அனந்தி சசிதரன் எழுப்பியிருக்கும் கலகக்குரல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) மீண்டும் ஒருமுறை கலகக்குரல் எழுப்பியிருக்கின்றார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியின் கூட்டத்தில் பெண் பிரதிநிதிகள் யாருக்கும் உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயம் தொடர்பிலேயே அனந்தி சசிதரனின் ‘உரிமை கோரலுக்கான குரல்’ கலகக்குரலாக மேலெழுந்திருக்கின்றது.  கலகக்குரல் என்பது குழப்பம் விளைவிக்கும் செயன்முறை என்கிற அடையாளப்படுத்தல்கள் எமது சூழலில் பலமாக இருந்து வருகிறது.

ஆனால், கலகக்குரல்கள் விடயங்களை மேல்நோக்கிக் கொண்டு வந்து, பரந்துபட்ட உரையாடல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை பெரும்பாலும் ஏற்படுத்துவதுண்டு.

கலகக்குரல்களுக்கும் குட்டையைக் குழப்பி மீன்பிடிப்பதற்கும் இடையில் வித்தியாசம் உண்டு. கலகக்குரல்களில் அதிகம் தொனிப்பது நீதி கோரலுக்கான பாங்கு. ஆனால், குட்டையைக் குழப்பி மீன்பிடிப்பது என்பது, பெரும்பாலும் அரசியல் சுய இலாபங்கள் சார்ந்தது.

அனந்தி சசிதரன் இப்போது எழுப்பியிருக்கும் கலகக்குரல், புதிதாக எழுந்த ஒன்றல்ல. தொடர்ச்சியாக நீடிக்கும் கூட்டுக் கோபத்தின் வெளிப்பாடு. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும் அதன் இயங்குநிலையும் பெண்களை மேல் மட்டத்தில் உள்வாங்கிக் கொள்வதில் பெரும் தயக்கத்தோடு இருந்து வருகின்றது.

குறிப்பாக, ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான, கடந்த ஏழரை ஆண்டு காலத்தில் பெண்களை நேரடியாக உள்வாங்கித் தமிழ்த் தேசியப் பரப்பு மேற்கொண்ட உரையாடல்கள் மிகவும் குறைவு; இல்லையென்றே கூடச் சொல்லலாம்.

போருக்குப் பின்னரான சமூகமொன்றின் ஒட்டுமொத்த இழப்பின் குறியீடாக பெண்களே இருக்கின்றார்கள். அந்த நிலையிலேயே, தமிழ்ச் சமூகமும் இருக்கின்றது.

அப்படிப்பட்ட நிலையில், பெண்களை அரசியல் உரையாடல்களுக்குள் உள்வாங்கி பிரதிபலிக்க வேண்டியது என்பது தவிர்க்க முடியாதது. அதுவே, முன்நோக்கிய பயணத்தை சரியாக வடிவமைக்க உதவும்.

அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், கல்விமான்கள் உள்ளிட்ட தரப்புக்களை உள்வாங்கிக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு 15 மாதங்கள் ஆகிவிட்டது. பேரவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

முதலில் மட்டக்களப்பில் தமிழ்ப் பண்பாட்டு விழாவொன்று நடத்தப்பட்டது. அதன்பின்னர், கடந்த வருடம் எழுக தமிழ் பேரணி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. இப்போது, எழுக தமிழின் இரண்டாவது கட்டமும் மட்டக்களப்பில் நிறைவடைந்திருக்கின்றது.

இதற்கிடையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு சார்ந்து, பேரவையினால் தீர்வுத் திட்ட வரைபொன்றும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால், பேரவை ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது பெண் பிரதிநிதித்துவம் குறித்தது.

ஏனெனில், பேரவையின் மத்திய குழுவிலோ, செயற்குழுவிலோ பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் தேடிப்பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சும்.

அதனை, பேரவையின் இணைத் தலைவர்கள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மருத்துவர் பூ.லக்ஷ்மன், ரீ.வசந்தராஜா உள்ளிட்டவர்கள் தொடர்ச்சியாக ஏற்றுக்கொண்டும் வந்திருக்கின்றார்கள்.

