பிஹார் தேர்தல் முடிவும் கைநழுவிய பிறந்த நாள் பரிசும்!

ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி அலுவலகம் வெறிச்சோடிக் கிடந்ததைக் காட்டி, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்ட முயன்றது ஒரு சேனல். தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டபோது ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான ‘மகா கட்பந்தன்’ கூட்டணி முன்னிலையில் இருப்பதை உற்சாகமாகக் காட்டிக்கொண்டிருந்த சேனல்கள், சில மணி நேரங்களிலேயே தங்கள் தொனியை மாற்றிக்கொண்டன. வழக்கம்போல மோடி புகழ் ஒலிக்கத் தொடங்கியது.
Powered by Ad.Plus

அதுவரை பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்த லாலு குடும்பத்தினர் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருப்பார்கள் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. தேஜஸ்வியின் பிறந்த நாள் (நவம்பர் 9) பரிசாக முதல்வர் பதவி கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு அது அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். “அரியணைதான் உனக்குப் பிறந்த நாள் பரிசு” என்று தேஜஸ்வியின் அண்ணன் தேஜ் பிரதாபும் அதீத நம்பிக்கையுடன் ஆசி வழங்கியிருந்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே தேஜஸ்வியின் உறவினர்களும் பட்னாவுக்குப் படையெடுத்திருந்தனர். ஆர்ஜேடி தொண்டர்கள் ஒட்டியிருந்த பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்களிலும் இந்த எதிர்பார்ப்பே எதிரொலித்தது. ஆனால், 31 வயதிலேயே முதல்வர், தந்தை – தாய் இருவரும் வகித்த முதல்வர் பதவியை அலங்கரிக்கும் முதல் தலைவர், முதல்வர் பதவியில் அமரும் முதல் (முன்னாள்!) கிரிக்கெட் வீரர் என்பன போன்ற பெருமைகளை அடைந்திருக்க வேண்டிய தேஜஸ்வி, கடைசிப் பந்தில் வெற்றி வாய்ப்பை இழந்த கிரிக்கெட் அணி கேப்டன் போல ஸ்தம்பித்து நிற்கிறார்.

கனவைத் தகர்த்த காங்கிரஸ்

தேஜஸ்வியின் அரியணைக் கனவு தகர்ந்ததன் பின்னணியில் பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை, வெற்றியாளர் அறிவிப்பு போன்றவற்றில் குளறுபடி நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட காரணிகள் இவை. அவற்றில் பிரதானமானது ‘மகா கட்பந்தன்’ கூட்டணியில் 70 இடங்களில் போட்டியிட்டு, 19 இடங்களில் மட்டும் வென்ற காங்கிரஸின் வறட்டுப் பிடிவாதம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிறிய கட்சியான விகாஸ் ஷீல் இன்ஸான் கட்சிகூட, போட்டியிட்டவற்றில் பாதிக்கு மேற்பட்ட தொகுதிகளில் வென்று காட்டியிருக்கிறது. ஆனால், 27 சதவீத ‘ஸ்ட்ரைக் ரேட்’டை மட்டுமே பெற்று பரிகாசத்துக்கு ஆளாகி நிற்கிறது காங்கிரஸ். கூடவே, ஆர்ஜேடியின் அரியணைக் கனவுக்கும் குழிபறித்து விட்டது.

உண்மையில் 48 இடங்களை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்க தேஜஸ்வி திட்டமிட்டார். ஆனால், பிஹாரில் தங்களுக்கு அதிக பலம் இருக்கிறது என்று கருதிய காங்கிரஸ் மேலும் அதிக இடங்களைக் கேட்டு நெருக்கடி கொடுத்தது. ஒருகட்டத்தில், சிறையில் இருக்கும் லாலு பிரசாத் தலையிட வேண்டிவந்தது. அதன் பின்னரே காங்கிரஸுக்கு 70 தொகுதிகள் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், வேட்பாளர் தேர்வில் தடுமாற்றம், தவறான வியூகங்கள் ஆகியவற்றின் காரணமாகத் தனக்கு மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது காங்கிரஸ்.

மிதிலாஞ்சல் பகுதியில் ஜாலே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மக்சூர் உஸ்மானி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக இருந்தவர். வெளிப்படையாகவே ஜின்னாவை ஆதரித்துப் பேசுபவர். உண்மையில் இந்தத் தொகுதி, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து காங்கிரஸுக்கு வந்தவரும், மறைந்த காங்கிரஸ் தலைவர் லலித் நாராயண் மிஸ்ராவின் பேரனுமான ரிஷி மிஸ்ராவுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தனக்கு சீட் இல்லை என்று தெரிந்ததும், மக்சூரை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ் தலைமையை ரிஷி கடுமையாக விமர்சித்தார். இதை பாஜக கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. “ஜின்னா ஆதரவாளர்களுக்கா உங்கள் வாக்கு?” என்று அக்கட்சி செய்த பிரச்சாரம் நன்றாகவே வேலைசெய்தது. விளைவாக, மிதிலாஞ்சல் பகுதியில் 9 தொகுதிகளை மகா கட்பந்தன் இழந்தது. இது ஓர் உதாரணம்தான். இப்படி காங்கிரஸின் பல வியூகங்கள் தவறாகிப் போயின.

