இலங்கையின் பொருளாதரத்தை கிராமிய அடிப்படையில் எவ்வாறு முன்னேற்றலாம்.

கடந்த சில மாதங்களாக முகப்புத்தகத்தில் நீங்கள் கிராமிய பொருளாதாரம் பற்றியும், அதை கிராமிய மட்டத்தில் எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பது பற்றியும் எழுதி வருகின்றீர்கள். நீங்கள் யார், இது சம்பந்தமான உங்கள் அனுபவங்கள் என்ன ?

நான் அலியார் மவ்சூக் ( ரியால் ), எனது சொந்த ஊர் அக்கரைப்பற்று, கடந்த பதினைந்து வருடத்துக்கு மேலாக இங்கிலாந்தில் வசிக்கின்றேன்.
1979 முதல் 2001 வரை அடிக்கடி எனது சொந்த வியாபாரம் சம்பந்தமாக இந்தியா, பிலிப்பைன், பேங்காக், நைஜீரியா போன்ற நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரயாணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.இந்தியா,பிலிப்பைன்,பேங்காக்,நைஜீரியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார போராட்டங்களையும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தையும் பார்க்கும் போது, ஏன் இந்த வளங்களை நம்மவர்கள் பயன் படுத்தவில்லை என எனக்குள்ளேயே சிந்திப்பேன், சிந்தித்தேன்.
உதாரணமாக நமது மூலப்பொருட்களை வாங்கி, அதை மெருகேற்றி, அவர்கள் அதிகூடிய இலாபத்தை அடைவதை பார்த்து ஏன் நம்மால் இது முடியாது என சிந்தித்தேன்.

இது சம்பந்தமான உங்கள் அனுபவங்கள் என்ன ?
இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா அரசுடன் பேசுவோம் என்ற நப்பாசையில், சிறிலங்காவில் உள்ள சகல அமைச்சர்களுக்கும், அமைச்சு செயலாளர்களுக்கும் பல மடல்கள்,இங்கிலாந்தில் இருந்தும், சிறிலங்காவில் இருந்தும் கிட்டதட்ட நான்கு வருடங்கள் தொடர்ந்து எழுதினேன்.

எனது சொந்த பணத்தை செலவு செய்து, ஸ்ரீலங்கா போய் சில அமைச்சர்களை நேரடியாகவும் சந்தித்தேன்.கிட்டதட்ட 2006 முதல் 2012 வரை பதினான்கு முறை ஸ்ரீலங்கா சென்று முயற்சி செய்தேன்.பலன் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் அங்குள்ள அரச நிறுவன தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்திக்க முயற்சி செய்தேன்
அனைவரும் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, கிராமிய அபிவிருத்தி சம்பந்தமாக உனக்கு என்ன அறிவு இருக்கின்றது என்று.
நான் சிறிலங்காவில் மொனராகல மாவட்டத்தில் உள்ள புத்தள என்ற கிராமத்தில் செய்த சில வேலைதிட்டங்களை அவர்களுக்கு கூறினேன்.அவர்கள் என் பெயரை தங்கள் குறிப்பு புத்தகத்தில் குறித்து வைத்துக்கொண்டனர்.

புத்தள கிராமத்தில் அப்படி என்ன செய்தீர்கள் ?

எனது சின்ன வயதில் இருந்து புத்தள கிராமத்தில் எனக்கு நிறைய சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் அடிக்கடி அங்குள்ள வளங்களையும், அதை ஏன் நாம் பயன் படுத்த முடியாது என்பது பற்றியும் பேசுவேன், அவர்களிடம் நான் பேசியது அப்படியே வாய்வழியாக, அப்போது புத்தள ,பெலவத்த சீனி கூட்டுத்தாபன தலைவராக இருந்த காமினி என்வரின் காதுக்கு சென்றுள்ளது.
அவர் என்னை அடிக்கடி சந்திக்க தொடங்கினார், நான் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கா சென்றால் நேராக அவரிடம் சென்றுதான் தங்குவேன். புத்தள இல் ஒரு சேம்பர் ஒப் கம்மேர்ஸ் ( Buttala Chamber of Commerce ) திறக்க திட்டம் தீட்டினோம், வெற்றிகரமாக அதை திறந்தும் வைத்தோம்.
திறந்த அன்று என்னை; ஆம்,என்னால் முடியும் என்ற தலைப்பில் பேச சொன்னார்கள். எனது முதல் மேடை அது. மொனராகல மாவட்டத்தில் உள்ள இருநூறு சிறு சிறு வியாபாரிகளும்,வியாபார ஆர்வமுள்ளவர்களும் அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.கிட்டதட்ட நான்கு மணிநேரம் பேசினேன்.எனக்கு தெரிந்த சிங்களத்தில் பேசினேன்.
அன்று விழா முடிந்ததும் நான் எனது ரூமுக்கு வந்துவிட்டேன். கே .பி.லலித் என்ற ஒரு இளைஞர் என் ரூமுக்கு வந்தார்.

