முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!..

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை கோரிக்கையாக, சமஸ்டி அரசியல் அமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பே முன்னிலை பெறுகிறது. இதில் சமஸ்டிக்கு முறைமைக்கு சிங்கள பெரும்பான்மை சம்மதிக்கவில்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் பெரும்பான்மை இணங்கவில்லை. இதுவே என்று எல்லோர் வாயிலும் அகப்பட்ட அவல்.

இந்த இரண்டு விடயங்களில் ஊருக்குள் இளைத்தவன் பிள்ளையார் கோவில் பூசாரி என்பது போல, பழிசுமந்த மேனியர் ஆவது முசல்மான்களே. கிழக்கு மாகாணத்தில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள், இணைப்புக்கு இணக்கம்காட்ட மறுப்பதாக கூறி அவர்களை எதிரிகள் போல சித்தரிப்பவர், அவர்களை தம் விருப்பபடி விமர்சிக்கும் வேளையில், தம்மை சுயவிமர்சனம் செய்ய தவறுகின்றனர்.

கிழக்கில் பிட்டும் தேங்காய் பூவும் போல அடுத்தடுத்த ஊர்களில், காலா காலமாக ஒட்டி உறவாடி வாழ்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும், நிரந்த முரண் நிலைக்கு இன்று வந்தற்கு யார் காரணம் என்பதை, முதலில் இதய சுத்தியுடன் ஆராயும் மனநிலை எழுத்தாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் முதலில் ஏற்படவேண்டும். வெறுமனே தாம் சார்ந்த இனத்துக்கு சார்பானதாக எழுதவோ விமர்சிக்கவோ கூடாது.

வடக்கை சேர்ந்தவன் என்றாலும் கிழக்கில் வாழந்த உறவுகள், என்னை கிழக்கு மண்ணில் கால் பதிக்க வைத்த, எனது பத்து வயது முதல் நான் அறிந்தவற்றை பதிவேற்றுகிறேன், அனுபவங்களை நினைவு மீட்டுகிறேன். யாழில் இருந்து காலை ஆறு மணிக்கு புறப்படும் இலக்கம் 86, இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து, ஏறாவூர் அடைய மாலை ஐந்து மணியாகும். வேலாயுதம் கடை வாசலில் காத்திருக்க  ஆறு  மணிக்கு வரும், உன்னிச்சை போகும்  இரவு கடைசி பஸ்.

யார் இந்த வேலாயுதம்.? வடக்கின் கரவெட்டியில் இருந்து கிழக்கின் ஏறாவூர் வந்த, பெரிய பலசரக்கு கடையின் உரிமையாளர். பிரதேசவாதிகளின் பாணியில் மட்டக்களப்பானுக்கு பொருள் விற்று பெரும் லாபமீட்டும் யாழ்ப்பாணி. அவரின் கடை காலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை திறந்திருக்கும், அதனால் படுவான்கரையை சேர்ந்த பெரும்பாலானவர் உட்பட உள்ளூரவரும், கணக்கு வைத்து பொருள் வாங்கிச் செல்வது அவர் கடையில் தான்.

செங்கலடி சந்தியில் இருந்து பதுளை வீதியூடாக இலுப்படிச்சேனை, பன்குடாவெளி உட்பட கரடியனாறு சந்தியில் திரும்பி உன்னிச்சை வரை உள்ள அத்தனை கிராமத்தவரும், பொருள் வாங்க செல்வது அவரின் கடைக்குத்தான். ஒருசிலர் மட்டக்களப்பு போனால் அங்கும் இராஜேஸ்வரி ஸ்டோர்ஸ் அவர்களின் தெரிவு. அதுவும் வடக்கில் இருந்து வியாபாரத்துக்காக கிழக்கில் கால்பதித்தவரின் கடையே.

சானா கூனா, கே வி எம் என அங்கு இருந்த பல பெரும் பணம் படைத்த செல்வந்தர் எல்லாம், வடக்கில் இருந்து கிழக்குக்கு வந்து தம்மை வளமாக்கியவர்களே. கே டபிள்யு தேவநாயகம், செல்லையா இராஜதுரை, ஜோசப் பரராஜசிங்கம் மட்டுமல்ல புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் வடக்கின் மூலவித்துகள் தான். அவர்களே வியாபாரிகளாக, நில உடைமையாளராக, அரசியல் பிரமுகர்களாக கிழக்கில் இருந்தவர்கள்.

