நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சொல்லும் செய்தி

குறித்த கடிதம், அவர் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறிய பின்னர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அந்தத் கடிதத்தின் படங்கள், அலைபேசியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைதான், ஆரம்பத்தில் இணைய, சமூக ஊடகங்களில் வெளியாகின. அவற்றை, நீதிபதி சரவணராஜா அல்லது அவரோடு நெருக்கமாக இருந்தவர்கள் ஊடகங்களிடம் வழங்கியிருக்கலாம்.

முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் அத்துமீறி புத்தர் சிலை அமைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் நீதிபதி சரவணராஜா, தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறார். அதில், சட்டத்துக்கு புறம்பாக குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அகற்றப்பட்ட வேண்டும் என்கிற விடயம் முக்கியமானது.

ஏனெனில், அவரின் இடைக்கால உத்தரவுகள், தீர்ப்புக்களையெல்லாம் புறந்தள்ளி, தொல்பொருள் திணைக்களத்தினால் இராணுவத்தின் பங்களிப்போடு, குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன. புத்தர் சிலையும் வைக்கப்பட்டது.

 தொல்லியல் சிதைவுகள் அல்லது ஆதாரங்கள் குருந்தூர் மலையில் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் கூறுகின்றது. அது, பௌத்த அடையாளங்கள் என்றும் கூறுகின்றது. அதனால், குருந்தூர் மலையில் தமிழ் மக்களினால் காலங்காலமாக முன்னெடுக்கப்படும் ஆதிசிவன் வழிபாட்டினை அனுமதிக்க முடியாது என்ற வாதம் தொல்லியல் திணைக்களத்தினாலும், பௌத்த அதிகார சக்திகளினாலும் வாதிடப்படுகின்றது. குருந்தூர் மலை பௌத்த தொல்லியல் பிரதேசம், அதனால் அங்கு பௌத்த கட்டுமானங்களை அமைப்பதுதான் சரி என்பது, தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளின் தொடர் வலியுறுத்தல்.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில், வரலாற்று காலம் தொட்டு குருந்தூர் மலையில் ஆதிசிவன் வழிபாடு முன்னெடுக்கப்படுகின்றது. அதனை, எந்தவித இடையூறு இல்லாமல் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது கோரிக்கை. அத்தோடு, குருந்தூர் மலையில் காணப்படும் பௌத்த தொல்லியல் எச்சங்கள் தொடர்பில் நியாயபூர்வமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, அவை எந்தக் காலத்துக்குரியவை என்பது அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்  என்பது இன்னொரு கோரிக்கை. ஏனெனில், அங்கு காணப்படும் பௌத்த எச்சங்கள், தென் இந்தியாவிலும் வடக்கு கிழக்கு இலங்கையிலும் தமிழ்ப் பௌத்தம் கோலொச்சிய காலங்களின் எச்சமாக இருக்கலாம் என்பது வாதம்.

பௌத்த தொல்லியல் எச்சங்கள் எங்கு மீட்கப்பட்டாலும் அவை, சிங்கள பௌத்தத்தின் எச்சங்கள் என்பது, தொல்லியல் திணைக்களத்தில் நிலைப்பாடாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தின் கந்தரோடையில் காணப்படும் பௌத்த எச்சங்களையும் அவ்வாறான கண்ணோட்டத்திலேயே தொல்லியல் திணைக்களமும், அதனை இயக்கும் சக்திகளும் வரையறுக்கின்றன.

ஏனெனில், அந்த எச்சங்கள் தொடர்பில் உண்மைத்தன்மை வெளிப்பட்டால், வடக்கு கிழக்கில் தமிழ் பௌத்தத்தின் எழுச்சி வீழ்ச்சி பற்றிய உரையாடல் களம் பிறக்கும். அப்படி, அவ்வாறான உரையாடல்கள் நிகழ்ந்தால், இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு உரியது என்ற வாதம் அடிப்பட்டுபோகும் என்பது தென் இலங்கையின் நினைப்பு. அதற்காக, வடக்கு கிழக்கில் அரச மரங்களைக் கண்டால் அங்கெல்லாம் புத்த சிலைகள் வைக்கப்படுகின்றன. அதுபோல, மலைகள், குன்றுகளைக் கண்டாலும் அங்கு புத்த சிலைகள் வைக்கப்பட்டு, பௌத்த சிங்கள ஆதிக்கத்தின் குறியீடாக அவை நிலைபெறுகின்றன.

இந்த நிகழ்ச்சி நிரலின் போக்கில்தான், நீதிமன்ற உத்தரவுகளை மீறி குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானங்கள் செய்யப்பட்டன. வடக்கு கிழக்கிற்கு வெளியே, கண்டுபிடிக்கப்படும் தொல்லியல் எச்சங்களும், பிரதேசங்களும் அவ்வாறே பாதுகாக்கப்படுகின்றன.

