தியாகிகள் தின மூலவர்கள் பற்றிய எனது பதிவு!

 

எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள். அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள். அதற்கு முன்பும் பல சகோதரப் படுகொலைகள் இடம்பெற்ற போதும், பெருமெடுப்பில் எதிரியே அடைக்கலம் தருகிறேன்? எனது முகாமுக்கு வா! என அழைப்பு விடுக்கும் அளவிற்கு கேவலப்பட்டது எம் ஈழ விடுதலை போராட்டம். அதில் ஒன்று டெலோ மற்றும் ஈ பி ஆர் எல் எப் போராளிகள் மீதான தாக்குதல், மற்றது நாபா உட்பட நிராயுதபாணிகளாக இருந்தவேளை, பலியெடுக்கப்பட்ட 13 உன்னதமான, என்னுடன் இறுதிவரை உறவாடிய உயிர்கள். அது நடந்தது 1990ம் ஆண்டு ஜூன் மதம் 19ம் நாள். கொலைக்கு உத்தரவிட்டவர், திட்டமிட்டவர், நடத்திமுடித்தவர்கள் உயிரோடு இல்லாவிட்டாலும், உள்வீட்டில் இருந்து உதவியவர்கள், இன்னமும் உயிரோடு தான் உலவுகின்றனர். இந்த உண்மை தெரிந்தும் எதுவும் செய்ய முடியாது என் முன் மௌனமாய் அழுத ஸ்டாலின் அண்ணாவும், அண்மையில் உலக வாழ்வை விட்டு நீங்கிவிட்டார். அன்று அவர் எழுப்பிய கேள்வி, அந்த வீட்டில் அதுவரை இருந்த AK 47 இயந்திர துப்பாக்கிகள், அந்த சம்பவத்துக்கு முன்னைய தினங்களில் ஏன் இடம்மாற்றப்பட்டன? என்பதே. விடை தெரியாமல் அவரும் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அதை செய்ததால் பலன் அடைந்தவர்கள், ஒருநாள் பகிரங்கப்படுத்தப்படுவர். காலம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.

அந்த துன்பியல் சம்பவத்தின் பின், நாபா என் நண்பனா? தோழனா? தலைவனா? என்ற எனது நீண்டநாள் தேடலுக்கு விடையாக, நல்ல மனிதன் என்ற விடையை, யூ டியூப்பில் பதிவிடப்பட்டிருந்த, நாபாவின் இறுதி ஊர்வல காட்சிகள் உணர்த்திற்று. அதுவரை தமிழ் நாட்டு தலைவர்களின் இறுதி ஊர்வலங்களில் மட்டுமே பெரும் திரளான மக்களை பார்த்த சென்னை தெருக்கள், ஈழத் தமிழ் தலைவனின் இறுதி ஊர்வலத்தால் திணறியது. அன்று நாபாவின் புகழுடலுடன், ஸ்டாலின் அண்ணா ஏற்பாடு செய்திருந்த அந்த ஊர்தியில், திக்கு தெரியாத பித்தன் போல் சென்ற எனக்கு, அக்கம் பக்கம் புதினம் பார்க்கும் மனநிலை இருக்கவில்லை. அன்று நடைப்பிணம் போல் எம்மில் பலர் நாபாவின் இறுதி நிகழ்வில் கலந்ததால், அந்த ஈழத்து பிதாமகன், மனித நேயத்தை மட்டமே நேசித்த நாபாவை புரிந்து கொண்டு, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நீண்ட நெடிய வரிசையில் நின்ற தமிழக மக்களை, கவனத்தில்கொள்ள இயலவில்லை. இழப்பு பற்றிய துயரமும், எம் மக்களின் நிலை இனி என்னவாகும் என்ற பயமும் மட்டுமே, எம் மன ஓட்டத்தில். காரணம் ஆயுதங்கள் மட்டுமே எம்மை, எம் மண்ணை ஆள்பவர்கள் ஆக்கும் என்ற இறுமாப்பு கொண்ட தலைவர், மக்கள் இல்லாத மண்ணை நான் நேசிக்கவில்லை என்ற நாபாவையே பலி எடுத்ததால் ஏற்பட்ட பயமே அது. நாம் பயந்தது போல்தான் முள்ளிவாய்கால் எம் உறவுகளுக்கு பலி பீடமானது. நந்திக்கடல் இறுமாப்புக்கு இறுதியுரை எழுதியது.

