ஸ்ரீ வித்யா… அதிசய ராகம்! – இன்று ஸ்ரீவித்யா பிறந்தநாள்


பெண்களின் கண்ணைப் பார்த்து பேசுவதே நாகரீகம் என்று சொல்லுவார்கள். ஸ்ரீவித்யாவிடம் பேசுகிற போது, அப்படி கண்ணைப் பார்த்துத்தான் பேசுவார்கள் எல்லோரும். தமிழ்த் திரையுலகில், டி.ஆர்.ராஜகுமாரியின் கண்கள் போதையூட்டக்கூடியவை என்பார்கள். அவரைப் பற்றி யார் எழுதினாலும், அவர் கண்களுக்கென ரெண்டு பாரா எழுதுவார்கள். டி.ஆர்.ராஜகுமாரிக்குப் பிறகு, சினிமாவில் அப்படியான கண்கள், ஸ்ரீவித்யாவுக்குத்தான். ஆனால், அவை போதையூட்டும் கண்கள் அல்ல. அழகால் ஈர்க்கும் கண்கள்.
ஸ்ரீவித்யாவின் சினிமாவைச் சொல்லும்போது, இயக்குநர் கே.பாலசந்தரையும் அவர் படங்களையும் சொல்லியாகவேண்டும். அவரின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் மூன்று சகோதரிகளில் ஒருவராக பிரமாதப் படுத்தியிருப்பார். மூவருமே சிவகுமாரைக் காதலிப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அப்ரோச் பண்ணுவார்கள். சமையல் கரண்டியால் கதவை ‘லொட்லொட்’டென்று தட்டி, சிவகுமாரை அழைப்பதே ஒரு கவிதையாக இருக்கும். அடிக்கடி கடிதத்தை போஸ்ட் செய்யக் கொடுப்பார். கடைசியில் ஒருநாள், தன் தங்கை ஜெயசித்ராவை, சிவக்குமார் காதலிக்கிறார் என்பது தெரியவரும் போது நொறுங்கிப்போய்விடுவார். ‘உங்ககிட்ட போஸ்ட் செய்யக் கொடுத்த கடிதங்களை ஒருதடவை கூட பிரிச்சுப் படிக்கலையா?’ என்று கேட்பார். ‘அடுத்தவங்களுக்குக் கொடுத்த கடிதத்தை பிரிச்சுப் படிக்கிறது தப்பாச்சுங்களே…’ என்பார் சிவக்குமார். ‘உண்மையிலயே நீங்க ஜென்டில்மேன்’ என்று கண்ணீருடனும் காதல் வலியுடனும் சொல்லுவார் ஸ்ரீவித்யா.
‘அபூர்வராகங்கள்’ திரைப்படத்தில், கர்நாடக சங்கீத பாடகியாக, பைரவியாகவே வாழ்ந்திருப்பார். ஒருபக்கம் விட்டுவிட்டு ஓடிப்போன ரஜினி, இன்னொரு பக்கம் மகளையே அனாதை ஆஸ்ரமத்தில் இருந்து எடுத்து வளர்ப்பதாகச் சொல்லும் கொடுமை, அது தெரிந்ததும் மகள் ஜெயசுதா, அம்மாவைப் பிரிந்து போகிற அவலம், இதனிடையே தன்னை விட வயது குறைவானவன் தன்னை நேசிப்பதைக் கேட்டு துடித்துப் பதறி தவிக்கும் மனோநிலை… கத்திமேல் நடக்கிற கதை மாந்தர்களில், ஸ்ரீவித்யா தன் நடிப்பாலும், முகபாவங்களாலும் முக்கியமாக கண்களாலும் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார்.
