ஜெயலலிதா ஜெயராம்-மறு பக்கம்

உலகில் இவரைப்போல எந்தப் பெண்ணும் அதிகளவு ஆண்களால் தவறாக பார்க்கப்பட்டவர்கள் இருக்கமுடியாது.அவர் இறக்கும்வரை அந்த தரக்குறைவான வசைமொழிகள் தொடர்ந்தன.அதையும் மீறி தலை நிமிர்ந்தவர்.அதன் காரணமாக அவரின் உழைப்பை விய்ந்தேன்.ஆனால் அவர் ஒரு ஆரோக்கியமான அரசியல்வாதியோ தலைவரோ அல்ல.

இவர் இறந்தபோது பலர் இவரைப் பற்றி பேசவே தயங்கினர்.அவர்களுக்கு புகழ்வதா இகழ்வதா என தெரியவில்லை.அவரைப் பற்றி பேசினால் தங்களைப்பற்றி தவறான எண்ணம் மற்றவர்கள் மத்தியில் வரலாம் என அஞ்சினர்.அஞ்சுகின்றனர்.

ஒரு பலமான ஆளுகை நிறைந்த பெண்.ஆனால் அதை தவறாகவே பயன்படுத்தினார் .ஆச்சாரம் நிறைந்த பிராமணக்குடும்பம் எனச் சொல்லப்பட்டபோதும் அந்த ஆச்சாரங்களுக்குரிய பணிவை எந்த இடங்களிலும் காண்பிக்கவில்லை .அரசியலில் நிலையான இடத்தைப், பிடித்தவுடன் அவர் ஆடிய ருத்ரத் தாண்டவம் கொஞ்ச நஞ்சமல்ல.

எல்லோரையும் காலில் விழ வைத்தார்.அந்த அடிமைத் தனத்தை அவர் மிகவும் இரசித்தார்.ஒரு அமைச்சர் வானில் வெளியே தொங்கிவர உள்ளே சசிகலாவுடன் அதைக் கண்டுகொள்ளாமலே பயணம் செய்தவர்.தனது அமைச்சர்களையே பொலிஸ்,கடற்படை,இராணுவப்படை அமைப்பில் அணிநடை செய்யவைத்து வேடிக்கை பார்த்தார்.இதைவிட எவ்வளவோ அநாகரீக செயற்பாடுகளை மறைமுகமாக வரவேற்று அரசியலை,அரச பதவிகளை கேவலப்படுத்தியவர்.அதிகாரிகளை மிரட்டி பணிய வைத்தவர்.அவருக்காகவே பொதுமக்கள் போக்குவரத்துக்களை தடை செய்தவர்.மக்களுக்கு ஏற்பட்ட அசௌரியங்களை கண்டு கொண்டதில்லை.

ஜாதி வெறிபிடித்தவர்.தொழிலாளர்களின் எதிரி.மாங்கனிச் சோலை தொழிலாளர்கள் உரிமைக்காக போராடியபோது அவர்களை சுட்டுத்தள்ள காரணமானவர்.தர்மபுரி பஸ் எரிப்பில் இறந்த மாணவிகள் பற்றி கவலைப்பட்டதில்லை.கடந்த வருடம் இதே காலத்தில் சென்னை கடலூர் பகுதி மக்கள் வெள்ளத்தால் உயிரிழந்து உடமைகள் இழந்து துன்புற்றபோதும் கவலைப்படாமல் இருந்தவர்.

இவரின் ஆணவத்தினுடைய உச்சம் வளர்ப்பு மகன் சுதாகர்னின் திருமணம்.இந்த திருமணம் தமிழ் நாட்டையே தலை குனிய வைத்தது.கும்பகோணத்தில் கும்பமேளா விழாவில் இவரின் வரவு காரணமாக ஏற்பட்ட கெடுபிடிகளால் பலர் ஆற்றில் மரணமானார்கள்.

இவரின் கீழ் இயங்கிய எந்த அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் சுதந்திரமாக இயங்க அனுமதித்ததில்லை.சுயேட்சையாக நின்று இரண்டு கட்சிகளுக்குமே சவாலாக திகழ்ந்த தாமரைக்கனியை பொலிஸ் அதிகாரத்தை வைத்து மிரட்டி தி.மு.க பக்கம் ஓட வைத்தவர்.இவரால் பாதிக்கப்பட்டோர் பலர்.சந்திரலேகா,வக்கீல் விசயன்,இவரது கணக்காளர் என இப்படியே இவர் பற்றி பல விசயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.இது மட்டுமா எவ்வளவு ஊழல்கள். நாங்கள் மறக்கலாம்.ஆனால் வரலாற்றில் இவை பதிவாகும்.என்றொ ஒருநாள் மீண்டும் நினைவுக்கு வரும்.உண்மைகளை எத்தனை ஆயிரம் பொய்களாலும் மூடி மறைக்க முடியாது.

ஒரவரிடம் இருக்கும் திறமைகளை ஒத்துக்கொண்டாக வேண்டும்.திறமை இருப்பவன் எல்லோரும் நல்ல மனிதர்கள் அல்ல.மக்களுக்கும் சமூகத்துக்கும் உதவாத திறமைகளால் என்ன இலாபம்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள்.அதற்காக உங்கள் விளம்பரங்களுக்காக பொய் புகழாரம் செய்யாதீர்கள்.ஏனெனில் ஜெயலலிதா அரசியலில் பொது வாழ்வில் கறை படிந்த அத்தியாயத்தின் சொந்தக்காரி.அந்தக்கறையை அவரே உருவாக்கினார்.

இவரது மரணம் தனிப்பட்ட முறையில் கவலைக்குரியதாகினும் அரசியல்,சமூகம் என்ற பொதுவெளியில் வரவேற்புக்குரியதே.இவரோடு தொடங்கிய அசிங்கமான அரசியல் கலாச்சாரம் இவரின் மரணத்தோடு முடியும் என்றே நம்புகிறேன்.

(Vijay Baskaran)