தோழர் நாபா [பத்மநாபா]

நாபாவுடனான எனது செயல்ப்பாடு பற்றி பலபதிவுகளில் ஏற்கனவே பதிவிட்டுள்ளதால் இதுவரை நான் பதிவிடாத, தலைவனுடன் தம் உயிர் தியாகம் செய்த ஏனையவர் பற்றிய, என் நினைவுகளை பதிவிடுகிறேன். 1990 ஜூனில் ஸ்ரீலங்கன் விமான சேவை தனது கன்னிப் பயணமாக, கொழும்பு சிட்னி நேரடி இருவழி பயண [13 மணித்தியாலம் தொடர் பயணம்] கட்டணம் இலங்கை பணம் 16ஆயிரம் என அறிவித்தது. என்னோடு கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு பல்கலைகழகம் என்பவற்றில் கல்வி கற்றவர்கள் உட்பட, 1974 முதல் என்னோடு கொழும்பில் பழகிய நண்பர்கள் பலர் 1983 இனக்கலவரத்தின் பின், இடம் பெயர்ந்த நாடு அவுஸ்ரேலியா. எனவே கிடைத்த மிக சொற்ப கட்டணத்தில் அவர்கள் அனைவரையும் பார்க்கவும், அதுவரை கங்காரு மிருகத்தை தெஹிவளை மிருககாட்சி சாலையில் கூண்டில் பார்த்த நான் அவற்றை வெட்டவெளிகளில் பார்க்கவும் ஆசை கொண்டு, இரண்டு வார பயணத்தை மேற்கொண்டு சிட்னி, அடலேயிட், மெல்பேன், என சுற்றிய வேளை, ஜூன் மாத குளிரில் எனக்கு வந்த நெஞ்சு சுரம் எம் மண்ணுக்கு திரும்பும்படி விரட்டியது. 1990 ஜூன் 16 ம் திகதி, நாடு திரும்பிய என் பயண பெட்டியில், இருந்தது 5 கிலோ வகை வகையான சொக்லட்.

பயண பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரி, உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என கேட்டார். அதற்கு என்பதில்? “நாமிருவர் நமக்கு ஏன் ஒருவர்” என்பதே. [ இன்றுவரை அப்படித்தான் ] அப்படி என்றால் இவை யாருக்கு என கேட்டார். அவை எனது நண்பருக்கு என்றேன். சுங்க அதிகாரி என்னை “”அவனா நீ”” என்பது போல ஒரு கேவலமான பார்வை பார்த்து, செல்ல அனுமதித்தார். மறுநாள் காலை பெட்டி நிறைந்த சொக்லட் உடன் கிருபாவை தேடி சிராவஸ்தி போனபோது, அவர் யோகசங்கரியுடன் ரஞ்சன் விஜயரத்னவை சந்திக்க பாராளுமன்றம் போனதாக கூற, வீடு திரும்பிய நான், மீண்டும் மாலை சென்றபோது அவர்கள் சென்னை சென்றதாக அறிந்து வீடு திரும்பி, என் துணைவியிடம் நான் சிலவேளை சென்னை போகவேண்டி வரும் என கூறிவிட்டு உறங்க சென்றேன். காலையில் எழுந்த உடன் பத்திரிகையில் பார்த்த செய்தி, என் நாக்கில் சனியின் அமர்வை உறுதி செய்தது. இரவு கூறியது போல் சில வேளை அல்ல கட்டாயம் சென்னை செல்ல வேண்டிய நிலைமை. காரணம் நாபா உட்பட 13 தோழர்கள் சென்னையில் படுகொலை செய்யப்பட்டமை. உடனடியாக சிராவஸ்தி சென்றேன். அங்கு நாபாவின் அக்காவின் கணவர் பரமகுருநாதன் வில்சனுடன் நின்றார். அன்று விடுமுறை தினம் என்பதால், இந்திய விசா எடுப்பதிலுள்ள சிரமம் பற்றி வில்சன் கூறியபோது, நான் என்னிடம் பொறுப்பை தரும்படி கூறி, நாபாவின் அத்தான் பரமகுருநாதன், ராணி அக்கா, தங்கை ராசாத்தி ஆகியோரின் பாஸ் போட்டுகளுடன் இந்திய தூதுவராலய முதலாவது செயலாளரின் உத்தியோக இல்லம் சென்றேன்.

