லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்…

மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும். அவன் வாழ்கின்ற சூழலை அது சார்ந்திருக்கும். ஊரோடு வாழ்ந்து சொந்தங்களோடு மரணித்துப் போவதையே மகிழ்ச்சியாகக் கருதிய ஒரு காலம் இன்று மலையேறிவிட்டது. பண வெறியையும் நுகர்வுக் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்தி மகிழ்ச்சி என்பது மரணிக்கும் நேரத்தில் மனிதனிடமிருக்கும் நுகரும் திறனைக் கொண்டே மதிப்பிடப்படும் இன்றைய நவ-தாராளவாத முதலாளித்துவக் கலாச்சாரம் ஊருக்கு ஏற்றுமதி செயப்பட்ட முறை தனியானது. புலம்பெயர்ந்து தேசியவாதிகளான சந்ததி போரின் ஊடாக போராட்டம் என்ற தலையங்கத்தில் அதனை ஏற்றுமதி செய்தது.

தேசியம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட வியாபாரம் மக்களின் பிணங்களின் மீது வியாபாரம் நடத்துவதைப் பொதுப்புத்தியாக மாற்றியது. கொலையையும், கொள்ளையையும், நயவஞ்சகத்தனத்தையும் நியாயப்படுத்தியது. ஏலவே உலகைச் சிதைத்துக்கொண்டிருந்த நுகர்வுக் கலாச்சாரத்தை புதிய வெறித்தனத்தோடு ஈழத்தை நோக்கி ஏற்றுமதி செய்த சந்ததி இன்றும் தேசியத்தின் பெயரால் பணத்தைச் சுருட்டுவதற்குப் புதிய வழிமுறைகளை நாடிக்கொள்கிறது.

அடையாளங்களையும், போரில் மரணித்துப் போனவர்களையும், போராளிகளையும், போர்க்குற்ற விசாரணையையும் கலாச்சாரத்தையும் விற்றுப் பிழைக்க அது கற்றுக்கொண்டுள்ளது.இரத்தம் தோய்ந்த பணத்தில் வயிற்றுப் பிழைப்பு நடத்தும் இக் கும்பல்கள் தமது வியாபாரத்தை இன்னும் வெற்றிகரமாகவே நடத்தி வருகின்றன.

தாம் கையாடிய பணத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக இலங்கையிலுள்ள சில முகவர்களைப் பயன்படுத்தும் இக் குழுக்கள் அங்கு உதவித்திட்டம் என்ற பெயரில் சிறிய தொகைப் பணத்தை செலவு செய்கின்றன. உதவி என்ற பெயரில் அவர்கள் தம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரணை அமைத்துக்கொள்கின்றனர். மக்களதும் போராளிகளதும் இரத்தம் தோய்ந்த அவலத்தைப் பயன்படுத்தி கொள்ளையிடப்பட்ட பணம் என்று தெரிந்துகொண்டே சில உள்ளூர் முகவர்கள் கொள்ளைக்காரர்களுக்கான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பது அருவருக்கத்தக்க உண்மை.

இவற்றை எல்லாம் தெரிந்துகொண்ட புதிய சந்ததி ஏமாற்று வழிகளைப் பயன்படுத்தி மனித உழைப்பின்றி பணம் சம்பாதித்துக்கொள்வதை நியாயமானதாகக் கருதுகிறது. இதுவே சமூகத்தின் பொதுப்புத்தியாகக் கட்டமைக்கப்படும் ஆபத்தான சூழலே இன்றைய யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியதரவர்க்க சிந்தனையாக உருமாற்றம் பெற்றுள்ளது.

இதே போன்ற புதிய சந்ததி ஒன்றின் திருமண விழா தொடர்பாக சண் என்ற ஆங்கில நாளிதழில் வெளியான தகவல் கட்டுரை ஒன்று நமது புலம்பெயர் சமூகத்தின் ‘தேசிய’ வியாபாரத்தோடும் தொடர்புடையது.
சண் நாழிதழ் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

‘ஒரு தொழிற்சாலையில் பக்கிங்(Packing) வேலையில் சேர்ந்துள்ள கிஷோக் தவராஜா ஜோர்ஜ் குலூனி போன்று திருமண வைபவம் ஒன்றை நடத்தியுள்ளார்’ (Kisok Thavarajah, who also had a stint as a packer in a factory, ‘got married like George Clooney’) எனது கணவரே அனைத்துச் செலவுகளையும் பொறுப்பெடுத்துக்கொண்டார், ஜோர்ஜ் குலூனி போன்று திருமண வைபவத்தை நடத்தி முடித்தார் எனக் கூறிப் பெருமைப்பட்டுக்கொண்டவர் கிஷோக் இன் மனைவியான கிருதிகா ஸ்கந்ததேவா என்கிறது சண் நாளிதழ்.

