கேப்பாப்புலவு காணிகள்; 2 வாரங்களில் விடுவிப்பு?

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் விமானப்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமாக எவ்வளவு காணிகள் உள்ளன? அவற்றை எத்தனைக் குடும்பங்கள் கோரியுள்ளன? முகாம் அமைந்துள்ள மொத்தக் காணியையும் விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் இராணுவத் தளபதி ​லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா ஆகியோர், இன்னும் ஓரிரு தினங்களில் கலந்துரையாடி, முடிவு எட்டப்பட்ட பின்னர், அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் முறை தொடர்பில், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

காணிகள் விடுவிக்கப்படும் என்றும் போராட்டத்தைக் கைவிடுமாறும், கேப்பாப்புலவு மக்களுக்கு செவ்வாயன்று அறிவித்த போதிலும், அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இருப்பினும், எடுத்த எடுப்பில் உடனடியாக, அந்தக் காணிகளை விடுவிக்க முடியாது. அதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதனால், மக்கள் பொறுமை காத்து, அரசாங்கத்துக்கு இரு வாரகால கால அவகாசம் வழங்க வேண்டுமென்றும், அமைச்சு கேட்டுக்கொண்டது.

குறித்தக் காணியை விடுவிப்பதாக, இராணுவத் தளபதி, ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். இருப்பினும், வெறும் வாக்குறுதிகளை மாத்திரம் நம்பி, போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று, நேற்று 16ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட கேப்பாப்புலவு மக்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.