கொள்ளுப்பிட்டியில் இருந்த முதலாவது செயலாளர் திரு ஜெய்சங்கர் [தற்போது இந்திய வெளியுறவு செயலாளார்] உடனடியாக வீட்டில் வைத்தே GRATITUDE விசா தந்தார். அப்போது ஈ பி ஆர் எல் எப் இல் இருந்த [ தற்போது ஈ பி டி பி ] கமல் [ சிந்தன் டி சில்வா ] வசம் அனைவருக்கும் விமான சீட்டு வாங்கும்படி பணம் கொடுத்து, அன்று மாலையே நாம் சென்னை சென்றோம். சுரேசின் சகோதரர் சுகி [ சர்வேஸ்வரன் ] விமானநிலையம் வந்து எம்மை அழைத்து சென்று, ஹோட்டல் ரோஹிணியில் நாபாவின் அத்தான் அக்கா குடும்பம், மற்றும் தங்கை ராசாத்தியை தங்கவைத்தார். நான் அவருடன் சேசாஸ்திரியின் பாலன் தொடர்மாடி வீடு சென்றேன். மறுநாள் சென்னை மத்திய வைத்தியசாலை உடலங்கள் வைத்திருக்கும் அறையில், வரிசையாக இருந்த உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டிருந்த, நாபாவின் உடலத்தை பார்த்து, தங்கை ராசாத்தி கதறிய கதறல் இன்றும் என் காதில். நான் அவனுக்கு என்று வாங்கிவந்த சொக்லட்டை சுவைக்காமல், உயிரற்ற உடலமாக கிடந்தான் கிருபா. கூடவே நான் நேசித்த, என்னை நேசித்த தோழர்களின் துப்பாக்கி சன்னங்களால் சிதைக்கப்பட்ட உடலங்கள்.

தோழர் கிருபா [கிருபாகரன்]

1981ம் ஆண்டு நாபாவுடன் திருக்கோவில், தம்பிலுவில் சென்றவேளை, அங்கு மணி [ இன்பம் ] வீட்டில் வைத்து குண்சி ஏனையவர்களுக்கு, ஈரோசில் இருந்து பிரிந்தது, புதிதாக ஈ பி ஆர் எல் எப் மலர்ந்தது பற்றி விபரித்தபின், மதிய உணவுக்காக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சற்று காலாற ரவியுடன் தெருவுக்கு வந்த போது, பருத்த உருவம் கொண்ட ஒருவர் துவிச்சக்கர வண்டியில் வந்தார். ரவி என்னை அவருக்கு அறிமுகப்படுத்த, அவர் சிரித்தபடி “ஊரை குழப்ப யாழ்ப்பாணத்தவர் வந்திட்டாங்கள்” என்றார். அன்று அப்படி கூறியவரை சில வருடங்களின் பின் சென்னை சூளைமேட்டில் இயங்கிய, ஈழமக்கள் செய்தி நிலையம் எனும் எபிக் [EPIC] பொறுப்பாளராக சந்திப்பேன் என்று அப்போது எண்ணவில்லை. அவர் தான் கிருபா என்னும் கிருபாகரன். சிங்கள பேரினவாதம் அவரையும் போராளி ஆக்கியதுதான் வரலாற்று வினோதம். இந்திய அமைதிப்படை வந்தபோது அவர்களுடன் மண்ணுக்கு வந்த நாபா, வரதன், ஜோர்ஜ், உருத்திரன், ஓட்டி கணேஷ், தருமன் என பலர் சாய்ந்தமருது தாமரை கேணி மைதானத்தில் இந்திய ஹெலிகொப்டரில் வருவதாக கூறி, பின் இந்திய இராணுவ வாகனத்தில் வந்தவர்களில் கிருபாவும் ஒருவர். அவரின் அந்த வரவுதான் பின்னாளில் ஈ பி ஆர் எல் எப் மாகாண அரசை அமைக்கும் அத்திவாரமாக அமைந்தது என்ற உண்மை கறையான் புற்றெடுக்க அதில் குடிபுகுந்தவர்களுக்கு கசப்பாக இருக்கலாம். ஆனால் அதுவே நிஜம்.