அங்கு வலிந்த கட்டுமானங்களை தொல்லியல் திணைக்களம் செய்தில்லை. ஆனால், வடக்கு கிழக்கில் மாத்திரம் அத்துமீறிய கட்டுமானங்களை செய்வது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதற்காக, ஏனைய மதத்தினரின் வழிபாட்டிடங்களை அழித்தல், அகற்றல் என்ற சட்டத்துக்கும் நீதிக்கும் எதிரான செயற்பாடுகளும் தொடர்கின்றன.

அவ்வாறான நிலையில், குருந்தூர் மலையில் கட்டப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்கள் தொடர்பில் நீதிபதி சரவணராஜா வழங்கிய தீர்ப்புக்கள் தென் இலங்கையின் ஆதிக்க சக்திகளை எரிச்சலூட்டின.

கொழும்பிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள், குருந்தூர் மலைக்கு சென்று ஆதிக்க மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நீதிபதி சரவணராஜா, குருந்தூர் மலைக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டபோது, அங்கு அத்துமீறி தலையீடுகளைச் செய்ய சரத் வீரசேகர முயன்றார். அதுபோல, பௌத்த பிக்குகள் சிலரின் தலையீடுகள் இருந்தன.

அத்தோடு, நீதிபதி சரவணராஜாவை பொது வெளியில் விமர்சித்து உரையாற்றினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படலாம் என்ற அச்சத்தினால் சரத் வீரசேகர பாராளுமன்ற சிறபுரிமைக்குள் ஒழிந்து கொண்டு இனவாத உரைகளை ஆற்றியிருக்கிறார். அதில், நீதிபதி சரவணராஜாவை மனநலம் குன்றியவர் என்பது வரை அவர் பேசியிருந்தார். அத்தோடு, தென் இலங்கையின் கடும்போக்கு சக்திகள் நீதிபதி சரவணராஜாவை படுமோசமாக விமர்சிக்கவும் தொடங்கின. இந்தப் பின்னணியில், நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார்.

 நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றத்தோடு ஆட்சியதிகார பீடங்களும் சட்டமா அதிபர் திணைக்களமும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, நீதிபதியை சட்டமா அதிபர் நேரடியாக அழைத்து, குருந்தூர் மலை தொடர்பிலான வழக்கில் தீர்ப்புக்களை மாற்றுமாறு அழுத்தங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மையை நூறு வீதம் யாரினாலும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மறுக்கிறார். ஆனால், சட்டத்தரணிகள் சங்கங்கள் தொடங்கி, எதிர்க்கட்சிகள் வரையில் நீதிபதியின் நடவடிக்கைகள் மீது தலையீடுகளும் அழுத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விமர்சிக்கின்றன. இவ்வாறான நிலை, நாட்டின் நீதித்துறையை மிகமோசமாக பாதித்துவிடும்.

 நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறி எங்கிருக்கிறார் என்பது இதுவரை யாருக்கும் உறுதியாக தெரியாது. இப்போதுதான், விசாரணைக்கான உத்தரவினை நீதி அமைச்சர் விடுத்திருக்கின்றார். இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்க வேண்டும் என்றால், நீதிபதி சரவணராஜா தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பேச வேண்டும். ஏனெனில், அவருக்கு தொடர் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் இருந்தால் அதனை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டிருக்கலாம். அல்லது, அவரே பொது வெளியில் வெளிப்படுத்தியிருக்கலாம் என்ற வாதம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்றது.

 இலங்கை நீதித்துறையில் பணியாற்றும் நீதிபதிகள் பலரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ் பேசும் நீதிபதிகள் மீதான அச்சுறுத்தல்கள் என்பது வெளிப்படையானது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றுக்கு அஞ்சாது பணியாற்றும் நீதிபதிகள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அப்படியான நிலையில், நீதிபதி சரவணராஜா தன்மீதான அச்சுறுத்தல்களை எதிர்த்து நின்று  போராடியிருக்க வேண்டும் என்ற விடயத்தை புறந்தள்ள முடியாது.

அந்தவகையில், நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் கேள்விகளுக்கு அப்பாலானதாக மாறுகின்றது.

இலங்கையில் அரசாங்கம், நீதித்துறை என்று அனைத்துத் துறைகளையும் தாண்டிய அதிகாரம் பெற்றது பௌத்த சிங்கள பீடங்களும், அதன் துணைச் சக்திகளும். நாடு, பௌத்த சிங்கள அதிகார பீடம் என்கிற அச்சில்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றது. அப்படியான நிலையில், அந்த அதிகார பீடத்தினை கேள்வி கேட்கும் தரப்புக்கள் மீதான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் எவ்வாறானதாக இருக்கும் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். அவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் மக்களுக்கான நீதியை ஒரு சில நீதிபதிகள் நிலை நிறுத்துகிறார்கள். மற்றப்படி, இலங்கையின் இயங்குநிலை என்பது எப்போதும் மாறப்போவதில்லை.