அரசியலையும் ஆட்டிப்படைக்கும் மின்சாரம்

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கத்துக்கு அடுத்த சவாலாக மாறியிருக்கிறது மின்சாரத் தடை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடை, நாடு முழுவதையும் பல மணி நேரம் இருளில் மூழ்கச் செய்திருந்தது. பல இடங்களில் மின்சார விநியோகம் சீராக, இரவு 10 மணிக்கு மேல் சென்றது. இதற்கு முன்னர், கடந்த சில மாதங்களுக்குள் இரண்டு தடவைகள் இதுபோன்ற நாடளாவிய மின்சாரத் தடை ஏற்பட்டது.

நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது ‘ஆசியாவின் ஒளி’ என்று அவர் புகழாரம் சூட்டிய அடுத்தடுத்த நாட்களில் இரண்டாவது தடவையாக மின்சாரத் தடை ஏற்பட்டது. அப்போது நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ கண்டியில் தங்கியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மூன்றாவது மின்சாரத் தடை முன்னிரவு வரை நீடித்ததும், கடும் கோடை வெப்பம் நிலவும் காலம் என்பதாலும் பெரும்பாலான மக்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது.

அந்த மின்சாரத் தடை அன்று ஒருநாளுடன் முடிந்து போகவில்லை, நாளாந்தம் ஏழரை மணிநேர மின்சாரத் தடை அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது.

மின்சாரத் தடை என்பது இலங்கையின் புதியதொரு விடயமல்ல என்றாலும் இப்போதைய காலப்பகுதியில் இது ஒரு பாரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஏனென்றால், மின்சாரத்தை நம்பியே வாழ்வியக்கம் என்று மாறிவிட்ட சூழலில், திடீரென ஏற்பட்ட மின்தடை மக்களைச் செயலற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது. மூன்று தசாப்தமாக நீடித்த போரின் பெரும்பாலான காலப்பகுதியில், வடக்கிலுள்ள மக்களில் கணிசமானவர்கள் மின்சாரத்தின் பயனை துளியும் அனுபவிக்காதவர்களாகவே இருந்தனர்.

குப்பி விளக்கிலேயே பிறந்து, படித்து பல்கலைக்கழகம் சென்ற ஒரு தலைமுறையும் கூட அங்கு உருவாகியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் வடக்கில் இருந்த மக்களுக்கு மின்சாரம் என்பது அவர்களின் வாழ்வியக்கத்தை நிர்ணயிக்கும் ஒரு விவகாரமாக இருக்கவில்லை.

மின்சாரம் இல்லாமலேயே எல்லாவற்றையும் செய்யப் பழகிக் கொண்டார்கள். சூழலுக்கேற்ப வாழும் முறையை வகுத்துக் கொண்டதால், வடக்கில் இருந்த மக்களுக்கு மின்சாரம் ஒரு பெரிய பிரச்சினைக்குரிய விடயமாகவும் இருக்கவில்லை, அந்தச் சூழலை எதிர்கொள்வதை விட வேறுவழி அவர்களுக்கு இருக்கவுமில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முந்திய அந்த நிலை வேறு, இப்போதைய நிலை வேறு. அப்போதைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்கள், வெளியூர்க் கடிதங்களைப் பெறுவதற்கு கப்பல்களை பார்த்திருக்க வேண்டியிருந்தது. மாதக்கணக்கில் தவம் கிடந்த பின்னரே கடிதங்கள் கூடக் கிடைக்கும்.

இப்போது, அலைபேசி யுகத்தில், அரை மணிநேரம் அலைபேசி சேவை முடங்கினால் கூட பலருக்குத் தலைவலி வந்து விடும். சமூக வலைத்தளங்களுக்குள் நுழையாமல் போனால் பலருக்குத் தூக்கமே வராது. இப்படி தொழில்நுட்ப மாற்றங்களும் வசதி வாய்ப்புகளும் வாழ்க்கை முறையை மாற்றி விட்டன. இதனால்தான், இப்போதைய மின்சாரத்தடை, அரசாங்கத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வடக்கு மட்டுமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளும் கூட மின்சாரத் தடையினால் அவதிப்பட்ட வரலாறு ஒன்றும் உள்ளது. 1996ஆம் ஆண்டு, நாட்டில் ஏற்பட்ட வரட்சியினால், நீர்த்தேக்கங்கள் வற்றிப் போக, மின்சாரத் தடை தலைவிரித்தாடியது. அப்போது உற்பத்தியாகும் மின்சாரத்தை வடக்குக்குக் கூட வழங்க வேண்டிய தேவை இருக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வன்னியில் தீவிரப்படுத்தப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்தில், போருக்குத் தலைமை தாங்கியவர் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகாவின் மாமனாரான ஜெனரல் அனுருத்த ரத்வத்தை.

பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக இருந்த அவர் தான், மின்சக்தி அமைச்சராகவும் அப்போது பதவியில் இருந்தார். இரண்டுமே, அவருக்குத் தலைவலியாக அப்போது அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்தில், ஒரு பக்கத்தில் மின்சார பற்றாக்குறையயை எதிர்கொள்ள, புலிகளும் ஜெனரல் ரத்வத்தைக்கு நெருக்கடி கொடுப்பதற்காக மின்சார விநியோக கட்டமைப்பை சீர்குலைத்து வந்தனர். நாட்டின் பல பகுதிகளிலும், மின்சார ட்ரான்ஸ்போமர்கள் குண்டுவைத்து அழிக்கப்பட்டன. இதனால் ஜெனரல் ரத்வத்தையின் நெருக்கடி இன்னும் இன்னும் அதிகமானது.

அந்தக் காலகட்டத்தில் பல மணிநேரம், மின்சாரத் தடை அமுலானது. இதனால், அதிகளவில் ஜெனரேற்றர்களையே நம்ப வேண்டிய நிலை வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்டது.