தோழர் சங்கரி [யோகசங்கரி]

நாபா சொல்லி றோ அதிகாரி சந்திரனை சந்திக்க டெல்லி சென்றவேளை, கேதீஸ் [ லோகநாதன் கேதீஸ்வரன் ] “இவர்தான் சங்கரி, லண்டனில் இருக்கிறார்” என ஒரு பருத்த உருவத்தை அறிமுகப்படுத்தினார். கிருபாவை மிஞ்சும் பருமன். [ இருவரும் யாழ் இந்து கல்லூரி மாணவர்கள் ] கிருபா கறுத்த மேனியன், சங்கரி சிவந்த மேனியர். பருத்தவர் என்பதால் உணவில் மட்டுமல்ல உறக்கத்திலும் பிரியம் கொண்டவர். இருந்த இடத்திலேயே குறட்டைவிட்டு உறங்கிவிடுவார் சங்கரி. முதியவர் ஆனந்தசங்கரியின் உறவினர். மீண்டும் அவரை கொழும்பு வந்து வரதன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தங்கிய, மகானாமையின் பொறுப்பில் இருந்த, அரச இலிகிதர் சேவை [GCSU]கட்டிட மேல் மாடியில் தங்கியிருந்த போது சந்தித்தேன். கலகலப்பான பேர்வழி என்றாலும், எந்த விடயமானாலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என செயல்ப்படுபவர். அதே போல் யாழில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றபின், பாராளுமன்ற உறுப்பினர் தங்கும் விடுதியான சிராவஸ்தியில் அவரை நான் சந்தித்த வேளைகளில் தன் பருத்த உடலில் இடுப்பில் ஒரு துவாய் துண்டுடன் தான் காட்சி தருவார். அவரின் படுகொலைக்கு பின் 1990ல் நான் லண்டன் சென்ற போது அவரின் துணைவியார் மனோ சாருடன், அவரின் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகளுடன் கதைத்த போது, எந்த ஆங்கில சொல் கலப்பும் இல்லாது யாழ்ப்பாணத்து தமிழில் அவர்கள் பேசியது கண்டு ஆச்சரியப்பட்டேன். யோகசங்கரியின் வளர்ப்பு அது. அன்று எழுபதுகளில் லண்டன் வந்தவர் பிள்ளைகள் பேசிய தமிழை கேட்ட எனக்கு, இன்று லண்டன் கனடா ஐரோப்பிய நாடுகளில் தொண்நூறுகளின் பின் வந்த பலரின் பிள்ளைகள் பேசும் தமிழ், மெல்லத்தமிழ் இனி சாகும் என்ற கூற்றை நினைவுறுத்துகிறது. லண்டனில் பிறந்த தன் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் கற்பித்த அவரை சதிகாரர் பலிகொடுத்தனர்.