ஆனால், அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பிலான முயற்சிகள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. அதன் நீட்சியே அனந்தி சசிதரன் எழுப்பிய கலகக்குரலாகவும் பேரவை மீது படர்ந்திருக்கின்றது.

அனந்தி சசிதரனின் கலகக்குரல் கீழ்க்கண்டவாறு நீள்கிறது. “தமிழ் மக்கள் பேரவையில் பெண்களுக்கான உரிய அங்கிகாரம் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். ஓர் இயக்கமாக வளர்ந்து வருகின்ற பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போல, பெண்களுக்கு அங்கிகாரத்தினை வழங்கவில்லை. அறுபது வீதமான பெண்கள் உள்ள நாட்டில் சாதி, மத பேதமின்றி பேரவை அடிமட்டத்திலிருந்து பேரியக்கமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு பெண் பிரதிநிதித்துவத்தின் பங்களிப்பினை ஆரம்பத்திலேயே வழங்க வேண்டும். மட்டக்களப்பில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின் கூட்டத்தில் பெண் பிரதிநிதிகளுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தேன். குறைந்தது பேரவையிலுள்ள ஒரே பெண் உறுப்பினருக்காவது அந்தச் சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று நம்பினேன். ஆனால், அது வழங்கப்பட்டிருக்கவில்லை. கடந்த முப்பது வருட யுத்த காலத்தில் அதிக வலிகளைத் தாங்கி நிற்பவர்கள் பெண்கள். அவர்களின் வலிகளை நேரடியாகப் பதிவு செய்யும் சந்தர்ப்பத்தை எழுக தமிழ் மேடை தவறவிட்டிருக்கின்றது” என்றிருக்கின்றார்.

எழுக தமிழ் மேடையில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்கிற கோபத்திலேயே அனந்தி சசிதரன் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார் என்கிற விடயம் ஊடகங்களில் பரவி வந்தது.

குறிப்பாக, பேரவைக்குள் இருக்கும் இரண்டு அரசியல் தலைவர்கள், அனந்தி சசிதரன் எழுக தமிழ் மேடையில் உரையாற்றுவதை விரும்பவில்லை என்கிற செய்தி இணைய ஊடகங்களிலும் யாழ்ப்பாணத்தின் இரண்டு முன்னணி பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது.

எனினும், எழுக தமிழ் மேடையில், தான் உரையாற்றுவதற்கான கோரிக்கைகளை விடுத்திருக்கவில்லை என்று அனந்தி சசிதரன் விளக்கமளித்திருக்கின்றார்.

இந்த நிலையில், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும், மட்டக்களப்பு எழுக தமிழ் பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களில் முக்கியானவருமான ரீ.வசந்தராஜா ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

அதில், “அனந்தி தனது அமைப்பை தமிழ் மக்கள் பேரவையில் இணைத்துக் கொண்டிருந்தால் அவருக்கு மேடையில் பேசுவதற்கு வாய்ப்பளித்திருக்க முடியும். தமிழ் மக்கள் பேரவையில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து கொண்டுள்ளன.

தமிழ் மக்கள் பேரவை உருவாகி, இப்பொழுது ஒன்றரை வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால், இதிலே அனந்தி சசிதரன் ஏன் தனது அமைப்பை இணைத்துக் கொள்ளவில்லை என்பதற்கான காரணம் நமக்குத் தெரியாது.

பெண்கள் தங்களுக்கான குரலாக தாங்களே நேரடியாக எழுக தமிழில் உரையாற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையை எவரும் முன் வைத்திருக்கவுமில்லை. அப்படி ஏதேனும் கோரிக்கைகள் வந்திருந்தால் அதனைப் பரிசீலித்திருக்கலாம்.

மேலும், எத்தனையோ பெண்கள் அமைப்புக்களை தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து கொள்ளுமாறு நேரில் சென்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், அந்த பெண்கள் அமைப்புக்கள் எவையும் துணிச்சலோடு முன்வரவில்லை.

இந்த அமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு அவர்கள் அச்சத்தோடு இருக்கின்றார்கள்” என்றிருக்கின்றார்.
தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நீட்சி பெண்களின் பெருமெடுப்பிலான பங்களிப்போடுதான் அடுத்தடுத்த கட்டங்களை அனைத்துத் தருணங்களிலும் அடைந்திருக்கின்றது.