இளம் வயதிலேயே கொஞ்சம் உடல் பருமன் சேர்ந்துகொள்ள, முதிர்ந்த வயதுடைய கேரக்டர்கள் கிடைத்தன. பிறகு, நாயகியாக நடிக்கும் ஆயுள் குறையத் தொடங்கியது. ‘அபூர்வராகங்கள்’ படத்தில் ரஜினிக்கு மனைவியாகவும் கமலுக்கு காதலியாகவும் நடித்த ஸ்ரீவித்யா, பின்னாளில், அண்ணியாக, அம்மாவாக நடித்ததெல்லாம் தமிழ் சினிமாவின் சோகங்களில் ஒன்று. ஹீரோயின் கேரக்டர் இல்லை என்பதாலோ என்னவோ, தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டே இருந்தார். ‘புன்னகை மன்னன்’ படத்தில், நடனப் பள்ளி ஆசிரியை வேடம், அத்தனை கச்சிதமாகப் பொருந்தியது அவருக்கு.
‘கேளடி கண்மணி’யில் பேசமுடியாத, கேட்க இயலாத கேரக்டரில் வெளுத்து வாங்கியிருப்பார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்பு கமலுக்கு அம்மாவாக, இரண்டு கமலுக்கு அம்மாவாக இவரின் தனித்துவம் மிக்க நடிப்பு, எல்லோராலும் ரசிக்கப்பட்டது.
மணிரத்னம் இயக்கிய, ரஜினி நடித்த ‘தளபதி’ ஸ்ரீவித்யா நடிப்பில் உச்சம் தொட்ட படங்களில் ஒன்று. மகன் ரஜினியை பிறந்ததில் இருந்து பிரிந்த துக்கத்தை, கண்களாலேயே நமக்குள் சேர்த்து, சோகப்படுத்திவிடுவார். ஒவ்வொரு முறையும் அவரின் அந்தப் பிரிவுத்துயரம்… ஒவ்வொருவிதமாக சொல்லப்படும் போது, தமிழ் சினிமாவின் அம்மாக்களில், ஸ்பெஷல் அம்மாவாக ஒளிர்ந்தார் ஸ்ரீவித்யா.
ஸ்ரீவித்யாவை எல்லா இயக்குநர்களுக்கும் பிடிக்கும். எந்த பந்தாவும் இல்லாமல், கெடுபிடிகள் செய்யாமல் நடித்துக் கொடுத்துவிட்டுப் போவார். எல்லா நடிகர் நடிகையருக்கும் பிடிக்கும். சீனியர் நடிகை, சிறந்த நடிகை என்று ஈகோவெல்லாம் பார்க்கமாட்டார். எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கும். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் மிகச்சிறந்த நடிப்பை வழங்குவார்.
கமல், ரஜினிக்கு மட்டுமினிறி ‘இமயம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தவர்… ‘ஆஹா’ படத்தில் மடிசார் புடவையுடன் விஜயகுமாருக்கு மனைவியாகவும் வெளுத்து வாங்கினார். எழுத்துலகில், கதையின் நாயகிக்கு மடிசார் கட்டிக்கொண்ட மாமியாக மாடலிங் செய்தது, அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. சொல்லப்போனால் அந்தக் கதை, ஸ்ரீவித்யாவின் புகைப்படத்தாலேயே பிரபலமாயிற்று.
இத்தனை பேரும்புகழும் வாங்கிக் குவித்த ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை, அத்தனை சந்தோஷமாகவும் குதூகலமாகவும் இல்லை. நிம்மதியும் அமைதியும் குதூகலமும் இல்லாமல், வெறுமையான வாழ்வை வாழ்ந்து வந்தார். வெறுமனே வாழ்ந்து வந்தார். வெறுமையுடன் வாழ்ந்து வந்தார்.
ஆனாலும் நடிக்கும் வரை நல்ல நடிகை என்று பேரெடுத்திருந்தார். இறந்த பிறகும் கூட இன்றைக்கும் எல்லோராலும் மறக்காமல் இருக்கிறார். ஸ்ரீவித்யா என்பவர் அதிசயராகம். அந்த அதிசய ராகத்தின் பிறந்தநாள் இன்று (ஜூலை 24.7.19). 66வது பிறந்தநாள். ‘கேள்வியின் நாயகி’ ஸ்ரீவித்யாவை, ‘கேள்விக்குறி’ வாழ்க்கையாகிப் போன ஸ்ரீவித்யாவை… அற்புதமான நடிகை ஸ்ரீவித்யாவை போற்றுவோம்!