பிள்ளையான் கைதின் பின்னணியில் கூட்டமைப்பு!

பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. வடக்கு கிழக்கை இணைக்கும் யோசணைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே கூட்டமைப்பு பிள்ளையானை காட்டிக் கொடுக்க காரணம் என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க,கருணா அம்மான் மற்றும் கே.பி ஆகியோரை கைது செய்வதாக கூறி மார் தட்டிக்கொண்ட அரசாங்கம் இன்று மௌனித்து இருப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பேதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த தேர்தலில் வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. அதற்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார். நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைத்து பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என கூறியிருந்தார். இதனை மனதில் வைத்து கொண்டு செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிள்ளையானை பழிவாங்க அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டது.

இதன் பின்னணியிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கருணா அம்மான் தேரர்களை கொலை செய்ததாக கூறினாலும் அதற்கு போதிய சாட்சிகள் இல்லை. ஆனால் அவர் யுத்தத்தின் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கடந்த அரசாங்கத்துடன் நாட்டின்அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். இந்த நிலையில் அரசாங்கத்துடன் கடந்த தேர்தலில் பங்காளிகளாக இணைந்து கொண்ட சகோதரர்கள் கே.பியை மற்றும் கருணாவை கைது செய்வதாக கூறிவந்தனர். ஆனால் இன்று என்ன நடந்துள்ளது. அனைத்திலும் அரசியல் நோக்கங்கள் என அவர் குறிப்பிட்டார்.