2019 மக்களவைத் தேர்தலின்போதும் இதே கதைதான். அந்தத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது காங்கிரஸ். ஆர்ஜேடி ஒரு இடத்தில்கூட வெல்லவில்லை என்பது வேறு விஷயம். மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39 தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சென்றுவிட்டது. படுதோல்விக்கான காரணங்களை ஆராயாமல் ஆர்ஜேடி மீது பாய்ந்தது காங்கிரஸ்.

“குறைந்தபட்சம் 14 தொகுதிகளாவது எங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிக் கிடைத்திருந்தால் பல தொகுதிகளில் வென்றிருப்போம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சதானந்த் சிங் வாதிட்டார். இது தேஜஸ்விக்கு எரிச்சலூட்டியது. “தொகுதிப் பங்கீட்டில் தாராளம் காட்டத்தான் செய்தோம். ஆனால், தங்கள் பலம் என்ன பலவீனம் என்ன என்பதைச் சம்பந்தப்பட்ட கட்சிகள் உணரவில்லை” என்று பதிலடி கொடுத்தார்.

இந்தத் தேர்தலில் பாஜகவுடன் நேரடியாக மோதிய பல தொகுதிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது காங்கிரஸ். அந்தத் தொகுதிகளில் ஆர்ஜேடி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும்.

ஒவைஸி தந்த உளைச்சல்

மகா கட்பந்தனின் தோல்விக்கு அசாதுதீன் ஒவைஸியின் அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியும் ஒரு காரணியாகப் பேசப்படுகிறது. சீமாஞ்சல் பகுதியில் அக்கட்சி 5 தொகுதிகளில் வென்றிருக்கிறது. 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் இவற்றில் 4 தொகுதிகளில் மகா கட்பந்தன் கூட்டணி வென்றது கவனிக்கத்தக்கது.

சீமாஞ்சல் பகுதியில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, யாதவ் சமூகத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். ஏஐஎம்ஐஎம் அங்கு போட்டியிடாதிருந்தால், அல்லது மகா கட்பந்தன் அணியில் சேர்ந்திருந்தால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஒவைஸியின் இந்த வியூகம் பிஹாரில் மதச்சார்பற்ற சக்திகளின் வளர்ச்சியை முறியடித்து பாஜக வளர்வதற்குத் துணைபுரிந்திருக்கிறது எனும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

“ஆர்எஸ்எஸ், ஏஐஎம்ஐஎம் இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்” என்று காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சித்திருக்கிறார். பாஜகவின் இன்னொரு அணியாக ஏஐஎம்ஐஎம் இருக்கிறதா எனும் ஹேஷ்யங்கள் புதிதல்ல. கடந்த சில மாதங்களாகவே இதைப் பற்றிய விவாதங்கள் நடந்துவந்தன.

ஆனால், அதை முற்றிலும் மறுத்த ஒவைஸி, “சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் (உபா) பாஜக கொண்டுவந்த திருத்தத்தை காங்கிரஸ் ஆதரிக்கத்தானே செய்தது? இப்போது அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் எனப் பலர் அந்தச் சட்டத்தில் கைதுசெய்யப்படுகிறார்களே, இதற்குக் காங்கிரஸின் பதில் என்ன?” என்று கேட்டார். “மகா கட்பந்தன் கூட்டணியில் இருந்த நிதிஷ் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு என்ன காரணம்? இந்துத்துவ கட்சியான சிவசேனாவுடன் (மகாராஷ்டிரத்தில்) காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கிறதே?” எனக் கேள்விகளை அடுக்கினார்.

உண்மையில், ஒவைஸிக்கு இந்த அளவு செல்வாக்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 2015 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. ஐந்து தொகுதிகளில் டெபாசிட்டையே இழந்தது. எனினும், 2019 அக்டோபரில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஏஐஎம்ஐஎம் வேட்பாளரான கம்ரூல் ஹோடா, பாஜக வேட்பாளரை வென்றார். பிஹாரில் அக்கட்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி அது.

அதன் பின்னர் உத்வேகத்துடன் செயலாற்றிவந்த அக்கட்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் / என்.ஆர்.சி போன்றவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியதன் மூலம் முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைப் பெறத் தொடங்கியது. தங்களுக்காகக் குரல் கொடுக்கும் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளைவிடவும், தங்களின் பிரதிநிதிகளாக நின்று போராடும் ஒவைஸி மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. இவற்றையெல்லாம் மகா கட்பந்தன் கட்சிகள் கவனித்தனவா என்பது முக்கியமான கேள்வி.