அதைவிட, இலங்கையின் நியமநேரத்தை அரசாங்கம் மாற்றியமைத்தது. 1996 மே மாதம், இலங்கையின் நியம நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்பட்டது.

ஜிஎம்.ரி நேரத்துக்கும், இலங்கை நேரத்துக்கும் இடையில் வழக்கமாக இருந்து வந்த 5.30 மணிநேர இடைவெளி இதனால், 6.30 மணிநேர இடைவெளியாக அதிகரித்தது.

அது பொதுமக்களுக்குப் பெரிதும் சிரமங்களை ஏற்படுத்தியது. மக்கள் மத்தியில் குழப்பமான நிலை ஏற்பட்டது. இதையடுத்து. 1996 ஒக்ரோபரிலேயே, ஜி.எம்.ரி நேரத்துக்கும் இலங்கையின் நியம நேரத்துக்கும் இடையிலான வெளி, 6 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா, இலங்கையில் வழக்கமாக இருந்த நேரத்துக்கும் இலங்கையின் நியமநேரத்துக்கும் இடையில் அரை மணிநேர வேறுபாடு இருந்தது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர், 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி- வழக்கமான நேரம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இலங்கையில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், இந்த நேரமாற்றம் நடைமுறையில் இருந்தாலும், வடக்கில் இருந்த மக்கள் மத்தியில் அது குழப்பமாகத் தான் இருந்தது. புதிய நேரம், பழைய நேரம் என்ற குழறுபடிகள் இருந்தன. அந்த மாற்றம் மக்களுடன் சரியாக ஒன்றிக்கவேயில்லை. அதுவும் மின்சாரத் தடை ஒரு காலத்தில் ஏற்படுத்திய குழப்பம்.

இப்போது வந்திருக்கின்ற மின்சாரத் தடைகளுக்கு சரியான காரணங்கள் சொல்லப்படவில்லை.

திடீரென ஏற்பட்ட மின்தடைகளுக்கு, இயற்கையாகவே ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை தான் காரணம் என்று நம்ப முடியாத நிலையில் தான், மின்சார நிலையங்களின் பாதுகாப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முழு அளவிலான விசாரணைகளையும் அரசாங்கம் தொடங்கியிருக்கிறது.

எப்படியாவது அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிரணியினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ள போது, தான் இந்த திடீர் மின்சாரத் தடைகள் வந்து வந்து போகின்றன.

இந்த மின்சாரத் தடைகள் இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உண்மை அதற்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் என்றே தெரிகிறது. நீர்த்தேக்கங்கள் வற்றி விட்டதால், நீர்மின் உற்பத்தி குறைந்திருக்கிறது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதனால், மின்சார விநியோக கட்டமைப்பு மெல்ல மெல்ல வலுவிழந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

மின்சார சபை சரியான திட்டமிடலை மேற்கொள்ளவில்லை என்று ஏற்கெனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியிருந்தார்.

அதாவது, நாட்டின் மின்சாரத் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையில் பெரிய வெளி ஒன்று ஏற்பட்டிருப்பதே இந்த மின்தடையின் காரணமாக சொல்லப்படுகிறது.

ஆனால், அரசாங்கத்தினால் அந்தக் காரணத்தை தெளிவாக கூறமுடியாத நிலை ஒன்றும் இருக்கிறது.

நாட்டின் அதிகரித்து வரும் மின்சாரத் தேவைகளைச் சரியாக கணிப்பிட்டிருந்தால், இதுபோன்ற நிலைமைகள் ஏற்படாமல் இருக்கும். அவ்வாறான சரியான மதிப்பீடு மேற்கொள்ளப்படாததும் அதற்கு ஏற்றவாறு திட்டங்கள் வகுக்கப்படாததும் தான் இப்போதைய நெருக்கடிகளுக்குப் பிரதான காரணம்.

எதிர்கால மின்சாரத் தேவைகளைக் கணிப்பிட்டுத் தான், ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே, சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டது.

ஆனால், அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்திய, அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் அவ்வப்போது முட்டுக்கட்டை போட்டதால், இன்னமும் கூட அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

சம்பூர் அனல் மின் நிலையக் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி தொடங்கப்பட்டிருந்தால், இப்போது மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும் கட்டத்தை எட்டியிருக்கும். இந்த விடயத்தை முன்னைய அரசாங்கம் மட்டுமன்றி தற்போதைய அரசாங்கமும் கவனத்தில் கொண்டிருக்கவில்லை.

ஆனால், தற்போதைய பிரச்சினைக்கு முன்னைய அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி ஆள்மாறி குற்றம்சாட்டி வருகின்றனரே தவிர இதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. மின்சாரத் தடை விவகாரம் ஒன்றும் அவ்வளவு சாதாரண விடயமல்ல. இதனால் நாளாந்தம் பில்லியன் கணக்கான வருமான இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது, பொதுமக்களும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திடீரெனத் தொடங்கிய மின்வெட்டுத் தான், திமுக மீது கடுமையான எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் தோல்விக்கு மின்வெட்டுப் பிரச்சினையும் முக்கியமான ஒரு காரணம்.

அதேபோன்று தற்போதைய அரசாங்கத்துக்கும் இந்த மின்தடைப் பிரச்சினை கடுமையான சோதனையாகவே இருக்கப் போகிறது.

இதுபோன்ற நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டாலும் எதிர்பாராமலே நிகழ்ந்தாலும் இந்த மின்சாரத் தடையின் பாதிப்பு அரசியலிலும் எதிரொலிக்கத் தான் செய்யும். அதனைத் தான் எதிரணியினரும் எதிர்பார்க்கிறார்கள்.
(கே. சஞ்சயன்)