இந்த இளைஞர் தனது 25 வயது வரை யார், யாருக்கெல்லாமோ பின்னால் திரிந்துள்ளார் . பிரபல அரசியல் வாதிகளின் ஜீப்புகளுக்கு பின்னால் திரிவதுமுதல், அடியாளாக அலைவது வரை வாழ்க்கையின் பாதியை தொலைத்துள்ளார் . உறவினர்களாலும், நண்பர்களாலும் இரண்டாம் கண்கொண்டே நோக்கப்பட்டுள்ளார் . இவருக்கென்று ஒரு நிரந்தர தொழில் கிடையாது. சில வேளைகளில் வாகன சாரதியாகவும், கண்டக்டராகவும் தொழில் செய்துள்ளார். அது கூட நிரந்தரமில்லை. தினமும் வீட்டில் மனைவியுடன் தகராறு என இவரது வாழ்க்கை 25 வயது வரை ததிங்கிணத்தோம் பாடியுள்ளது
ஆனால் இவருக்குள் ஆயிரம் பூகம்பங்கள் மனதுக்குள் அடங்கியிருந்துள்ளன. ஏதாவது செய்ய வேண்டும், எப்படியாவது வாழ்க்கையில் நியாயமான முறையில் முன்னேற வேண்டும் என்றெல்லாம் மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டு வீதி வீதியாக அலைந்துள்ளார். அப்போதுதான் ஒரு அரசியல் வாதியின் எடுபிடியாக லலித் நந்திகவும் இந்த கருத்தரங்குக்கு வந்து ஒரு ஓரமாக நின்று நிகழ்வுகளை நோட்டமிட்டுள்ளார்.
எனது பேச்சை முற்று முழுதாக கேட்டுள்ளார்.
வந்தவர் என்னை அழைத்து, தனது கண்ணீர் கதையையும், தான் சமூகத்தில் ஒரு வியாபாரியாக முன்னேற வேண்டும் என்ற அவாவையும், தனது பொருளாதார இயலாமையையும் கூறினார் . தன்னிடம் ஆயிரம் ரூபா மட்டுமே கைவசம் உண்டு என்ற உண்மையையும் கக்கினார்.
நந்திகவை ஒரு ஓரமாக உட்காரவைத்த நான் , இவருக்கு வெந்தய (உலுவரிசி) இருக்கை செய்யலாமே என்ற ஆலோசனையை வழங்கினேன். ஐயாயிரம் ரூபாவில் தொடங்கட்டும் உலுவரிசி இருக்கை என அவருக்கு ஆசியும் வழங்கினேன்.

ஆம் நந்திக தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாவுடன் , நான் கொடுத்த நாலாயிரம் ரூபாவையும் உபயோகித்து தொழிலை தொடங்கினார்.
வெந்தய (உலுவரிசி) இருக்கை, அதாவது 15 அங்குல நீள, 15 அங்குல அகலத்தில் இரு துணிகளை எடுத்து, அதை பைபோல் தைத்து, அதற்குள் வெந்தயத்தை போட்டு தைத்து இருக்கைகளில் (கதிரை, கார்சீட்) போட்டு உட்கார்ந்தால், உடம்பில் உள்ள முக்கால்வாசி நோய் பறந்துவிடும். மலச்சிக்கல், அஜீரணம், வாய்வுகள், வாதங்கள், பசியின்மை மற்றும் மூல வியாதிகளுக்கு இது ஒரு கைகண்ட இருக்கை என அவருக்கு புரியவைத்து, இரண்டு நாட்கள் அவருடனேயே உட்கார்ந்து அனைத்தையும் செய்துகாட்டினேன் . அன்றே தனது அனைத்து அடாவடிகளையும் மூட்டை கட்டிவிட்டு தொழிலில் இறங்கினார். முதலில் ஒரு பத்து இருக்கை செய்து கொண்டு, மொனறாகலையில் உள்ள அரசு காரியாலயங்கள், வாகனச்சாரதிகள் என வியாபாரத்தை வீடு வீடாக, ஊர் ஊராக தொடங்கிய இன்று நந்திக ஒரு பிரபல்ய வியாபரி பிளஸ் எக்ஸ்போட்டர்.

