முஸ்லிம்களின் தலைமை கிழக்கில்தான் இருக்க வேண்டும் என்கின்றார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர்!

இலங்கையை பொறுத்த வரை முஸ்லிம்களின் தலைமை கிழக்கு மாகாணத்தில்தான் இருக்க வேண்டும், ஏனெனில் கிழக்கு மாகாணத்தில்தான் அதிக முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.

தூய தலைவர்களான எம். எச். எம். அஷ்ரப், பரீத் மீராலெப்பை ஆகியோரை நினைவு கூருகின்ற வைபவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்தின் ஆசியுடன் அஷ்ரப் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இதன் தலைவர் முஹைதீன்பாபா தலைமையில் ஏறாவூர் ஜுப்ரியா வித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இதில் பேராளர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாஜிர் சாலி, தொழிலதிபர் நஸார் ஹாஜியார், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கு ஜவாஹிர் சாலி தொடர்ந்து பேசியவை வருமாறு:-
தலைவர்களுடைய தன்மைகளை நாங்கள் எமக்குள் உள்வாங்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை நாம் நினைவு கூருகின்றோம். முஸ்லிம்களுக்கு அரசியல் எழுச்சியை ஏற்படுத்தி கொடுத்தவர் தலைவர் அஷ்ரப். முஸ்லிம்களை மரியாதையோடும், கண்ணியத்தோடும், நியாயமான பயத்தோடும் ஏனைய சமூகங்களை பார்க்க வைத்தவர். பேரம் பேசும் அரசியலை செய்தவர். 12. 5 வீத வெட்டு புள்ளி முறைமையை இவர் 5 வீதமாக குறைப்பித்து கொடுத்ததால்தான் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் மயிரிழையில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார் என்பது வரலாறு ஆகும். தலைவர் அஷ்ரப் இனத்துக்காக போராடியவர். யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்டு செல்ல நந்தி கடலில் ஒரு நீர்மூழ்கி கப்பல் காத்து நின்றது என்றும் ஆனால் புலிகளின் தலைவர் அதில் தப்பி செல்ல நிச்சயமாக மறுத்து விட்டார் என்றும் இறுதி வரை களத்தில் நின்று போராடினார் என்றும் அறிகின்றோம். இந்த பற்றுறுதி காரணமாகத்தான் தமிழரின் போராட்டம் புலிகள் அழிந்த பிற்பாடும் ஏதோ ஒரு வகையில் தழைத்தோங்கி காணப்படுகின்றது. சமஷ்டி என்கிற பெயரில் தமிழீழம் கிடைக்க இருக்கின்றது. தமிழர்கள் அவர்களுடைய போராட்டத்தில் வெற்றி அடைந்து உள்ளனர். புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்த கொள்கைப்பற்று தலைவர் அஷ்ரப்பிடம் காணப்பட்டது.
கிழக்கு மாகாண சபையில் 20 ஆவது அரசமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் வாக்களித்தனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்கிற முன்நிபந்தனையை அரசாங்கத்துக்கு விதித்திருந்த நிலையிலேயே கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்விதம் ஆதரவு வழங்கி உள்ளது என்று இக்கூட்டமைப்பின் சுமந்திரன் எம். பி தெரிவித்து உள்ளார். மூடிய அறைக்குள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேசி உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளார். ஆனால் இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கை உயர்த்தியதில் முஸ்லிம் சமுதாயத்துக்கு எந்தவொரு நன்மையும் உண்மையில் கிடையாது. மாறாக இவ்விதம் செய்ததன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை தமிழர்களுக்கு காட்டி கொடுத்து விட்டனர். சாணக்கியம் என்கிற பெயரில் சாணக்கியம் அற்ற அரசியலையே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேற்கொண்டு வருகின்றார். முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்து விட்டார். கட்சி அழிய கூடாது என்பதற்காக நான் பல தேர்தல்களில் இவரின் வெற்றிக்கு பெரிதும் உழைத்து இருக்கின்றேன். ஆனால் இன்று அரசியல் அநாதையாக நிற்கின்றேன்.