வெளியே நகர முற்பட்ட இராணுவத்தை முகாங்களுக்குள் முடக்கியது. இதில் யாழ் கோட்டை இராணுவத்தில் வெளியேற்றத்தை தடுத்தலில் புளொட் ரெலோ அமைப்புக்களும் இணைந்து செயற்படுத்தி இதனை வெற்றிகரமாக செயற்படுத்த முடிந்தது. இதில் தோழர் ஸ்ராலின் அண்ணாவின் மோட்டார் தயாரிப்பு பங்களிப்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும் என்றார்
மேலும் ஈழவிடுதலைக்காக தம்மை அர்பணித்த போராளிகளை பொது மக்களை மரியாதை செலும் நிகழ்விற்கான ஒரு பொது தினத்தை நாம் கண்டே ஆகவேண்டும் என்ற தனது கடந்த கால கோரிக்கை சகல அமைப்புக்கள் முன்னிலையிலும் மீண்டும் முன்வைத்தார்.

இதற்கான காலக்கெடுவுடனான செயற்பாட்டை இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப் போவதாகவும் மேலும் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலை புலிகள் தவிர்ந்த ஏனைய ஈழவிடுதலை அமைப்புக்கள் போராட்டவரலாற்றில் ஏற்பட்ட தவறுகள் பிழைகளுக்கான சுயவிமர்சனங்களை செய்தும் செய்யும் மனோ நிலையில் இருக்கையில் புலிகளின் ஐயர் தொடக்கம் தமிழினி வரை புலிகள் செய்த தவறுகளுக்கான சுய விமர்சன முன்னெடுப்புக்கள் ஏதும் செய்ததாக அறிய முடியவில்லை. மேலும் புலிகளின் ஸ்தானபன ரீதியான மாற்றுக் கருத்தாளர்களை அனுமதியாமை ஏகபோகச் செயற்பாடுகளுடன் ஏனைய விடுதலை அமைப்புக் கொன்றொழித்தல் போன்றவற்றை ஏனைய விடுதலை அமைப்புக்களின் நடைமுறைத் தவறுகளுடன் சமப்படுத்தியோ அல்லது ஒப்பிட்டோ பேசுவது ஒரு மிகவும் தவறான விடயம் என்றார்.

ஈழ மணி தனது பேச்சில் இம்முறை நடைபெறும் தியாகிகள் தின தலமை உரைஇ இதற்காக அடிக்கப்பட்ட போஸ்ரல் எல்லாம் சகலரையும் அணைத்துப் போகும் ஒரு போக்கினைக் கொண்டதாக அமைவதை தாம் அவதரிக்கின்றதாக பாராட்டி பேசினார். புலிகளின் தலமைக்கு அப்பால் நபர்களாக தமது தவறுகளை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் முன்னாள் புலி உறுப்பினர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் மகேஸ்வரி வேலாயுதம் என்ற சமூக செயற்பாட்டாளரின் படத்தையும் குறியீட்டு ரீதியாகவேனும் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் கருத்துரைத்தார். கூடவே பிரான்சிஸ் சேவியர் என்ற மனித உரிமை செயற்பாட்டாளரையும் நாம் இவ்விடத்தில் நினைவு கூறல் சாலச்சிறந்தது என்றார்.

ஆதவன் பேசும் போது ஈழவிடுதலைப் போரட்டத்தில் நடைபெற்ற தவறுகளுக்கு கூட்டப்பொறுப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் புலிகளையும் அவர்கள் செய்த தவறுகளை ஒத்துக்கொள்ள நிர்பந்தத்திற்குள் உள்ளாக்க முடியும் என்றார்இ தோழர் சொபேட் கேதீஸ் ஆகியோரின் தியாகங்களும் இங்கு கிலாகிக்கப்படவேண்டியவை என்றார்.

தோழர் மகேஸ் தனதுரையில் அரசயில் தவறுகளைத் திருத்திக் கொள்ளாதவரை நாம் இனிவரும் காலங்களில் சரியாக செயற்படுத்த முடியாது என்றார் தோழர் நாபாவிடம் இருந்தபல பண்புகளை தான் தோழர் தேவாவிடம் கண்டதாக நடைமுறையில் நடந்த விடயங்களை எடுத்தியம்பினார்.

தோழர் வாத்தி தோழர் நாபாவின் எளிமை இலகுவில் யாரும் அணுகி பேசக்கூடடிய பண்பு என்று பலவற்றை அவரிடம் அனுபவத்தில் கண்டதாக கூறினார் ஈழவிடுதலைக்கா இந்தியா வழங்கிய பங்களிப்பை பற்றி விளக்கமாக எடுத்தியபிய இவர் புலிகளின் செயற்பாடு இந்திய அரசை இலங்கை தமிழ் மக்களுக்கு அப்பால் நகர்த்தும் செயற்பாடாக அமைந்தன என்றார்.

தோழர் மித்திரன் பேசும் போது தோழர் நாபாவிற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி உண்மையான ஐக்கியம் பற்றிய செயற்பாடாகவே இருக்க முடியும் என்றார். உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்புதல் ஐக்கியத்திற்கு எதிரான செயற்பாடாக அமையும் என்றும் சுயவிமர்சனம் என்பதுவும் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்புதல் என்பதுவும் இரண்டும் வேறு வேறானவை என்றார்.

முரண்பாடுகளுக்குள் உடன்பாட்டை தேடுதலுக்கு பதிலாக உடன்பாடுகளுக்குள் முரண்பாட்டை தேடுதல் என்ற அணுகு முறை பொதுவான வணக்க தினத்தைக் கண்டு பிடிப்பதற்கான ஒரு அணுகு முறையாக இருக்க முடியும். துpயாகி சிவகுமாரனின் நினைவு தினம் இதற்கு பொருத்தமான தினமாக பலராலும் அடையாளப்படுதப்படலாம் என்றும் கருத்து தெரிவித்தர் ஜோர்ஜ்.

எல்லோருடைய பேச்சிலும் போராட்டத்திற்கு தம்மை அர்பணித்த பொது மக்கள் போராளிகளை மரியாதை செலுத்தும் ஒரு பொது தினத்தை கண்டு பிடித்தல் என்பதில் ஒருமித்த கருத்து இருப்பதை அவதானிக்க முடியந்தது. மேலும் தோழர் நாபா எளிமையான் மனித நேயம் மிக்க மதிப்பு மிக்க தலைவர் என்பதுவும் பொதுக் கருப்பொருளாக இருந்தது. மேலும் ஐக்கியமான செயற்பாடும் புலிகளின் தவறுகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியன அல்ல என்ற கருத்துப் போக்குகளும் எல்லோரின் பேச்சிலும் பொதுப் பொருளாக தெறித்து வந்தன.