மொனறாகலை புத்தளயில் ஒரு மாளிகை வீடு, அதன் பின்னால் 30 பேர் வேலை செய்யும் 40லட்ச ரூபா பெறுமதியான வெந்தய பேக் பெக்டரி, மாதத்துக்கு 20 லட்ச ரூபாவுக்கு ஜப்பானுக்கு ஏற்றுமதி, சிறிலங்காவில் உள்ள அனைத்து ஆர்பிகோ ஷோரூம்களில் இவரது தயாரிப்புகளின் அணிவரிசை என முன்னேறியுள்ளது மட்டுமல்லாது, 2005ம் ஆண்டுக்கான ஏற்றுமதியாளர் அவார்டையும் திரு.நந்திக தட்டிக் கொண்டுள்ளார்.

இதே போல் இன்னும் ஒருவரும் அடுத்த நாள் வந்தார். கம்பளை,தவுலகல கிராமத்தை சேர்ந்த பண்டார என்ற ஒரு இளைஞர். அவருக்கு சலூன்களில் பாவிக்கும் இஷ்பிரிட் ( முடி வெட்டிமுடிந்ததும் தடவுவது ) விற்பனை சம்பந்தமான ஆலோசனை வழங்கினேன்.அவர் இப்போது சிறிலங்காவில் பல மாவட்டங்களுக்கு பொருள் வழங்குவதுடன், தான் உழைக்கும் பணத்தில் அரைவாசி இலாபத்தில், தாய் தந்தை இல்லாத குழந்தைகளை பராமரிக்கும் ஒரு நிலையத்தையும் நடாத்தி வருகின்றார்.

சிறிலங்காவில் இப்படி நிறைய பேர் தொழில் செய்து கொண்டிருக்கின்றார்கள், நஷ்டம்,நஷ்டம் என்றே சொல்கின்றார்கள், நீங்கள் இவர்களில் இருந்து எப்படி வேறு படுகின்றீர்கள் ?

கூடியவரை எமது கிராமத்தில் உள்ள மூலப்பொருட்களை பயன் படுத்துவது, மற்றவர்கள் செய்யாத தொழில்களை செய்வது இதுதான் எனது பிரதான திட்டம்.
உதாரணமாக நமது நாட்டில் கிட்டதட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தும்பு தொழில் சாலைகள் இருந்தன.எல்லோரும் தென்னை மட்டையை கொண்டு; தும்பு, கயிறு, தும்பு தடி, கால்மிதி இவைகளை தவிர எதுவுமே செய்வதில்லை, செய்யவும் தெரியாது.
இதனால் நாளடைவில் நிறைய தும்பு தொழில்சாலைகள் மூடப்பட்டு விட்டன.இருக்கும் ஒரு சிலரும் வங்கிகடன், வேலையாட்கள் இன்மை காரணமாக நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றார்கள்.

நாம் அவைகளை மாற்றினோம். அதாவது ஒரு தும்பு தடி செய்ய இரண்டு கிலோ தும்பு தேவை என்றால் அதே தும்பை கொண்டு அறுநூறு, எழுநூறு ரூபாய் பெறுமதியான பொருட்களை உற்பத்தி செய்யும் முறைகளை சொல்லி கொடுத்து வெற்றியும் கண்டோம்.

அதே போல் ஈக்கில் , கடல் சிப்பி ,ஆயுர்வேத மூலிகைகள், கடதாசி, கடல் மண், களிமண், மாணிக்க கல்கள் தோண்டும் இடத்தில் கேட்பாரற்று கிடக்கும் சிறு சிறு கல்கள் என்பவற்றை கொண்டு பெறுமதியான பொருட்களை உற்பத்தி செய்து வெற்றியும் கண்டோம்.

