தேர்தல் கால மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா?

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் திரு ஆனந்தசங்கரி அவர்களின் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இனணந்து பலகட்சிகள் மெகா கூட்டணி ஒன்றை அமைக்கும் செய்தி ஒன்று தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த மெகா கூட்டணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும் இணைய உள்ளதாம்.

வடக்கு மாகாண சபையின் முக்கிய பிரமுகரும் இதில் அங்கமாகும் சாத்தியம் உண்டு என அறிய கிடைக்கிறது. ஆக தமிழ் தேசிய கூட்டமைப்பில் முக்கிய அங்கமான தமிழ் அரசு கட்சி மீது அதிருப்தி கொண்டவரின் கூட்டாகவே இது அமையும் என உணரமுடிகிறது. இங்கு தமிழ் அரசு கட்சி ஏனையவர்களுடன் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான கால சூழ்நிலை இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அன்று பலவாக பிரிந்து போட்டியிட்டு பலரும் தமது பதவியை இழந்த சூழ்நிலை. விகிதாசார பிரதி நிதித்துவம் காரணமாக தமிழ் உறுப்பினர்களின் இடத்தை ஏனையவர்களுக்கு பறிகொடுத்த நிலை. இந்த நிலைமையை மாற்ற விரும்பியவர் முயற்சியால் உருவானதே தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இதே சூழ்நிலை முன்பும் ஏற்பட்டு அமரர் அமிர்தலிங்கம் அமரர் சிவசிதம்பரம் போன்றவர்கள் படுதோல்வி அடைந்த போது அப்போதும் சில நலன் விரும்பிகள் முன் முயற்சியால் உருவான இணைப்பு தான் அதுவரை தமிழ் காங்கிரஸ்தமிழ் அரசு என பிரிந்திருந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தமிழர் விடுதலை கூட்டணி ஆகின. ஆக அதுவும் தேர்தல் தோல்வியால் உருவானதே.

இங்கு நாம் புரிந்து கொள்ளவேண்டியது ஒன்றே ஒன்று தான். தேர்தல் தோல்விகளால் மட்டுமே கூட்டணி மற்றும் கூட்டமைப்பு உருவாகுகின்றன. மாறாக உரிமைகளை வென்றெடுக்க இவர்கள் கூட்டணி அல்லது கூட்டமைப்பு உருவாக்க வில்லை. மேடைகளில் மட்டும் நாம் மக்கள் நலன் வேண்டியே இணைகிறோம் என்று முழங்குவது மக்கள் நெற்றியில் நாமம் போடும் செயல்.

எத்தனை காலம் தான் எந்த ஏமாற்று அரசியல் சித்து விளையாட்டை இவர்கள் தொடருவார்கள் என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை. அதற்கு இடையில் இன்னொரு புதிய மெகா கூட்டணி உருவாகிறது எனும் செய்தி வரும் போது நடிகர் வடிவேலு பாணியில் சொல்வதானால் ‘’வேணாம் வலிக்குது’’ ‘’விட்டுடுங்க அழுதுடுவேன்’’ என்று மட்டுமே என்னால் கூற முடிகிறது.

அரசியல் வாதிகளின் கூட்டு மட்டுமல்ல ஆயுத போராளிகள் கூட்டும் இறுதியில் அடைந்த நிலை என்ன என்பது நம் காலத்தில் நாம் கற்ற பட்டறிவு. ஆதாயம் எதிர்பார்க்கும் அரசியல் எம் இனத்துக்கு சேதாரம் விளைவித்த வேளையில் தம்மை விடுதலை தீயில் ஆகுரிதி ஆக்க புறப்பட்ட இளையவர் அன்று பல அமைப்புகளில் இருந்தனர். அவர்களை ஒருமுகப்படுத்த முனைந்தார் ஒருவர்.