கிழக்கின் மீது வடக்கின் ஆதிக்கம் கோலோச்சிய காலத்தில், அவர்களை வெறுக்கும் மனநிலை கிழக்கு தமிழருக்குள் புகையத்தொடங்கியது. காரணம் அவர்கள் நடத்தும் வியாபார நிலையத்தில் சிற்றூளியர்களாய், அவர்களின் பலஏக்கர் வயல்களுக்கு முல்லைகாரன்களாக, அவர்களுக்கு சொந்தமான பல நிறம் கொண்ட மாட்டுப்பட்டிகளையும், செம்மறி ஆட்டுப்பட்டிகளையும் மேய்ப்பவர்களாகவுமே கிழக்கின் மண்ணின் மைந்தர்கள் நடத்தப்பட்டமையே.

தங்களின் சொந்த வயல்களில் தாமே வேளாண்மை செய்யத் தேவையான நிதி தேடிச்சென்ற, சிறு சிறு வயல்கள் வைத்திருப்பவரிடம் பெரிய தொகை வட்டியாக இவர்களால் அறவிடப்பட்டது. விளைந்த நெல் தம் வீடு வந்து சேராமல், கடன்பட்ட முதலுக்கும் வட்டிக்கும் சரியாகி போனதால், மரைக்கால் நெல்லுக்கு தன் சேனை செய்கைமூலம் கிடைத்த சோளம், மரவள்ளி பண்டமாற்றாக கொடுத்து சோறு பொங்கும் நிலை விதைத்தவனுக்கு.

இங்குதான் மரைக்கார் தன்னை முன்னிலைப்படுத்தினார். முஸ்லிம் மக்கள் அடிப்படையில் வியாபார சமூகம். தம் இனம்சார்ந்த செயலை மத அடிப்படையில் முன்னெடுப்பவர்கள். எதை எங்கு வாங்குவது அதை விற்று எவ்வாறு லாபமீட்டுவது என்பதில் முனைப்பு காட்டுபவர்கள். ஒரு முட்டை முஸ்லிம் கையில் கிடைத்தால் அதில் முட்டை அப்பம், அல்லது கொத்துரொட்டி போட்டு விற்று லாபம் பெற்றுவிடுவார்.

அது தமிழன் கையில் கிடைத்தால் அதில் ஒட்டி இருக்கும் கோழி எச்சம் பற்றி விவாதித்து, சுத்தமான முட்டை இல்லை என முரண்பட்டு, கையில் இருக்கும் முட்டை கூழ் முட்டையாகும் வரைக்கும் வாதப் பிரதிவாதம் தொடரும். உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா என்பது போலவே இருப்பதை விட்டு பறப்பதற்கு பழக்கப்பட்டவர், கிழக்கிலும் தன் இனத்துக்கும் அதைத்தான் செய்தனர்.

அதிக வட்டி வாட்டி வதைக்க சகோதர இனத்தவர் நீட்டிய கரத்தை பற்றுவதே தான் கரை சேரும் வழி என நினைத்ததால், மரைக்கார் கொடுத்த முதலில் தன் நிலத்தில் விதைப்பை தொடங்கினான் கிழக்கின் மைந்தன். ஆரம்பத்தில் முழுமையாக கடனை திருப்பி கொடுக்காவிட்டாலும் மரைக்கார் கால அவகாசம் கொடுத்ததால், சாப்பாட்டு நெல்லாவது கிடைத்ததே என்ற சந்தோசம், மீண்டும் கடன்பட வைத்தது.

கடனுக்கு மேல் கடன் ஏற, வயலை ஒத்திக்கு வைக்கும் வழமை கைகொடுத்தது. ஆனால் காலத்தின் சாபக்கேடு விதைக்கும் போது வராத மழை அறுவடையின் போது அடித்து ஊற்றி, கட்டிவைத்த உப்பட்டி நெல்லை நிலத்தில் சிந்தவைக்கும். உன்னிச்சை குளத்து நீரில் விளைந்த நெல் நிலத்தில் கொட்டி பயனற்றுப்போக நஸ்டமடைந்த விதைத்தவனை, மரைக்கார் வசம் தன் வயலை மீண்டும் ஒத்திக்கு வைக்கும் நிலைக்கு தள்ளும்.