தோழர் ரவி [பத்மநாதன்]

1981ல் தம்பிலுவில் திருக்கோவில் கூட்டத்தில் அறிமுகம். நன்றாக பாடுவார் என்பதால், பாட்டு ரவி என்றே அழைப்போம். ஜனாதிபதி தேர்தலில் ஜே ஆர் தோற்க வேண்டும் என்ற முடிவை ஈ பி ஆர் எல் எப் எடுத்திருந்தது. அதற்காக எதிர்த்து போட்டியிட்ட கொப்பேகடுவவை ஆதரித்து செயல்படவும் இல்லை. யு ஏன் பி க்கு வாக்கு விழாதிருக்க அப்போது போட்டியிட்ட ஜே வி பி, வாக்குகளை சிதைக்கட்டும், என்ற நோக்கில் ரவி தெருவெங்கும் எழுதிய வசனம் “”மணியை [ஜே வி பி சின்னம்] அடித்து யானையை [யு ஏன் பி சின்னம்] விரட்டுவோம்””. இந்தியாவில் பயிற்சி முடித்தவர் மட்டக்களப்புக்கு முதல் முதல் வந்த ஆயுத வண்டியில், கிரான் குளம் கடற்கரையில் வந்திறங்கி மண்ணில் கால் வைத்த வேளை அவர் அடைந்த ஆனந்தத்தை, நேரில் பார்த்தேன். புலிகள் எம்மவரை தாக்கிய போது உகந்தை காட்டுக்குள் சென்ற ரட்ணம் [துரைரட்ணம்] விக்கி, பரா, அப்பாவி தருமன், சங்கர் உட்பட பலரை தொடர்புகொள்ள நான் சென்ற வேளை, ரவியும் அவர்களுடன் இருந்தார். குமார், அருள், சின்ன ரஞ்சித், நிதி போன்றவர்களின் இழப்பு அவரை பாதித்து இருந்தது. வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்ட வெற்றி வாய்ப்புக்கு, ரவியின் மக்களுடன் நெருங்கி பழகும் நடவடிக்கை தான் காரணம். சிவாஜி நடித்த முதல் மரியாதை படத்தில் வரும் “”பூங்காற்று திரும்புமா என் பாட்டை விரும்புமா” பாடலை ரவி பாடினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்த குரலும் பலிகொடுக்கப்பட்டுவிட்டது.

தோழர் கமலன் [மிகிலார்]

பிட்டும் தேங்காய் பூவும் என சொல்லின் செல்வர் செல்லையா ராஜதுரை அவர்கள் குறிப்பிடும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் கிழக்கில், மருதமுனை என்ற அழகான முஸ்லிம் கிராமத்தில் பிறந்து, இயக்கத்தில் தன்னை இணைத்து கடுமையாக உழைத்த உன்னதமான முசல்மான், எங்கள் கமல் எனும் மிகிலார். முஸ்லிம் காங்கிரஸ் வேர்விடும் நேரத்தில், அது பற்றி ஆலோசனை கேட்க கொள்ளுபிட்டியில் இருந்த நீதிபதி இஸ்மாயில் வீட்டுக்கு, அடிக்கடி வருவார் எம் எச் எம் அஸ்ரப் அவர்கள். அது நீதிபதியின் மகன் காதிரி இஸ்மாயில் எமக்கு உதவிய காலம். அவரை சந்திக்க நான் போகும் போது, மர்ஹூம் அஸ்ரப் அவர்களும் அங்கிருப்பார். காதிரி இஸ்மாயில் என்னிடம் அஸ்ரப்புடன் நெருக்கத்தை ஏற்படுத்துவது எதிர்காலத்துக்கு நல்லது என்றார். கமலிடம் செய்தியை சொல்லி முஸ்லிம் காங்கிரசுடன் கிழக்கில் உறவை வளர்க்க சொன்னேன். வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டதால், கமல் – மிகிலார் போட்டியிடவில்லை. இருந்தும் அவரை மாகாண சபையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு உள்வாங்க கட்சி விரும்பியபோதும் அவர் முஸ்லிம் காங்கிரசின் முக்கியத்துவத்தை உணர்ந்து மறுத்துவிட்டார். பதவி விரும்பாத அந்த முசல்மானையும் பலிகொடுத்துவிட்டனர்.