அவர் தான் நாபா. பிரிவினை எம்மை பலவீனமாக்கும் என்ற அனுபவ உண்மை அவரை ஒற்றுமை பற்றிய சிந்தனையை செயல்படுத்த தூண்டியது. புளட் தவிர்ந்த ஏனைய நான்கு அமைப்புகள் இணைய ஈழ தேசிய விடுதலை முன்னணி உருவானது. ஆனால் அந்த கூடாரத்துள் இறுதியாக நுழைந்த ஒட்டகம் தனது செயலால் ஏனையவரை கலைத்து கூடாரத்தை தனதாக்கியது.

ஓட்டக தோல் போர்த்தி வந்த பிரபாகரன் ஏனைய போராளிகளையும் அதன் தலைமையையும் அன்று வேட்டையாடி இறுதியில் தன் முடிவுரை எழுதப்படும்வரை ஏனையவரை தனக்கு ஏவல் செய்யும் அடிமைகளை போல் தான் நடத்தினார். அந்த அடிமைகளின் கூட்டுத்தான் பாராளுமன்ற பதவிக்காக அன்று உருவான தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இங்கு ஒரு வேடிக்கையான எவரும் கவனத்தில் கொள்ளாத விடயம் ஒன்று உண்டு. அது தமிழ் ஈழம் தான் முடிந்த முடிவு என்ற பிரபாகரன் முடிவும் அதே வேளை பிரிவினைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்ற ஆறாவது திருத்தத் சட்டப்படி பாராளுமன்ற பதவியும். இன விடுதலைக்கு தனி நாடு பாராளுமன்ற பதவிக்கு சரணாகதி என்ற இரண்டும் கெட்டான் நிலை.

பிரபாகரன் இருக்கும் வரை அவருக்கு தலையாட்டிகளாக இருந்தவர்கள் அவர் மறைவிற்கு பின்னர் தமக்கு தலையாட்டிகளாக இருப்பவர்களை மட்டுமே உள்ளே வைத்திருந்தனர். திமிறிய சிலர் வெளியேறும் நிலை ஏற்ப்பட்டது. உள்ளே அவ்வப்போது புகைச்சல் இருந்தபோதும் அது கடந்த தேர்தலின் பின்பே உக்கிரம் அடைந்துள்ளது. காரணம் பிரேமசந்திரன் அடைந்த தோல்வி.

கூட்டமைப்பின் அங்கமான ஈ பி ஆர் எல் எப் தலைவர் என்ற வகையில் அவர் தோற்றாலும் அவருக்கு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கை இருந்தது. முன்பு அவர் சுமந்திரனுக்கு கொடுத்த குடைச்சல் காரணமாக இம்முறை கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி கொண்டது தமிழ் அரசு கட்சி. தேர்தலில் தோற்றவருக்கு தேசிய பட்டியல் இல்லை என்று கூறியது.

பின் யுத்த வடுக்களை காலில் சுமக்கும் பெண் என்ற வகையில் அது வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு தோற்ற சாந்தினிக்கு வழங்கப்பட்டது. தமிழ் அரசு கட்சியின் பிடியில் இருந்து விடுபட பிரேமசந்திரன் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை கூட்டமைப்பை பதிவிடல். காரணம் அவ்வாறு பதிவிட்டால் ஒரு காலத்தில் அதன் தலைமை பிரேமசந்திரன் கைக்கு வர வாய்ப்பு உண்டு.

அந்த விபத்தை தடுக்கவே தமிழ் அரசு கட்சி கூட்டமைப்பு பதிவு பற்றி அலட்டிக்கொள்வதில்லை. இன்று தான் கூட்டமைப்பில் தொடர்வதாகவும் ஆனால் தமிழ் அரசு கட்சியுடன் கூட்டோ அல்லது அதன் சின்னமான வீட்டு சின்னத்திலோ போட்டியிடபோவதில்லை என பிரேமசந்திரன் கூறுகிறார். திண்ணை எப்போது காலியாகும் என காத்திருக்கும் கட்சிக்கு இது சாதகமாகலாம்.