சிறிலங்காவில் இது சம்பந்தமாக செயற்பட, உதவி செய்ய அநேக அரச நிறுவனங்களும், அபிவிருத்தி நிறுவனங்களும் இருக்கும் போது, அவர்களால் முடியாதவற்றையா நீங்கள் தனியாளாக இருந்து செய்துவிட போகின்றீர்கள் ?
ஸ்ரீலங்கா அரசையோ அரசு அதிகாரிகளையோ நான் இங்கு குறை கூறவில்லை, அரச மந்திரிமாருக்கும், எம்பிக்களுக்கும் நமது மக்களுக்கு உதவவேண்டும் என்ற ஆசைதான், ஆனால் அதற்கிடையில் பலமில்லாத அரசும், நமது பதவிகள் பறிபோய்விடுமோ என்ற பயத்திலும் எல்லா அரசியல் வாதிகளும் கழுவுற மீனில நழுவுற மீனாக இருந்து விடுகின்றனர்.

இப்போதுள்ள அரச அதிகாரிகள் மிக திறமை சாலிகளாக இருக்கின்றனர், கிராமப்புற படித்த இளைஞர்கள்தான் எல்லா அலுவலகங்களிலும் நிரம்பி வழிகின்றார்கள். ஆனால் இவர்களது கை கட்டிப் போடப்பட்டுள்ளது. உதாரணமாக ஏற்றுமதி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தில் உள்ள அதிகாரி ஒருவர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று ஒரு நிகழ்ச்சியை நடாத்தி விட்டு வரவேண்டும் என்றால் அவர், நவம் மாவத்தையில் இருந்து தானாகவே கோட்டை ரயில் நிலையம் சென்று புகையிரதம் பதிவு செய்து, வேர்க்க விறுவிறுக்க யாழ்ப்பாணம் சென்று, அடுத்த நாள் ஓடி வந்து கொழும்புக்கு இரவு பஸ்ஸை பிடிக்க வேண்டிய அவலநிலை.

ஆனால் இதே நிலை பெல்ஜியத்திலோ, பங்களா தேசத்திலோ இருக்குமானால், அந்த அதிகாரி விசேட விமானத்தில் சென்று, மிக இறுமாப்புடன் அந்த நிகழ்ச்சியை நடாத்தி விட்டு வருவார்.

இவைகளை நான் எனது சொந்த பணத்தில் செய்கின்றேன் அல்லது நண்பர்களிடம் கடன் பட்டு செய்து வெற்றி கண்டிருக்கின்றேன்.
உதாரணமாக சிறிலங்காவில் ஊவா மாகாணத்தில், செவேனகல -உடவலவே யானைகள் சரணாலயத்துக்கு அருகில் கொஹுலாரகம என்ற கிராமத்தில், 2004 களில் அப்போது இருந்த மக்கள் விடுதலை முன்னணி JVP அமைப்பின் அமைச்சர் ஒருவரால் ஒரு செராமிக் பேக்டரி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு பெண்கள் அமைப்பு. எண்பத்தி ஒன்பது கிராமப்புற அப்பாவி பெண்களை அங்கத்தவர்களாக கொண்டது அந்த அமைப்பு.
பெண்களே அனைத்தும் என்ற அந்த நிறுவனத்துக்கு, மனேஜராக ஒருவரை நியமித்துள்ளனர். ஐந்து வருடம் தட தட என ஓடிய அந்த நிறுவனம் ஆறாவது வருடம் இழுத்து மூடப்பட்டுள்ளது.அங்கு மனஜராக வந்து சேர்ந்தவர் செராமிக் பற்றி அனைத்தையும் படித்துக் கொண்டு, அவர்களுக்கு வந்த உற்பத்தி ஒடர்களையும் தானே எடுத்துக்கொண்டு, கொழும்பில் ஒன்றும், செவனகலையில் இன்னொன்றுமாக அவர் தொ ழில் சாலைகளை திறந்துள்ளார்.

இந்த பெண்களும் எங்கெங்கோ ஓடி யார் யாரை எல்லாமோ பிடித்து காலில் விழுந்துள்ளனர். வங்கிகளுக்கு அலைந்து உதவி கேட்டுள்ளனர் , அரச அதிகாரிகளிடம் மன்றாடி உள்ளனர். அவர் தன்னிடம் உள்ள பணம் மற்றும் அரசியல் பலத்தால் இவர்கள் கைவிடபட்டுள்ளனர்.

2009 முதல் 2015 வரை இவர்கள் மீண்டும் , தங்களது பழைய தொழிலான கரும்பு நட்டுதல், வயல்களில் கூலிவேலை என தொடங்கிவிட்டனர்.