தற்போது தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்திருக்கும் ஒவைஸி, “பிஹார் தேர்தலில் மகா கட்பந்தனின் தோல்விக்கு நாங்கள் காரணம் என்றால் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு என்ன காரணம்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். “8 மாதங்களுக்கு முன்பு ஆர்ஜேடியின் முக்கியத் தலைவர்கள் இருவரிடம் கூட்டணி தொடர்பாகப் பேச முயன்றேன். ஆனால், நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் என்று ஒரு தலைவர் என்னிடம் கேட்டார்” என்றும் கூறியிருக்கிறார்.

தந்தை லாலு பிரசாத் வழியில் மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுக்கும் தேஜஸ்வி கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை.

ஒன்மேன் ஆர்மி

இந்தத் தேர்தலில் மகா கட்பந்தனுக்கு 37.23 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 37.26 சதவீதம். வெறும் 0.03 சதவீத வித்தியாசம்தான். தனிப்பெரும் கட்சியும் ஆர்ஜேடிதான். அதனால்தான், தேஜஸ்வியிடமிருந்து முதல்வர் பதவி கைநழுவிப் போனது குறித்து பெருமளவில் விவாதங்கள் நடக்கின்றன.

தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாதகமாக இருந்த அரசியல் சூழலை, ஒற்றையாளாக நின்று தன் பக்கம் திருப்பியவர் தேஜஸ்வி. கட்சிக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வளர்ந்தவர் அவர். தொடர்ந்து இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வி. 2015 தேர்தலில் மகா கட்பந்தன் கூட்டணி வென்றபோது, தேஜஸ்விக்குத் துணை முதல்வர் பதவி கிடைத்தது. எனினும், நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்துகொண்ட பின்னர் திரும்பவும் அரசியல் வன வாசத்தை அனுபவிக்க வேண்டிவந்தது.

2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், கட்சிக்குள் கடும் எதிர்ப்புக் குரல்களை தேஜஸ்வி எதிர்கொள்ள நேர்ந்தது. “தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து தேஜஸ்வி விலக வேண்டும்” என கட்சியின் மூத்த தலைவர் மகேஷ்வர் பிரசாத் யாதவ் போர்க்கொடி உயர்த்தினார். அவற்றையெல்லாம் தாண்டித்தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் தேஜஸ்வி.

லாலுவின் மகன் எனும் காரணத்துக்காகவே இந்தத் தேர்தலில் எதிர் முகாமிலிருந்து காட்டமான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. லாலு குடும்ப ஆட்சி காட்டாட்சியாக இருந்தது என்று பிரதமர் மோடி, நிதிஷ் குமார் என எல்லோரும் விமர்சித்துக்கொண்டே இருந்தனர். எனினும், அவற்றை லாவகமாக எதிர்கொண்டார் தேஜஸ்வி. ஆர்ஜேடி போஸ்டர்களில்கூட லாலுவின் படத்தை அதிகம் பார்க்க முடியவில்லை. எங்கெங்கு காணினும் தேஜஸ்வியின் முகம்தான்.

“என்னிடம் சொல்லுங்கள். நான் செவிசாய்ப்பேன். செயலாற்றுவேன்” எனும் முழக்கத்துடன் இந்தத் தேர்தலை அவர் எதிர்கொண்டார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூடிய கூட்டங்கள் முக்கியமான விஷயத்தை உணர்த்தின. பெருமளவிலானவர்கள் இளைஞர்கள்; சாதி, மத எல்லைகளைக் கடந்து அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இது சமீபத்தில் எந்த இளம் தலைவருக்கும் கிடைத்திராத அரசியல் பலம்.

புதிய சாலைகள், மின் வசதி, புதிய பள்ளிக் கட்டிடங்கள் என்று நிதிஷ் கொண்டுவந்த வளர்ச்சிப் பணிகள் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், காவல் துறையில் பெண்களுக்குப் பணி என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் பெண்கள் மத்தியில் அவருக்குக் கணிசமான ஆதரவுத் தளத்தை உருவாக்கியிருந்தன. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து வேலைவாய்ப்பின்மையும், அதனால் பிஹார் இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின்மையும் சேர்ந்து தேஜஸ்வியை பெரும் ஆளுமையாக உருவாக்கின.

10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்று அவர் முன்வைத்த வாக்குறுதி பற்றித்தான் மோடி, நிதிஷ் முதல் ஊடகங்கள் வரை அனைவரும் விவாதித்தனர். மொத்தத்தில் இந்தத் தேர்தலின் குவிமையமாக தேஜஸ்விதான் இருந்தார்.

ஆட்சிக் கட்டிலில் அமர முடியாவிட்டாலும், எதிர்க்கட்சித் தலைவராக இன்னும் சிறப்பாக அவர் செயல்படுவார் என நம்பலாம். வாரிசு அரசியல் எனும் விமர்சனங்களையும் தாண்டி தனித்தன்மை மிக்க தலைவராக மிளிர்வார் என்பதையும்தான்!