ஒத்திக்கு மேல் ஒத்தி என்றால் என்றுதான் மரைக்கார் கடனை அடைப்பது?. வேண்டாம் இந்த தொழில் என தன் வயலை விற்று விடும் முடிவில், ஊரில் உள்ள தமிழ் போடியாரிடம் போனால் அவர் அடிமாட்டு விலை கேட்பார். அடிமாடு வாங்கி இறைச்சி வியாபாரம் செய்யும் அபூபக்கர், தன் வயல் செய்யும் ஆசைக்காக நியாயமான விலை கொடுத்து, வயலை தன் பரம்பரைக்கு வாங்கிப்போடுவார்.

இப்படித்தான் கிழக்குமாகாண தமிழர் நிலங்களில் பெரும்பான்மை நிலங்கள், ஆபத்வான்களாக உதவிய, சகோதர இனத்திடம் சென்றடைந்தது. சம்பா விளையும் சம்மாந்துறை முதல். தென்னம் தோட்டங்கள் நிறைந்த பொத்துவில், கஜூ மரம் விளையும் வந்தாறுமூலை வரை முதல்போட்டு, தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலையாலும், அதிக வட்டி வாங்கிய சொந்த இனத்தவர் செயலாலுமே கைமாறியது.

பிழைப்பு தேடி சென்ற இடத்தில் லாபம் சம்பாதித்த பின்பு, தன் இனத்துக்கு உதவும் எண்ணம் அன்றே இருந்திருந்தால் இன்று இணைப்புப் பற்றி ஒப்பாரி வைக்க வேண்டிய நிலை வந்திராது. அதே வேளை தங்கள் தவறுகளை மறைக்க, மரைக்கார் தான் உங்கள் நிலத்தை மடக்கி விட்டார், தொடர்ந்தும் அபகரிக்கிறார் என்ற உண்மைக்கு புறம்பான குரல் எழுப்பி, இனங்களிடையே எதிர்ப்பையும் இவர்களே விதைக்கின்றனர்.

இவர்கள் தம் இனத்தவருக்கு கொடுத்த கடன், வட்டியுடன், குட்டியும் போட வேண்டும் என்று நினைத்து செயல்பட்ட விதத்தால், ஒருகாலத்தில் கிழக்கில் யாழ் அகற்று சங்கம் கூட உருவாகியது என்பதை எத்தனை பேர் அறிவார்கள். அன்று தாம் செய்த செயலே கிழக்கு தமிழர்களின் பெரும் நிலங்கள், மாற்று இனத்தவர் கைக்கு மாற்றியதை மறைத்து, இன்று காத்தான்குடி பற்றி புலம்பித் தள்ளுகிறார்கள்.

எதோ திட்டமிட்ட நில அபகரிப்பை முஸ்லிம்கள் செய்வதுபோல கூறி, அவர்களை எதிரிகள் போல சித்தரிப்பது ஏற்புடையதல்ல. கிழக்கில் அரசின்  திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கும், முஸ்லிம் மக்களின் பரம்பலுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. தமிழர் வாழ்ந்த வளமான பிரதேசங்களில் தெற்கில் இருந்து மக்களை கொண்டுவந்து, அரச மானியம் கொடுத்து குடியேற்றுவது போல அல்ல கிழக்கில் முஸ்லிம் மக்களின் பிரசன்னம்.

தமிழர்கள் தம்வசம் இருந்த தென்னம் தோட்டங்களை, காணிகளை, வயல் நிலங்களை, வியாபார நிலையங்களை தம்மால் தொடர்ந்து பராமரிக்க இயலாமலோ அல்லது வேறு காரணங்களாலோ அதிகூடிய விலை தருபவர்கள் என்பதால், முஸ்லிம்களுக்கு தாமே விற்றுவிட்டு, இப்போது அதை அபகரிப்பு என்று எப்படி கூறமுடியும்?. அவர்களை எம் எதிரிகள் போல எப்படி விமர்சிக்க முடியும்?.

உண்மையில் முஸ்லிம்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. அவர்கள் போட்டியாளர்களே. மதரீதியாக கட்டுண்ட இனமாக அவர்கள் இருப்பதால் சகோதரத்துவம் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் முன்னிலை பெறுகிறது. நாடு முழுவதும் பரந்து வாழும் அவர்கள் ஹம்பான்தோட்டையிலும், காலியிலும், பேருவளையிலும் கொழும்பிலும், காத்தான்குடியிலும், அக்கரைப்பற்றிலும் ஏனைய சமூகத்தவருடன் வியாபாரத்தில் போட்டி போடுகிறார்கள்.