2015 ல் நான் ஒருவேலையாக ஹம்மன்தொட்டே இல் உள்ள ஏற்றுமதி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சென்றிருந்தேன்.அங்குள்ள உயர் அதிகாரி, இந்த பெண்கள் அமைப்பை பற்றி எனக்கு சொல்லி இவர்களுக்கு உதவ முடியாதா என கேட்டார்.

அந்த பெண்கள் அமைப்பின் அங்கத்தவர்களை அடுத்த நாள் அங்கு வர சொல்லி பேசினோம். மொத்த பெண்களும் கதறி அழுதார்கள். உடுக்க உணவில்லை. எங்களுக்கு உதவுங்கள், உங்களுக்கு உயிரை தருகின்றோம் என்றார்கள்.

அடுத்த நாளே அவர்களுடன் சென்றேன்,யானைகள் சூழ்ந்த அடர்ந்த காட்டில், படுக்க பாய் இல்லை, ஐரோப்பிய உணவு கிடையாது, நுளம்பு ஒரு பக்கம், மூட்டை பூச்சி மறு பக்கம், புழுதி படிந்த தொழில்சாலை, எண்ணெய்யே காணாத தலைகளுடன் தாய்மாரும் குழந்தைகளும், காவி படிந்த கிளாஸ்களில் தேநீர் தந்தார்கள், பழைய காலத்து ஸ்டைலில் எலிபென்ட் ஒரஞ் பார்லி சோடா……….உலகின் முகடு என்று சொல்லப்படுகின்ற, இங்கிலாந்தின் தலைநகரம் லண்டனில், மகாராணியின் வீட்டுக்கு; கூப்பிடு தூரத்தில் உள்ள விக்டோரியாவில்; ஐயாயிரத்து நானுறு பவுண் மாத வாடகையில் ( 5400 UK £ – கிட்டதட்ட பதினோரு லட்ச ரூபா ) அலுவலகம் நடாத்திய நான் அந்த அன்புள்ளங்களுக்கு மத்தியில் ஓலைப்பாயில் சுருண்டு கிடந்தேன்.

நாலரை மாதம் அவர்களின் வீட்டு சொறி நாயாய் உழைத்தேன். மொத்த உலகத்தையும், கொஹுலாரகம கிராமத்துக்கு அழைத்தேன். கிராமசேவகர் ஓடிவந்தார், டிவிசனல் செக்ரெடரி எங்கள் கதவுகளை தேடி வந்து தட்டினார், தட்டிக்களித்த வங்கிகள், முப்பது லட்சம் வேண்டுமா, நாற்பது லட்சம் வேண்டுமா என்று, எங்கள் படலைக்கே வந்தார்கள்,

ஜே வீ பீ தளபதிகள் நடுச்சாமங்களில் வந்தார்கள், யார் இவர் இந்திய உளவாளியா, அமெரிக்க கெடுபிடியா என உளவு பார்த்தார்கள், இறுதியில் எங்கள் அன்பில் கட்டுண்டு, அவர்கள் வீட்டு சமையலறை வரை செல்ல அனுமதி அளித்தார்கள். USAID எங்கள் கதவுகளை தட்டியது, தட்ட வைத்தேன், இரவு பகலாக வெள்ளையர்கள் வந்தார்கள். இரண்டு கோடி அறுபது லட்சம் அள்ளி கொடுத்தார்கள்.திரும்பி கொடுக்க வேண்டிய பணமல்ல அது,இலவசமாக தந்தார்கள்.

இங்கு எதை சொல்ல வருகின்றேன் என்றால், இவ்வாறு நலிந்து, நொடிந்து போயுள்ள நிருவனங்களையும், வியாபாரம் செய்ய ஆர்வமுள்ளவர்களயும் உயர்த்த வேண்டியது ஏற்றுமதி அபிவிருத்தி கூட்டுதாபனத்தின் கடமை, அதில் வேலை செய்யும் அதிகாரிகளும் உதவ தயாராகவே உள்ளனர், ஆனால் அதற்குரிய நிதி அவர்களுக்கு ஒதுக்க படுவதில்லை.ஒதுக்கினால் அந்த நிறுவனம் மட்டுமே போதும் ஸ்ரீலங்கா பொருளாதாரத்தை உயர்த்தி நிமிர்த்த.