தோழர் கவிதா – தோழர் யசிந்தா

உடன் பிறவா சகோதரிகள், இணை பிரியா தோழிகள். புலிகள் எம்மவரை தாக்கி அழித்தபோது திக்கு திசை தெரியாது சென்றவர்களில் ஒருவர் அக்கரைபற்று சர்மா. மலையக தொடர்பின் மூலம் தேயிலை தோட்ட குடியிருப்பில் தங்கி இருந்தார். அப்போது கொழும்பில் இருந்த என்னை தேடி ஒரு பெண் வந்தார். தன்னை கவிதா என அறிமுகப்படுத்தியவர், என்னை முன்பு காரைதீவில் குமார் நடத்திய கலந்துரையாடலில் சந்தித்ததை நினைவூட்டி, சர்மாவை மலையகத்தில் தொடர்ந்தும் வைத்திருக்கும் சிரமத்தை கூற, நான் மலையாகம் சென்று சர்மாவை கூட்டிவந்து அபு யூசுப் அவர்களிடம் பாரப்படுத்த, அவர் தான் படிப்பித்த கொம்பனிவீதி பாடசாலையில் தங்கும் ஏற்பாட்டை செய்தார். கவிதா காற்று புகும் இடமெல்லாம் போய் வரக்கூடிய திறமையான உளவாளி. கூடவே துணைக்கு யசிந்தா. நீண்ட நெடிய பயணங்களை கிழக்கின் கிராமங்களில் அவர்கள் இருவரும் மேற்கொண்டதால், நாம் அறுவடை செய்தது வடக்கு கிழக்கு மாகாண அரசு. புலிகளுக்கு அஞ்சாது இயக்க வேலைகளை இரகசியமாக செய்த இருவரையும் அராஜகத்துக்கு பலி கொடுத்தனர்.

தோழர் அன்பு முகுந்தன்

திருமலை வேலைத்திட்டத்தில் ஜோர்ஜ் தவராஜா தம்பிராசாவுக்கு துணையாக நின்றவன். எதைப்பற்றியும் கவலைப்படாத, விளைவுகளால் துவண்டுவிடாத முகம் மலர்ந்த உழைப்பாளி. பாராளுமன்ற தேர்தலில் ஈரோஸ் ராஜா [ரட்ணராஜா] விடம் தோற்றதை சிரித்துக்கொண்டே என்னிடம் கூறியவனால் ஜோர்ஜின் இழப்பை தாங்க முடியவில்லை. அன்று அவன் அழுத அழுகை இன்றும் என் நினைவில். அவனது ஆடை அணியும் நேர்த்தி பார்ப்பவருக்கு பெரிய அதிகாரி எனும் எண்ணத்தை ஏற்படுத்தும். மாகாண சபைக்கு வேலைதேடி வருபவர்களை பதிவு செய்யும் கடமையில் சீலன் மாஸ்டர், கைலன் ஆகியவருடன் மிக கண்ணியமாக, துரிதமாக அவன் செயல்ப்பட்ட விதத்தால் அனைத்து அதிகாரிகள், செயலாலர்களால் மதிக்கப்பட்டான். அவனையும் பலியாக்கினார்.

தோழர் கோமளராஜா

சிறைச்சாலை திணைக்களத்தில் பணிபுரிந்தவர். பழகுவதற்கு இனியவர். மட்டக்களப்பு சூரியா லேனில் அவரின் வீட்டு வாசலுக்கு போனால், முழு குடும்பமும் வெளியில் வந்து உபசரிக்கும். மாகாண சபை தேர்தலில் அயராது உழைத்து எமக்கு வெற்றிக்கனியை பெற்றுத்தந்தவர். என்னை விட வயதில் மூத்தவர். மாகாண சபையில் ஏற்பட்ட உறுப்பினர் வெற்றிடத்துக்கு நாபா அவரை நியமித்து கௌரவப்படுத்தினார். நயவஞ்சகர்கள் பலிகொடுத்துவிட்டனர்.