நீண்ட கால அரசியல் ஆயுத போராட்ட வரலாற்றில் தம்மை முன்னிலைப்படுத்தி செயல்ப்பட்ட வரதராஜபெருமாள் மற்றும் சிறீதரன் போன்றவர்கள் உள் முரண்பாடு காரணமாக இன்று SDPT என்ற அரசியல் கட்சியாக இயங்குகிறார்கள். ஆரம்பகால போராட்ட தோழர்களான மாவை சேனாதிராஜா வரதராஜபெருமாள் கூட்டை அன்று இடம்பெறாமல் செய்தவர் பிரேமசந்திரன்.

இன்று பிரேமசந்திரனே விலகி செல்லும் நிலையில் SDPT உள்வாங்கப்படுவதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. தமிழ் அரசு கட்சிடெலோபுளட் இந்த மூன்றுக்கும் SDPT புதியவர்கள் அல்ல. அவர்கள் முன்பு பத்மநாபா தலைமையில் உருவான ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் ஆரம்ப கர்த்தாக்கள். ஆக பிரேமசந்திரனின் ஈ பி ஆர் எல் எப் வெளியேறினால் SDPT உள்வாங்கப்படும்.

இதனால் கூட்டமைப்பு தனது இருப்பை தக்கவைக்கும். அதனால் தான் எதிர்வரும் அரசியல் ஆடுகளத்தில் கூட்டமைப்பை எதிர்கொள்ள ஒரு மெகா கூட்டணி உருவாகுகின்றது. நிரந்தர வாக்கு வங்கிகளை கொண்ட கூட்டமைப்பு கட்சிகளை தேர்தலில் தோற்கடிக்க அவர்கள் தீர்வு திட்டவரைபில் சிங்களத்துக்கு சோரம் போய்விட்டார்கள் என்ற கோசம் மட்டுமே எழும்.

மாறாக நிரந்தர தீர்வுக்கான திட்ட வரைவை மெகா கூட்டணி வைக்காது என்பது வெள்ளிடை மலை. ஒருவர் இந்தியன் மொடல் என்பார். மற்றவர் சமஸ்டி என்பார். இன்னொருவர் இரு நாடு ஒரு தேசம் என்பார். இப்படி ஆளுக்கொரு கொள்கை கோட்பாடுகளை கொண்ட இவர்கள் தாம் தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் ஒரு தேர்தல் அறிக்கை மட்டும் தயாரிப்பார்கள்.

மிகவும் உணர்சிகரமான கவர்ச்சிகரமான அவர்களின் அந்த தேர்தல் விஞ்ஞாபனம் மக்களின் அன்றாட பிரச்சனைகள் அனைத்துக்கும் உடனடி தீர்வு தரும் சர்வரோக நிவாரணி போலவே காட்சிப்படும். காரணம் இவர்கள் சர்வதேசத்திடம் எங்கள் பிரச்சனையை எடுத்து சென்று ஜெனிவாவில் கொடிபிடித்து கோசம் போட்டு அங்கும் அறைகளில் கூடி பேசும் வல்லவர்கள்.

நல்லாட்சி அரசுடன் இதயத்தால் இணைந்ததாக கூறிய சுமந்திரன் இதுவரை சாதித்தது என்ன என்ற கேள்வியும்ஆண்டு தோறும் பொங்கல் புதுவருடம் தீபாவளிக்கு தீர்வு வரும் என ஆரூடம் கூறும் சம்மந்தர் என்ன குடுகுடுப்பைகாரரா என்ற கேள்வியும் மேடை தோறும் கேட்கப்படும். முன்பு பாராளுமன்றம் சென்றவர்கள் செய்வோம் என சொன்னவையே பேசு பொருளாகும்.

