முன்னாள் புலி உறுப்பினர்களின் இந்நாள் செயற்பாடுகள்

(அசோக்)
சில வாரங்களுக்கு முன், தமிழ்ஈழவிடுதலைப் புலிகளின் ஆரம்பகால தீவிர ஆதரவாளரும், புலிகளுக்கு பல வகைகளிலும் உதவி புரிந்த ஒருவரோடு உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் எல்லாக்காலங்களிலும் ஒரு குறிப்பிட்ட நபர்களை கடுமையாக நம்பி மோசம்போன மனிதர் என்றார். அவர் அதற்கு பல உதாரணங்களையும் சொன்னார். இப் பேச்சில் லண்டனில் இருக்கும் புலிகளின் மூத்த உறுப்பினர் என சொல்லிக் கொள்ளும் “அண்ணாச்சியைப் ” பற்றியும் கதை வந்தது.

அண்ணாச்சி, இன்றும் சுய ஆளுமை அற்ற நபராக ,அதிகார சக்திகளின் பின்னால் தொங்கிக் கொண்டு அரசியல் செய்பவர் என்றும், அவர்களின் அடிமையாகவும், விசுவாசியாகவும் மாறக்கூடிய ஒரு நபர் என்றும், தனிநபர்களை முன்னிறித்தி அவர்கள் பின்னால் ஒட்டண்ணி அரசியல் வாழ்வு செய்பவர் என்றும் என் அபிப்பிராயத்தை முன்வைத்தேன்.
“இப்போதும் அவர் மாறவில்லையா” என ஆச்சரியம் கொண்டார். பிரபாகரனை அக் காலத்தில் பிழையான வழிகளில் கொண்டு சென்றவர்களில் இவரும் ஒருவர் என்றார். பிரபாகரன் சில வேளைகளில் அவசரப் பட்டு எடுக்கும் முடிவுகளுக்கு துணைபோனதாக அவர் கூறினார். அக் காலங்களில் இவரைப்போன்றவர்கள் நினைத்திருந்தால் பல கொலைகளை தவிர்த்திருக்க முடியும் என்றார். உதாரணத்திற்கு ஒன்றைச் சொன்னார்.

சென்னை பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரன் மீது பிரபாகரன் நடாத்திய துப்பாக்கி சுடு பற்றியது. இச் சம்பவத்தை பிரபாகரனோடு சென்ற லண்டன் அண்ணாச்சி நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் என்றும் இதனால் பின்னாளில் ஏற்பட்ட இயக்க முரண்பாடுகளையும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தவிர்த்திருக்க முடியும் என்றும் ஆனால் அண்ணாச்சி பிரபாகரன் “சுடுவம் ” என்றவுடன் இவர் “போட்டுத்தள்ளுவம் ” என்று சொல்லிருப்பார் என்றும் கூறினார்.
காலங்களும்- அனுபவங்களும் -கற்றல்களும் –தேடல்களும்- வயதின் முதிர்ச்சியும் ஒரு மனிதனை மாற்றத்திற்கு உள்ளாக்கும் என நாம் நம்பிவாழ்கின்றோம்.ஆனால் லண்டன் அண்ணாச்சியின் இன்றைய வாழ்வும் செயலும் இதனை பொய் எம் முன் நிரூபிக்கிறது.