ஹர்த்தாலால் முடங்கியது யாழ்.நகர்… மட்டக்களப்பில் பிசு பிசுத்தது

தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ப. சரவணராஜா, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைபோல் இலங்கை போக்குவரத்து பஸ்வண்டிகள் தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகள் பாடசாலை சேவை பஸ்வண்டிகள் போக்குவரத்தில் ஈடுபட்டதுடன் சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராதிருந்தபோது பல பாடசாலைகளுக்கு 50 சதவீதமான மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வருகை தந்திருந்தனர்.

மாணவர்களுக்கான 2ம் தவணைபரீட்சை இடம்பெறுவதனால் பரீட்சை இடம்பெறுமா? இல்லையா? அல்லது பாடசாலை இல்லையா? என்ற நிலை தெரியாத  நிலையில்  பாடசாலைகளுக்கு மாணவர்களை  பெற்றோர்கள்  கொண்டு சென்று விட்டுவிட்டு வெளியே நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

  மாணவர்களுக்கான  பரீட்சை காலை 9-30 மணிக்கு இடம்பெறும் என பாடசாலைகளில் இருந்து அறிவித்ததையடுத்து  அல்லோலகல்லோலப்பட்ட பெற்றோர், வீட்டில் இருந்த மாணவர்கள் உடனடியாக  அவசர அவசரமாக அழைத்துச் சென்று பாடசாலைக்கு அனுப்பிவைத்தனர்.  

இதேவேளை, வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் போக்குவரத்து சேவையில் அரச, தனியார் பஸ்வண்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டன.