அது, அஹிம்சை வழியாக இருந்தாலும் ஆயுத வழிகளில் ஆனாலும் பெண்களை, அவர்களின் பங்களிப்பினைப் புறந்தள்ளிவிட்டு எமது போராட்டங்களின் வரலாற்றினையும் போராட்டத்தின் நீட்சியையும் பேண முடியாது.
இப்போதும் போராட்டக் களங்களின் நீட்சிகளாக பெரும்பாலும் பெண்களே இருக்கின்றார்கள்.

கேப்பாப்புலவு மண் மீட்புப் போராட்டமாக இருந்தாலும், காணாமல் ஆக்கப்பட்டோரை விடுவிக்கக் கோரும் போராட்டங்களாக இருந்தாலும் போராட்டங்களின் முகமாக பெண்களே இருக்கின்றார்கள்.

பெண்களே, தமிழ்ச் சமூகம் தாங்கி நிற்கின்ற வலிகளின் வடிவங்கள். அப்படிப்பட்ட நிலையில், அவர்களின் குரல்கள் மேல்மட்டத்தில் தொடர்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம்.

போராட்டங்களின் முகமாக மாத்திரம் பெண்கள் இருந்தால் போதும் என்கிற நிலையோடு, அரசியல் அதிகார உரையாடல் வெளிகளில் இருந்து, அவர்களை நீக்கம் செய்வது என்பது மீண்டும் மீண்டும் குறைபாடுள்ள சமூகத்தினை பிரசவிக்கவே உதவும்.

தமிழ்ச் சமூகத்தில் அந்த நிலை கடந்த ஏழரை ஆண்டுகளில் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கின்றது.

தேர்தல் அரசியல் களத்திலிருந்து மாத்திரமல்ல, உரையாடல் களத்திலிருந்தும் பெண்களை விலக்கி வைப்பதற்கான ஏற்பாடுகளே அதிகம் நீள்கின்றன.

இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் பேரவையும் விதிவிலக்கின்றி இருக்கின்றன. தேர்தல் அரசியல் களம் விடுகின்ற பிழைகளைச் சமூக அரசியல் களமாவது சரி செய்ய வேண்டும்.

ஆனால், தமிழ்த் தேசியப் பரப்பினை எடுத்துக் கொண்டால், இரண்டு தளமும் பெரும் குறையொன்றை, எந்தவித தார்மீக அறமும் இன்றிக் கண்டுகொள்ளாமல் கடந்து வருகின்றன.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது மாத்திரமல்ல, அதனை உள்வாங்கிச் சரியான தீர்வினை முன்வைப்பதுமே முன்நோக்கிய நிலை. அதனை, கூட்டமைப்பும் பேரவையும் செய்ய வேண்டும்.

குறிப்பாக, சமூக அரசியல் பரப்பின் முக்கிய சக்தியாகத் தன்னை வளர்த்துக் கொள்ள நினைக்கும் பேரவை, அதனை உண்மையாக உள்வாங்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதலாவது எழுக தமிழ் பேரணி காலத்திலேயே பெண்களுக்கான உரையாற்றும் தருணம் மறுக்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது.

அதனை, இரண்டாவது எழுக தமிழ் மேடையும் ஏன் பிரதிபலித்தது? இந்தப் பொறுப்பற்ற தன்மையின் நீட்சியை எப்படி நியாயப்படுத்த முடியும்?

போராட்டக்களின் முகமாக இருக்கின்ற பெண்களின் குரல், முக்கியமான வெகுசன போராட்ட வடிவங்களில் ஒன்றான எழுக தமிழில் ஒலித்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அதனை, எந்தக் காரணத்தினாலும் புறந்தள்ளிவிட முடியாதது. ஏனெனில், வெகுசன போராட்டக் களங்களை நோக்கி, பெண்களை எந்தவித தொய்வுமின்றி கொண்டு வருவதற்கு அது அவசியமானது.

எந்தவொரு வெகுசனப் போராட்டக் களமும் பெண்களில் பெருமளவான பங்களிப்பின்றி வெற்றிபெற்ற வரலாறுகளே இல்லை.

அதனைப் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். அந்த வகையில், அனந்தி சசிதரனின் கலகக்குரல் முக்கியமானது; கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

(புருஜோத்தமன் தங்கமயில்)