லண்டனில் அமைந்துள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் தமது நண்பர்கள் உறவினர்கள் சூழ நடத்தப்பட்ட இத் திருமண வைபவத்தின் ஒரு நாளைக்கான செலவுத் தொகை ஒரு லட்சம் பவுண்ஸ்.

கிஷோக், கிருதிகா என்ற இரண்டு தமிழர்களின் திருமணத்திற்கு 400 விருந்தாளிகள் சமூகமளித்திருந்தனர். தலைக்கு £150 விருந்து வழங்கப்பட்டுள்ளது. திருமண விழாவில் ‘அறுக்கப்பட்ட’ கேக் இன் விலை £3500. அவர்கள் உட்கார்ந்து திருமணவைபவத்தை நடத்திய மண்டபத்தின் நாள் வாடகை (£60000) அறுபதாயிரம் பவுண்ஸ்.

இவ்வளவு செலவுகளையும் ஏற்றுக்கொண்ட கிஷோக்கின் வருடாந்த வருமானம் (£16000 /Year) பதினாறாயிரம் பவுண்ஸ்கள் மட்டுமே என்கிறது சண். திருமணம் நடைபெற்று சரியாக ஒரு வாரத்தின் பின்னர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள நீதிமன்றத்தில் கிஷோக்கிற்கு எட்டுமாத சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. வங்கி அட்டை மோசடி தொடர்பான குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தாலேயே கிஷோகிற்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

4,400 பவுண்சை மட்டுமே மோசடி செய்ததாகக் கூறி கிஷோக் சாதுரியமாகத் தப்பித்துக்கொண்டார் என்று அவரது நண்பர்கள் கிஷோக்கின் திறமையைப் புகழ் பாடிக்கொள்ள புதிய இளைஞர் கூட்டம் அவதானித்துக்கொண்டிருக்கிறது.
கிஷோக்கின் ஆடம்பர திருமண வைபவத்தின் முன்னான தகவல்கள் சண் பத்திரிகையில் வெளியாகவில்லை.

மணப்பெண் கிருதிகாவின் தந்தை ஸ்கந்ததேவா லண்டனில் செல்வாக்கு மிக்க வர்த்தகர் என்பது மட்டுமல்ல, அறியப்பட்ட ‘தேசிய’ செயற்பாட்டாளர். முன்னர் பீ.ரீ.எப் இன் பொறுப்பாளராகவிருந்த ஸ்கந்ததேவா, இப்போது மாவீரர் துயிலும் இல்லம் என்ற விலையுயர்ந்த தமிழர்கள் சுற்றுலா மையம் ஒன்றை அமைத்துவரும் குழுவின் இணைப்பாளர். இதற்கான ஆரம்ப வைபவம் கூட ஒரு நட்சத்திர விடுதியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த இல்லத்தை அமைப்பதற்காக தென்னிந்தியாவிலிருந்து தேனிசை செல்லப்பா என்பவர் அழைக்கப்பட்டு இசை நிகழ்சிகளை லண்டனின் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இவர்கள் நடத்தினார்கள் என்பது அறியப்பட்ட தகவல்.

புலம்பெயர் ‘தேசிய வியாபாரம்’ இன்னும் செத்துப்போகவில்லை என்பதற்கு அந்த இல்லம் ஒரு வாழும் உதாரணம்.

கிஷோக் போன்ற 25 வயது இளைஞர்கள் குறுக்கு வழிகளில் பணம் திரட்டிக்கொள்ள முன்னுதாரணமாக இன்றைய தமிழ்ச் சமூகத்தின் தலைவர்களாக வரித்துக்கொண்டவர்களே காரணம் என்பதற்கு இத்திருமணமும் கிஷோக்கின் கைதும் குறியீடுகள்.

போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்ற பிரபலமான சுலோகம் தலை கீழாக மாறிவிட்டது, அவர்கள் புதைகுழிகளைப் பண மரங்களாக்கும் நயவஞ்சகர்கள் கூட்டம் எமது சமூகத்தை நீண்ட இருளுக்குள் அமிழ்த்தியுள்ளது. விடுதலையையும் பணத்தையும் குறுக்கு வழிகளின் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் என்ற பொதுப் புத்தியை புதிய சந்ததியின் மத்தியில் தோற்றுவித்துள்ளது. பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக ‘தேசிய வியாபாரிகளையும்’ பிழைப்புவாதிகளையும் அரசியல் நீக்கம் செய்வது அவசியமாகிறது.