அகாலம் ……….!

சிங்கள மக்களை எமது எதிரிகளாக நினைக்கும் வண்ணம் இயக்கத்தால் போதித்து வளர்க்கப்பட்டவர்களின் எழுத்துக்களும் இன்னும் அதைத்தான் கூறிக்கொண்டிருக்கின்றன..சிங்கள மக்கள் பலரிடம் காணப்படும் வாஞ்சையையும் ,மனிதாபிமானத்தையும் பல தருணங்களில் அனுபவித்து உணர்ந்தவள் நான்..தமது இனமக்களிடையே பலவித சாதிப்பிரிவினைகள் ….பாகுபாடுகள் காட்டும் …சுயநலம் கொண்ட கீழானவர்களும் எம்மினத்துக்குள் இருப்பதை இத்தகையோர் எழுத மறுப்பதேன்… எனது ”அகாலம் ” நூலில் சில சிங்கள மக்களிடம் நான் கண்ட மனதுவக்கும் சம்பவங்களைப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன்..அதில் ஒரு சம்பவம் அகாலத்தில் இருந்து

எனது தந்தையாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு நானும் ,என் சகோதரன் புஷ்பராஜாவும் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து போலீஸ் காவலுடன் மயிலிட்டிக்குக் வரும்போது …

…” சிங்களக் கிராமங்கள் ஊடாகச் சிறைச்சாலை வாகனம் போய்க் கொண்டிருந்தது ..வழி நெடுகிலும் இருந்த கிராமங்களில் ஏழை விவசாயிகள் ,மரக்குற்றிகளில் முருங்கைக்காய்க் கட்டுக்களையும் ,காய்கறிகளையும் வைத்துக்கொண்டு அவற்றை வாங்கிச் செல்லுமாறு கரங்களைக் குவித்து வணங்கிக் கொண்டிருந்தார்கள் ..ஆண்கள் இடுப்பில் நீளமான வெறும் கோவணத்துடனும் ,பெண்கள் கந்தலான அழுக்கு ஆடைகளைக் கட்டி ,நிர்வாணமான குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டும் பரிதாபமாக நின்றார்கள்.

நாம் வந்து கொண்டிருந்த வாகனம் ஆங்காங்கே நிறுத்தப்பட இந்த ஏழை விவசாயிகளிடம் இருந்து காய் கறிகளை வாங்கிக் காவலர்கள் வாகனத்தில் நிறைத்துக் கொண்டார்கள்..காக்கிச் சட்டைகளுடன் பேரம் பேச முடியுமா என்ன? வீசப்பட்ட சொற்ப சில்லறைகளை ஆவலுடன் பொறுக்கிக் கொண்டு விவசாயிகள் குனிந்து வளைந்து மறுபடியும் கரங்களைக் குவித்து வணங்கினார்கள் …பார்க்கவே மிகவும் மனதை வலிக்கப் பண்ணிய காட்சியிது..

வாகனம் சிங்களக் கிராமமொன்றில் நிறுத்தப்பட ,அங்கிருந்த ஒரு வீட்டுக்கு எல்லோரும் சென்றோம்.. மண்ணால் அமைந்த அந்தச் சிறிய வீடு மிக அழகாய் இருந்தது.. அறைகள் பிரிக்கப்பட்டு ,சன்னல்களுக்குத் திரைச் சீலைகள் போடப் பட்டு மிகவும் சுத்தமாக அந்த வீடு இருந்தது…அந்த வீட்டின் வராந்தாவில் உணவருந்தும் மேசையும் நாற்காலி களும் இருந்தன

நாங்கள் சற்று இளைப்பாறிச் செல்லவே அந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்…ஆனால் அந்தச் சிங்களச் சகோதரர்கள் எங்களை உணவருந்திச் செல்லுமாறு அன்புடன் வேண்டிக் கொண்டார்கள். இரண்டு பயங்கர வாதிகள் அன்று அந்த வீட்டில் வயிறு நிறையச் சாப்பிட்டார்கள் .

.எங்களை விருந்தோம்பிய அந்தக் குடும்பம் ஒன்றும் வசதியான குடும்பமல்ல..அவர்களுக்குச் சமைத்திருந்த உணவைத்தான் அவர்கள் எங்களுக்குத் தந்திருக்கவேண்டும் ….

அங்கே உணவருந்திக் கொண்டிருக்கும்போது ,எனது தாயாரால் எங்களுக்கென்று சிறைக்கு அனுப்பப்பட்ட உணவைத் திருடித் தின்று விட்டு எனக்கு எச்சில் [மிச்ச] சோற்றைத் தந்த நமது பச்சைத் தமிழ்ப் போலீஸ்காரர்களின் முகங்கள் என் ஞாபகத்தில் வந்து போயின…மனம் நிறைந்த நன்றிகளை அந்தச் சிங்களச் சகோதர ,சகோதரிகளுக்கு என் வாயினால் மட்டுமல்லாமல் இருதயத்தாலும் சொன்னேன்

(அகாலம் பக்.140, 141)