உற்பத்தி செய்யும் பொருட்களை எப்படி விற்பீர்கள் ஏற்றுமதி செய்வீர்கள் ?
கூடியவரை ஏற்கனவே சந்தையில் இல்லாத பொருட்களையே உற்பத்தி செய்வோம். மற்றவர்கள் செய்யும் பொருட்களை செய்ய மாட்டோம்.இதனால் விற்பது இலகு.

அடுத்து நாங்கள் சிறிலங்காவில் உள்ள எந்த கடைகளுக்கும் ஏறி இறங்குவது இல்லை.சிறிலங்காவுக்கு வரும் உல்லாச பிரயாணிகளை குறி வைப்போம். யால தேசிய பூங்கா,உடவளவ தேசிய பூங்கா இரண்டுமே போதும்.நமது நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்தையும் விற்க.
யால தேசிய பூங்காவுக்கு கடந்த வருடம் வந்த உல்லாச பிரயாணிகள் கிட்டதட்ட ஆறு லட்சம், திஸ்ஸமஹராம முதல் யால தேசிய பூங்கா வரை பதின் நான்கு மைல்கள் காடாக கிடக்கின்றது.அதை கடந்துதான் மொத்த உல்லாச பிரயாணிகளும் செல்கின்றார்கள்.

இதே போல்தான் உடவலவே தேசிய பூங்காவும்..அரசு இதை கண்டு கொள்ள வில்லை.நாங்கள் பயன் படுத்துகின்றோம். நான் நினைக்கின்றேன் நமது அமைச்சர்களுக்கு இது தெரியும்..இங்கு கடை திறந்தால், நமது சொந்த தொழில் படுத்து விடும் என்று நினைக்கின்றார்களோ என்னவோ.

நீங்கள் வட /கிழக்கு /மற்றும் மலையகத்தில் பயிற்சி கொடுக்க உள்ளதாக கூறுகின்றீர்களே, இது எப்படி முன்னேற்றமாகும்.

அவர்களது கிராமத்தில், அவர்களை சுற்றியுள்ள பொருட்களை கொண்டு உலகதரத்துக்கு, பொருட்களை அவர்களை கொண்டே உற்பத்தி செய்ய வைப்பதே இதன் நோக்கம். பயிற்சி முடிந்ததும், நூற்றுக்கு பத்தோ பதினைந்தோ பேர் தாங்களாக ஒரு தொழிலை தொடங்க முயற்சி செய்வர். ஐயாயிரம் இருப்பபவர் ஐயாயிரத்திலும், ஐந்து லட்சம் இருப்பவர் ஐந்து லட்சத்திலும் தொழிலை தொடங்கும் போது, நிறைய பேருக்கு அங்கு தொழில் வாய்ப்பு கிடைக்கின்றது.

அத்துடன் நாங்கள் வெளிநாட்டு Volunteer தன்னார்வலர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டினர் எவ்வாறான பொருட்களை, முடிவுப் பொருட்களை எதிர் பார்ப்பார்கள் என்பதையும் புரிய வைக்க உள்ளோம்.

மேலும் உலகம் முழுக்க உள்ள கிட்டதட்ட ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட ஸ்ரீலங்கா கடை உரிமையாளர்களையும் தொடர்பு கொள்ள உள்ளோம். கடந்த மூன்று வருடத்தில் இவர்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களை தொடர்பு கொண்டு வெற்றியும் கண்டுள்ளோம்.

உலகம் முழுக்க நடக்கும் பொருட்காட்சிகளுக்கு வருடத்துக்கு கிட்டதட்ட நூறு பொருட்காட்சிகளுக்கு சென்று; அவர்களுக்கு என்ன தேவை என்பதை ஒரு கையேடாகவே வைத்துள்ளேன்.

வட /கிழக்கு /மலையக மக்கள் ஏன் அரசையும், வெளிநாடுகளில் உள்ளவர்களையும் எதிர் பார்க்க வேண்டும். வெளி நாட்டில் உள்ளவர்கள் இவர்களிடம் கடன் கேட்க; வைக்க வேண்டும். அங்குள்ளவர்கள் இங்கு வேலைக்கு வரவேண்டும் என்பதுதான் என் ஆசை.

சில சிங்கபூர் வாசிகள், நமது நாட்டுக்கு வந்து வத்தளையிலும், சீதுவை யிலும் வீடுகள் கூலிக்கு எடுத்து, அனுராதபுரத்தில் இருந்து கொண்டு வரப்படும், குட்டி விலாங்கு மீன்களை வாங்கி, அந்த கூலி வீடுகளில் இருந்து கொண்டு வளர்த்து; சைனாவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.ஏன் எம்மால் முடியாது என்பதுதான் எனது கேள்வி. நமது தோல்வி.

