அறிவு என்பது நம் அறியாமையை நாம் அறிந்துகொள்வதே…

டபிஷ் கேர் பிஹாரில் பிறந்தவர். கவிஞர், புனைவு மற்றும் புனைவு சாரா எழுத்தாளர். முக்கிய நூல்கள் பலவற்றின் ஆசிரியர். டென்மார்க் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியர். அவரது சுவையான, சிந்தனையைத் தூண்டும் கட்டுரை ஒன்று இன்றைய The Hindu நாளிதழில் வந்துள்ளது.

அறிவுதான் நம்மை மனிதராக்குவதாக நாமெல்லாம் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் நாம் எப்போது நம் அறியாமையை அறிந்துகொள்கிறோமோ அப்போதுதான் உண்மையான மனிதனாகிறோம். இன்டெர்நெட் யுகத்தில் நாம் எல்லோரும் இந்த உண்மையை மறந்துவிடுகிறோம் என்கிறார் டபிஷ். தகவல்களையே நாம் அறிவாக நினைத்துக் கொள்கிறோம். விரல் நுனியில், மவுஸ் நகர்வில் அள்ள அள்ளக் குறையாத தகவல்கள் கிடைக்கும்போது நாம் அறிவாளி இல்லாமல் வேறு யார்?

“என்னுடைய கட்சி அல்லது இயக்கத்த்தின் கொள்கை மட்டுமே சரியானது. என்னுடைய மதம் மற்றும் அதன் வேதம் மட்டுமே போதுமானது. அதைத் தாண்டி என்ன புதிய உண்மை உலகில் இருக்கப்போகிறது?” – என நினைப்பவர்களும் இதே வகையினர்தான்.

எத்தனையோ உயிர்கள் வியக்கத்தக்க வகையில் ஏதேனும் ஓர் அறிதலைக் கைவசம் கொண்டுள்ளன. பறவைகளைப் பாருங்கள். ஆண்டின் ஒரு சரியான பருவத்தில் பல ஆயிரம் மைல்களைக் கடந்து வந்து தங்கிப் பின் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தம் பிறப்பிடத்தை அடைந்து விடுகின்றன. எலிகளும் அணில்களும் எந்த உணவை எந்தப் பருவத்தில் எங்கே கொண்டுபோய் பதுக்கி வைப்பது என அறிந்து வைத்துள்ளன. அந்தச் சின்னக் குருவி சிங்கத்தின் வாயில் அமர்ந்து அந்த மிருகத்தின் பற்களைச் சுத்தம் செய்து வைத்தியம் பார்க்கிறது.

பறவைகளும் மிருகங்களும் மட்டுமா, ஏன் காடுகளும் கூடச் சிந்திக்கின்றன என்கிறார் எடுவர்டோ கோன் (How Forests Think? Toward an Anthropology Beyond the Human that Forests Think).

ஆக பறவைகள், மிருகங்கள் எல்லாவற்றிற்கும் கூட அறிவு இருக்கத்தான் செய்கிறது. அப்படியானால் மனிதனுக்கும் அவற்றிற்கும் என்ன வித்தியாசம்? மனிதர்கள் எந்த வகையில் வேறுபட்டவர்களாகின்றனர்?

மனிதர்கள் மட்டுமே நமக்கு எது தெரியும் என்பதை மட்டுமல்ல, எது தெரியாது என்பதையும் அறிந்தவர்கள். பிற உயிர்கள் தமக்கு என்ன தெரியும் என அறிந்து வைத்திருக்கும். ஆனால் அவை தமக்கு என்ன தெரியாது என்பதை அறிந்திரா.

“Twinkle, Twinkle, Little Star, How I Wonder What You Are” – குழந்தைகள் பாடுகின்றனர். இது என்ன நமக்கு உணர்த்துகிறது? குழந்தைகள் மின்னும் அந்த நட்சத்திரங்களைக் கண்டு அதிசயிப்பது மட்டும்தான் இதில் உணர்த்தப்படுகிறதா? பறவைகளும், மிருகங்களும் கூட விண்ணைக் கண்டு அதிசய்யிக்கலாம் தானே. ஆம். ஆனால் குழந்தைகள் இங்கே அதிசயிப்பதோடு நிற்கவில்லை. அவை தம் அறியாமையையும் அல்லவா வெளிப்படுத்துகின்றன.

“நட்சத்திரமே! நீ என்ன எனத் தெரியாமல் நாங்கள் வியந்து நிற்கிறோம்….”

“உண்மையான அறிவாளி என்பவரை அவரது அறிவின் அளவை வைத்து நாம் மதிப்பிடுவதைக் காட்டிலும் அவர் எந்த அளவிற்குத் தம் அறியாமை குறித்த அறிதலுடன் இருக்கிறார் என்பதை வைத்தே மதிப்பிட முடியும்” – எனச் சொல்வதற்கு இடமுண்டு. அறிதல் அறியாமை பற்றிய அறிதல் என்கிற இவை இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை. உண்மையான அறிதல் பெறும்போது அதன் கூடவே, நாம் எதையெல்லாம் அறியாமல் இருக்கின்றோம் என்பதும் சேர்ந்தே நமக்குக் கையளிக்கப்பட்டு விடுகிறது. இந்த அறியாமை குறித்த அறிதலே நம்மை மனிதராக்குகிறது.

இன்டெர்நெட் தகவல் சேகரிப்பில் இது சாத்தியமில்லை. ‘தகவல் யுகம்’ என நாம் கொள்ளும் பெருமிதத்தில் ஏதும் பொருளிருப்பதாகத் தெரியவில்லை. தகவல் இல்லாமல் அறிவில்லை என்பது உண்மையே. ஆனால் தகவல் மட்டுமே அறிவல்ல.

ஒரு தகவல்யுகப் பயனாளி, எல்லா அறிவியல் கண்டுபிடுப்புகளுமே எங்கள் வேத காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டவைதான் எனப் பீற்றும் ஒரு இந்துத்துவவாதி, எங்களின் வேதம் இறைவனால் நேரடியாக அருளப்பட்டது, அதில் இல்லாததா எனப் பிற அனைத்திற்கும் தன்னை மூடிக் கொள்ளும் ஒரு மதவாதி எல்லோரும் சந்திக்கும் புள்ளி இதுதான் : இவர்கள் அனைவரும் தமக்குத் தெரிந்ததை மட்டுமே தெரிந்தவர்கள். தெரியாததைத் தெரியாதவர்கள்.

பாவம்.