மாறாக தாம் வைத்திருக்கும் நாட்டின் மூவின மக்களினாலும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வு பற்றி இவர்கள் எதுவும் பேசமாட்டார்கள். அப்படி யதார்த்தத்தை பேசினால் இவர்களுக்கு வாக்குகள் கிடைக்காது. வடக்கு கிழக்கு இணைப்பு உடனடி சாத்தியம் இல்லை என்று பேசினால் என்ன நடக்கும்இதை தானே கூட்டமைப்பும் இப்போது கூறுகிறது என்ற பதில் வரும்.

அரசியல் கைதிகள் விடுதலை தாமதம் ஆகும் என்று பேசினால் அதுதானே இப்போதும் நடக்கிறது என்ற பதில் வரும். மக்களின் காணிகளில் இருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற முடியாது என்று பேசினால் அதற்காக தானே நாம் உண்ணா விரதம் இருக்கிறோம் என்ற பதில் வரும். எனவே இவர்களும் வெற்றிக்காக வெற்று கோசங்கள் போடும் நிலை தான் வரும்.

ஆகவே வெற்று கோசங்கள் போட்டு மக்களை தங்கள் பக்கம் இழுக்கவா இந்த மெகா கூட்டணி என்ற நியாயமான சந்தேகம் எனக்கு எழுகிறது. காரணம் இதுவரை காலமும் இல்லாத அளவு இந்த நாட்டின் இனப்பிரச்சனைக்கு மூல காரணமாக இருந்த இரு பெரும் தென்னிலங்கை சிங்கள பேரினவாத கட்சிகள் இணைந்து ஒரு தீர்வை முன்வைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

முழுமையானதாக இல்லாவிடிலும் ஓரளவு ஏற்புடைய பின்பு
எவராலும் மீறப்படாத தீர்வுக்கான ஒப்பந்தம் எட்டப்படலாம். அது காலப்போக்கில் விரிவடையலாம். சில விடயத்தில் விட்டுக்கொடுப்புகள் தவிர்க்க முடியாதவை. விடாப்பிடியாக நின்று இதுவரை அரசியல் போராட்டத்திலோ அல்லது ஆயுத போராட்டத்திலோ நாம் பெற்றதை விட இழந்தது தான் மிக அதிகம் என்பதுதான் உண்மை.

இந்திய தலையீட்டால் உருவான வடக்கு கிழக்கு மாகாண சபை முழுமையாக இயங்கமுடியாத சூழ்நிலையை நாம்மவரே சிங்களத்துக்கு ஏற்படுத்தி கொடுத்தனர். இல்லை என்றால் அதிகார பரவலாக்கல் அன்றே முழுமை பெற்றிருக்கும். சந்திரிகா கொண்டு வந்த நீலன் பீரிஸ் கூட்டு தீர்வு நகலுக்கு அன்று ஆதரவு தெரிவித்திருந்தால் இன்று பிராந்திய சபை இருந்திருக்கும்.

கிடைத்ததை எல்லாம் விலத்திவந்த நாம்மவர் மாறி மாறி வந்த மத்திய அரசுகள் மீது பழியை போட்டு மக்களை தொடர் இன்னலில் வைத்திருக்கின்றனர். இன்று நல்லாட்சி என்ற பெயரில் இயங்கும் அரசு நாம் எதிர்பார்க்கும் முழுமையான தீர்வை தரப்போவது இல்லை என்பது உண்மை. ஆனால் ஓரளவு இருபகுதிக்கும் ஏற்புடைய தீர்வு வரும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

தீர்வு உள் இருந்து தான் வரமுடியும். அதை சர்வதேசம் திணிக்கும் என மேடைகளில் மட்டுமே முழங்க முடியும். அது நடைமுறை சாத்தியம் இல்லாத விடயம். இந்திய வல்லரசே கைகழுவிய விடயம். நாம் தான் பேசி தீர்க்க வேண்டும். அதற்கான முன் முயற்சிகள் நடக்கும் வேளையில் தேர்தலை கவனத்தில் கொண்டு அமையும் மெகா கூட்டணியால் மக்களுக்கு பயன் இல்லை.

 

– ராம் –