பிரதமர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; அற்பமான அரசியல் செய்யாதீர்கள்: மோடியை விளாசிய சத்ருகன் சின்ஹா

நாட்டு மக்களில் யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு வரமுடியும். எதிர்க்கட்சிகளை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து, அற்பமான அரசியல் செய்யாதீர்கள் என்று பிரதமர் மோடியை பாஜக எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரான சத்ருஹன் சின்ஹா அவ்வப்போது கட்சியின் தலைமையை விமர்சித்தும், கட்சியின் தவறான செயல்பாடுகளைத் துணிச்சலாகவும் பேசி அவ்வப்போது அறிக்கை வெளியிடுவார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்து பிரச்சாரம் செய்தார்., காங்கிரஸ் தற்போது ஆட்சியில் இருக்கும் மாநிலத்தையும் இந்தத் தேர்தலில் இழந்துவிடும், பழைமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி, பிபிபி கட்சியாக மாறும். அதாவது, பஞ்சாப், புதுச்சேரி பரிவார் (பிபிபி) என்று பிரதமர் மோடி கிண்டலடித்து புது விளக்கம் கொடுத்தார்.

இது குறித்து பாஜக மூத்த தலைவரும், நடிகருமான சத்ருஹன் சின்ஹா ட்விட்டரில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து இன்று பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”எந்தத் தேர்தலிலும் மற்றொரு அரசியல் கட்சியை 130 கோடி மக்களும் சிரிக்கும் படியாகக் கிண்டல் செய்து விளக்கம் அளித்து எந்த ஒரு பிரதமரும் இனி வரமாட்டார்கள்.

மரியாதைக்குரிய பிரதமர் மோடியின் பேச்சு நடையும், பிபிபி என்பதற்கான விளக்கமும், எப்படி இருந்தது என்றால், எல்கேஜி படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதுபோல் இருந்தது. பிரதமர் சார், ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், இந்த நாடு பள்ளிக்கூடம் அல்ல.

பஞ்சாப், புதுச்சேரி, பரிவார் என்ற பிபிபி எனும் வார்த்தையும், அதற்கான விளக்கமும் அற்பத்தனமான அரசியலைக் காட்டுகிறது. தேர்தலில் தோற்றுவிடுவோம், வீழ்ந்துவிடுவோம் என்ற அச்சத்தை உறுதிப்படுத்துகிறது. தேர்தலில் வெற்றி பெற எந்த ஒரு கலையைக் கற்றாலும் முடியாது. மக்களின் மனங்களை வெல்வதன் மூலமே தேர்தலில் வெற்றி கிட்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த பயத்தைப் போக்குவதன் மூலம் முடியும்.

பிரதமர் பதவிக்கான நாற்காலி உங்களுக்கானது மட்டுமல்ல, மீண்டும் நீங்கள் இந்தப் பதவியில் அமர்வீர்கள் என்பதும் உறுதி இல்லை. ஆனால் நீங்கள் மீண்டும் பிரதமராக வருவதற்கும் குரல் கொடுப்போம். எங்களை உயர்த்துவதற்கும், பாதுகாப்பதற்கும், எங்களைப் வெளிப்படுத்திக்கொள்வதற்கும்கூட நாங்கள் குரல் கொடுப்போம்.

ஆனால், உங்களிடம் இருந்து குறைந்தபட்சம் முதிர்ச்சியான, ஆய்வு செய்து, சிறிது விவரங்களுடன் புத்திசாலித்தனமான பேச்சை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் ஊடகங்களின் ஆதரவையும், எங்களின் ஆதரவையும் பலமாக பெற்று இருக்கிறீர்கள். அதனால், இப்படிப் பேசுகிறீர்கள்.

நாட்டின் மிகப் பழமையான, மிகப்பெரிய கட்சியின் (காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி) தலைவர் பிரதமராக வருவதில் என்ன தவறு இருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் என்ன செய்வது.

(ராகுல் காந்தி) பழைமை வாய்ந்த கட்சியின் தலைவர் வெகுஜன மத்தியில் மிகுந்த புகழ்பெற்றவராக வளர்ந்து வருகிறார். அவரை மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். யார் வேண்டுமானாலும் கனவு காண முடியும். கனவு கண்டால்தான், அந்தக் கனவை நாம் நிறைவேற்ற, நனவாக்க முடியும். நான் முன்பு உங்களுக்குச் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன். பிரதமராக வருவதற்கு ஒருவருக்கு எந்தவிதான தகுதியும் தேவையில்லை, சிறப்பு ஞானமும் தேவையில்லை.

இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமராக வர முடியும். சாமானியர், சமூகத்தில் புகழ்பெற்றவர், அரசு அதிகாரி என யார் வேண்டுமானாலும் பிரதமராக வரலாம். எதற்காக நாம் பிரதமர் பதவியை நினைத்து நாம் அழுது, கூக்குரலிட வேண்டும். இது உட்கட்சி விவகாரம் சம்பந்தப்பட்டது அல்ல. பெரும்பான்மை மக்கள் வாக்குகளால் பிரதமர் பதவி முடிவு செய்யப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய, பழமையான கட்சியின் தலைவர் (ராகுல் காந்தி) கடந்த சில ஆண்டுகளாக முதிர்ச்சியுடன், சிறப்பாகப் பேசுகிறார். ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி தரும் கேள்விகளைக் கேட்கிறார். ஆனால், அதற்கு பாஜக அரசாலும், பிரதமராலும் பதில் கூற முடியவில்லை. நிரவ் மோடி, லலித் மோடி, மல்லையா, வங்கி மோசடி, ரபேல் போர் விமானக் கொள்முதல் என எதற்கும் அரசு பதில் அளிக்கவில்லை.

இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, மக்களின் கவனத்தை திசைதிருப்பும் அரசியலை அரசு செய்கிறது. இந்தக் கலையில் அரசும், பிரதமரும் வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால், வளர்ச்சி மற்றும் மற்ற விஷயங்களில் இல்லை.

உங்களுக்கு அறிவுரை கூறுபவர்கள் எப்படிப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வியந்திருக்கிறேன்.

உங்களைச் சுற்றி இருக்கும் நபர்களைப் பற்றி பேசுகிறேன். அவர்கள் குழப்பமடைந்தவர்களாக, நம்பிக்கை அற்றவர்களாக, புத்திக்கூர்மை அற்றவர்களாக, தவறான தகவல்களை தருபவர்களாக, பரப்புபவர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன். இவர்கள்தான் ஜனநாயகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் உங்களுக்கு அறிவுரை கூட துணிச்சல் உள்ளவர்களா?

இவ்வாறு சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.