சரி, இதுவரையும் தென்பகுதியில் வேலை செய்தீர்கள் சரி.வட,கிழக்கு மற்றும் மலையகம் மிக வித்தியாசமாக இருக்குமே எப்படி இந்த மக்களை அணுக போகின்றீர்கள் ?

வட,கிழக்கிலா ? ஜாக்கிரதை என்று சொன்னவர்கள் அனைவருமே இந்த வட கிழக்கை சேர்ந்தவர்கள்தான். நல்லவர்கள், வல்லவர்கள் நிச்சயமாக பொய் பேச தெரியாதவர்கள். இங்கு எனக்கு மூன்று அனுபவங்கள் உண்டு. ஒன்று 1977 இல் கிழக்கில் ஏற்பட்ட பாரிய சூறாவளியில் ஆரம்பித்த; அரசியல் பயணம் முதல் 2009 மே 17 வரை நடந்த அரசியல் அந்திமம் வரை, அனைவருடனும், அணைத்து ஜாம்பவான்களுடனும் ஒண்டிக்கு ஒன்டியாகவும், கூட்டத்தோடு கூட்டமாகவும், கொடுக்கல் வாங்கல் செய்ததுண்டு. இவர்களிடம் உள்ள கெட்ட பழக்கம் நம்மிடம் இரண்டாயிரம் கோடி ரூபா இலாபம் அடைந்திருப்பார்கள், அதற்கு கிஞ்சித்தும் நன்றி சொல்ல மாட்டார்கள், நாம் அவர்களிடம் ஒரு நாலு லட்சம் ரூபா கடன் வாங்கி இருப்போம், அதை ஊதி பெருப்பித்து,பேயை பெருமாள் ஆக்கி இருப்பார்கள். இது இந்த அரசியலில் உள்ள குறைபாடு. நாமும் அந்த குப்பையில் ஊறிய மட்டைதான் என்ற இறுமாப்பு எப்போவுமே உண்டு. அதனால் சிவதாண்டவதுக்கு தயாராகவே புறப்படுகின்றேன்.

அடுத்தது புத்தககாரர்கள், மூணுகால்தான், மூணே மூணுகால்தான், இவர்களை சமாளிக்கவேணும்.கிட்டதட்ட நாமளும் அந்த புத்தகங்களை அவர்களிடம்,அவர்களின் பல்கலைக்களகங்களில் படித்துதான் லண்டன்வரை வந்து, தொட்டில் ஆட்டுகின்றோம்.நமது புத்தகங்களை திறந்து ஆரோக்கியமாகவே தர்க்கிக்கலாம்.
மூன்றாவது, எனது மண், நான் பிறந்த மண், நான் தவழ்ந்து, மலசலம் கழித்து,கூட்டாஞ்சோறு ஆக்கி, வயலுக்கு சென்று புல்லு பிடுங்கி, நண்பர்களுடன் கோயில் திருவிழாக்களில் பொங்கி மகிழ்ந்து, தீ மிதித்து, தீப்பாயிந்து, பள்ளிவாசல்களில் தொழுது,பெருநாள் கொண்டாடி அடுத்த பெஞ்சில் இருந்த வகுப்பு தோழன் ராசலிங்கத்தை பென்சிலால் குத்தி, அடுத்த நாள் அவன், கொதிக்க வைத்த நீரை எனக்கு வீசி, நாலு வருடத்தின் பின் நானும் அவனும் திருட்டு தம் அடித்து வளர்ந்த மண்.
என் மண்ணுக்கு செல்ல எனக்கு எது தடை.

இதை இந்த திட்டத்தை எப்படி ஆரம்பிக்க போகின்றீர்கள் ?
இவ்வளவு நான்தான் பெரிய ஆள் என நினைத்துக்கொண்டிருந்தேன், இப்போது என்னையே அடித்து சாப்பிட கூடிய எனது முன்னாள் நண்பர் அனஷ்லி ரட்ணசிங்கம் பூகம்பம் போல் என்னிடம் வந்து சேர்ந்துள்ளார்.

அவர்தான் இந்த முழு வேலைகளையும் முன் நின்று செய்ய போகின்றார்.

(3/12/2017 சுடரொளி பத்திரிகையில் வந்த கட்டுரை)