அவர்களிடையே காணப்படும் மத இன ஒற்றுமையால் வெற்றிகளையும் பெறுகிறார்கள். விளையாட்டு போட்டியில் வென்றவர்களை பார்ப்பது போலவே வியாபார போட்டியில் வென்றவர்களும் பார்க்கப்படல் வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் எதிரியாக பார்க்கப்படுகிறார்கள். எம்மவர் மட்டுமல்ல சிங்களத்தினது பார்வையும் இதுவே. தாங்கள் வாழும் பிரதேசத்தில் அவர்கள் தம்மை முன்னிலைப்படுத்தி தம் இருப்பை தக்கவைப்பதில் என்ன தவறு?

அவர்களின் அரசியல் செயல்பாடு கூட மத இனம் சார்ந்த முடிவாகவே அமைகின்றது. ஒவ்வொரு இனத்திற்கும் தன் தனித்துவத்தை பேணும் உரிமை உண்டு. அதற்கான வழிமுறைகள் அவரவர் தெரிவு. சிங்கள இனத்தின் எதிர்காலம் பற்றிய சிந்தனையால் பௌத்த மதம் முன்னிலைப் படுத்தபட்டு, திட்டமிட்ட அரச சார்பு சிங்கள குடியேற்றம் போல முஸ்லிம் தலைவர்கள் செயல்படவில்லை.

காத்தான்குடியில் பேரீச்சை மரத்தை நாடுவதோ, திருகோணமலை நோர்த் சென்றால் வீதியில் உள்ள கடைகளை அவர்கள் வாங்குவதோ, அல்லது வவுனியா நகர கடைகளின் பெரும்பான்மை அவர்கள் கையில் இருப்பதோ, சகல வசதியும் கொண்ட  வைத்தியசாலையை அமைப்பதோ, அல்லது உலகத்தரம் வாய்ந்த பல்கலை கழகத்தை உருவாக்குவதோ அவர்கள் அடாத்தாக செய்யும் செயல்கள் அல்ல.

தமக்கு கிடைத்த அரசியல் அங்கீகாரத்தை, அமைச்சர் பதவிகளை அவர்கள் தம் இனத்துக்காக, தாம் வாழும் பிரதேச அபிவிருத்திக்காக பயன் படுத்தினால் அதை தவறாக சித்தரித்து, அவர்களை எப்படி எதிரிகளை பார்ப்பது போல பார்ப்பது?. தமது மக்களுக்கு தேர்தல் காலத்தில் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாத, கையாலாகத்தனம் கொண்டவரின் காழ்ப்புணர்சியே இவ்வாறான புலம்பல்கள்.

அரச தலைமைகளுடன் தாம் மட்டும் கூடிக் குலவி, தமது பதவி சார் வசதிகளை பெற்றுக்கொண்டு, இனத்தின் உரிமைக்காக எந்த விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயார் இல்லை என தம்பட்டம் அடித்து, ஒவ்வொரு தேர்தலிலும் இதுதான் தீர்வு என்று, கானல் நீரை தேடியோடும் மான்களை போல, மக்களை அலையவிட்டு, அவர்கள் அகதியாய் வாழும் நாடுகளில், தேர்தல் நிதி சேகரிக்கும் இவர்கள் தான் எதிரிகள்.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற பசப்பு வசனம் பேசியே தமிழக முதல்வரான கருணாநிதி, தன் உறவுகளை வளப்படுத்தியது போலவே எம்மவர் அவலங்களை தீர்க்க ‘தமிழ் தேசியம்’ வெறும் மேடைப்பேச்சாக மட்டுமே வீறுகொண்டு எழும். கையில் கிடைத்த முட்டையை கூட கூழ் முட்டையாக்கும் செயலை செய்து, இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை தவறவிட்டவர்கள் தான், இன்று முஸ்லிம்களை விமர்சிக்கின்றார்கள்.

எமது அரசியல் தீர்வுக்கு ஆரம்ப முதலே முட்டுக்கட்டை போடும், சிங்கள பேரினவாதத்துடன் முட்டி மோத முடியாது, இணைப்புக்கு அஞ்சும் முஸ்லிம்களை ஏன் எதிரிகளாக்க வேண்டும்?. கடந்த கால கசப்பான அனுபவங்களால் ஏற்பட்ட அவர்களின் மன அச்சம் நீங்கும்வரை, அவர்கள் இணைப்புக்கு விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள். 2 மணித்தியால அவகாசத்தில் வடக்கில் இருந்து விரட்டியதை அவர்கள் மறப்பார்களா?.