தோழர் லிங்கன் – தோழர் புவிநாதன் – தோழர் ரவி

இந்த மூவரும் நாபாவுடன் கொண்டிருந்த நெருக்கம்தான், தலைவனுக்காக தற்கொடையான அவர்களது உயிர். இவர்களில் லிங்கன் தனித்து தெரிவான். காரணம் கறுத்த மேனியன் சிரித்தால் மின்னலடிக்கும் வெண்மையான பற்களுக்கு சொந்தக்காரன். இவர்களின் நீண்ட நெடிய தலைவனின் நிழலாக செயல்பட்ட பணி, எதிர்பார்க்கை இல்லாத இவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் என்பவை, எத்தர்களால் பலிகொடுக்கப்பட்டது.

தோழர் தருமன் [டேஞ்சர் தருமன்]

இந்திய அமைதிப்படை வாகனத்தில் சாய்ந்தமருது தாமரைக்கேணி மைதானத்துக்கு வந்வர்களுடன் வந்தபோது தான், இவரை முதலில் சந்தித்தேன். ஆனால் அவர் பற்றிய பயத்தை சாய்ந்தமருது மாளிகைகாடு வெள்ளையன், ரகீம், பாரூக் போன்றவர்கள் எனக்கு ஏற்கனவே கூறியிருந்தனர். மொசாட்டின் வஞ்சகவலையில் விழுந்த சில முஸ்லிம்கள், காரைதீவு என்னும் தமிழ் கிராமத்தில் செய்த அநியாயத்துக்கு, எதிர் நடவடிக்கை எடுக்க தருமன் வருவான் என்ற பயத்தில், அவர்கள் காரைதீவில் வட்டவிதானையாராக இருந்த தருமனின் தகப்பனை தாஜா பண்ணி, சமாதான ஒப்பந்தம் போட்டனர். அவர்கள் தருமன் பற்றி பேசும் போது டேஞ்சர் [DANGER ] தருமன் என்றே குறிப்பிடுவர். ஆனால் அவனை நேரில் பார்த்து பழகிய போதுதான், அவனது மென்மையான குணம் எனக்கு புரிந்தது. 4 பெண் சகோதரிகளுடன் பிறந்தவன். அன்று புலிகள் சூளைமேடு சக்காரியா கொலனி தொடர்மாடியில், 5ம் இலக்க வீட்டில் இருந்தவர்களை சுடும் சத்தம் கேட்டு, எஸ் ஜி க்கு [செயலாளர் நாயகம், Secretary General] ஆபத்து என தான் தங்கி இருந்த 19ம் இலக்கத்தில் இருந்து அவரை பாதுகாக்க ஓடிவந்த வேளை, அவனும் பலிகொடுக்கப்பட்டான்.

இந்த வரலாற்று நாயகர்கள் பற்றி சிறு குறிப்பை மட்டுமே தற்போது பதிவிட்டுள்ளேன். நான் எழுதி முடித்த [1000 பக்கங்கள்] “”நான் கடந்து வந்த பாதை”” புத்தகத்தை பதிவிட ஏற்றுக்கொண்ட பதிப்பகம், தமது வேலைப்பழு காரணமாக பதிவிடுவதில் காலதாமதம் செய்ததால், எதிர்வரும் ஜூன் 19ம் திகதி தியாகிகள் தினத்தில், நான் திட்டமிட்ட புத்தக வெளியீடு சாத்தியம் இல்லை. அதனால் தியாகிகள் தின மூலவர்கள் பற்றிய முன் பதிவை மட்டும், சுருக்கமாக பதிவிடுகிறேன். இவர்கள் உட்பட ஏனையவர்கள் பற்றிய பல சம்பவங்களை உள்ளடக்கிய விரிவான, ஆதாரங்களுடனான எனது புத்தகம் விரைவில் வெளிவரும்போது, நடந்த உண்மைகள் பகிரங்கமாகும். காலம் தன் கடமையை செய்யும். இது முடிவல்ல. ஆரம்பம். அதுவரை இயக்கத்திலும், கட்சியிலும் ஒற்றை பனை மரமாக இருந்த நான், தியாகிகள் தினத்தில் என் இதய அஞ்சலியை அனைவருக்கும் தொடர்ந்தும் தனிமையில் செலுத்துவேன்.

(ராம்)

விமர்சிப்பவர் வசதிக்காக என் மின் அஞ்சல் rajmali@hotmail.co.uk