புலிகள்தான் விரட்டினார்கள் என்றால் இன்றுவரை ஏன் அவர்களை முழுமையாக மீள் குடியேற்றம் செய்யவில்லை?. கிழக்கில் இரு பகுதியினரும் வெவ்வேறு காலகட்டங்களில் ஒருவர் மீது ஒருவர் வன்மத்தை தீர்த்துகொண்டது உண்மை. ஆனால் வடக்கில் அவ்வாறான எந்த நிகழ்வும் இல்லை. இருந்த போதும் விரட்டப்பட்டதால், இணைந்த வடக்கு கிழக்கில் என்ன நடக்கும் என்ற பயம், அவர்களுக்கு ஏற்ப்படாதா?

எமக்கு ஏற்புடைய தீர்வு தான் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கான ஏதுநிலைகளை நாம் தான் உருவாக்க வேண்டும். மற்ற இனங்களின் மனதில் நாம் நியாயமாக நடப்போம் என்ற, நம்பிக்கை மட்டுமே நல்லுறவை ஏற்ப்படுத்தும். பெரும்பான்மை சிங்களவர் எமக்கு இளைக்கும் தவறுகளை, நாமும் எம்முடன் வாழும் சிறுபான்மைக்கு செய்தால், எமக்கும் சிங்களத்துக்கும் என்ன வித்தியாசம்.

தமிழர் பிரதேசத்தில் அரசு திட்டமிட்ட குடியேற்றத்தை செய்தது, செய்கிறது. வடக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அரசின் படைகள் கையடக்கப்படுத்தி வைத்திருக்கிறது. அதற்கான போராட்டங்கள் நியாயமானதே. எம்மிடம் இருந்து அடாத்தாக பறிக்கப்பட்டதை, எதிரியின் செயல் எனலாம், ஆனால் நாமே ஏதோ காரணங்களால் விற்ற இடங்களை வாங்கிய முஸ்லிம்களை, எப்படி எதிரிகள் என்பது?.

விற்பனை போட்டியில் அதிகூடிய விலை கோருபவன் வென்றால் அவன் போட்டியாளன்… எதிரி அல்ல. தமிழர் நிலங்களை மற்ற இனத்தவர் வாங்கி விட்டார் என புலம்புபவர் அதனை தவிர்க்க, தாம் களம் இறங்கவேண்டியது தானே. பொங்கு தமிழ், எழுக தமிழ் என பேரணிகளை நடத்தி, கோடிகளை சுருட்டிவிட்டு வெறும் கோசங்கள் மட்டும் போட்டு, வெற்று பிரேரணை நிறைவேற்றுவதை விட்டு விட்டு தமிழர் பிரதேசத்தில் காணிகள் விற்ப்பனைக்கு வந்தால், நீங்களே வாங்கி அகதி முகாமில் சதியில் வாழும் எம்மவருக்கு, நன்கொடையாக கொடுங்கள். வியாபார நிலையங்களை வாங்கி போராளிகளுக்கு, வாழ்வாதார வேலை வாய்ப்புகளை கொடுங்கள். எண்ணற்ற விதவைகளை மண்ணில் உருவாக்கிய ஆயுத போராட்டம் முடிந்தாலும் நிர்க்கதியான அவர்களின் நாளாந்த போராட்டம், இன்னமும் தொடர்கிறது.

புலம்பெயர் தேசத்து பெரும் நிதியாய் கிடக்கும் லச்சங்களையும் கோடிகளையும் வேற்று கோசங்களுக்கு வீணாக்காமல், எம் பிரதேசத்துக்கும், எமது மக்களுக்கும் தேவையான பயனுள்ள வழிகளில் முதலீடுகளாக பயன்படுத்துங்கள். எங்கள் மண் எங்களுக்கே என்பதை அரசுக்கும் அதனது இராணுவத்துக்கும் மட்டுமல்ல, வியாபார போட்டியாளருக்கும் என ஆக்குங்கள். முஸ்லிம்கள் எதிரிகள் அல்ல போட்டியாளர்கள் என்ற பார்வையில் செயல்படுங்கள்.. அவர்கள் மனங்களையும் நம்பிக்கையை விதைத்து வெல்ல முயலுங்கள். இணைப்பு நிதர்சனமாகும்.

– ராம் –