அவர் வாழும் போதே வாழ்த்துங்கள் தோழர்களே !…….

எமது முப்பாட்டன் மகாகவி பாரதியார் பற்றி படிக்கும் போதெல்லாம் என்மனம் துடிக்கும். வாழும் போது மட்டுமல்ல அவரின் சாவின் போதும் கலந்து கொண்டவர் எண்ணிக்கை பற்றிய செய்தி அறிந்து. பிராமண சமூகத்தின் திமிர் அதி உச்சத்தில் இருந்த வேளை அதை துச்சம் என தூக்கி எறிந்து மற்ற சமூகத்தின் எச்ச நிலையை எடுத்து இயம்பியவர் அவர்.

அவர் அளவு இல்லை என்றாலும் அவர் போல் நடப்பவரை அன்று நான் சந்தித்த வேளை பாரதியார் என் நினைவில் வந்தார். அதுவும் கூட என்னை அவையத்து முந்தி இருக்க செய்த ஈ பி ஆர் எல் எப் கட்சி எனக்கு தந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை பேரவை தலைவர் பதவியால் தான் நிகழ்ந்தது. அன்று கட்டை பனையில் நெட்டை பனையாக நான் இருந்தேன்.

அதனால் தான் அந்தப் வரலாற்று பதவி எனக்கு கைமாறியது. இல்லை என்றால் இளங்கோ தோழர் என்ற அந்த தென்மராட்சி தோழன் இரவீந்திரன் தான் அந்த அரியணையில் அமர்ந்திருப்பான். நான் பட்டப் படிப்புக்காக என்னை புடம் போட்ட வேளை அவன் தன் பட்டப்படிப்பை தூக்கி எறிந்து விட்டு போராட்ட வேள்வியில் தன்னை நெய்யாகா உருக்கியவன்.

தனக்கு மும் மொழியில் ஆளுமை இல்லை என்ற உண்மையை கூறி நேர்மையாக தனக்கு வந்த பதவியை விட்டு விலகியவன். இன்று அவன் உயிரோடு இல்லை. ஆனாலும் என்றும் அவன் நினைவு என் நெஞ்சில் இறுதிவரை பசுமரத்து ஆணியாக நிலைத்திருக்கும். முதல் மூன்று மாதம் முஸ்லிம் காங்கிரஸ் சபைக்கு சமூகம் தரவில்லை.

பின்பு வந்த செய்தி எமக்கு தெம்பை தந்தது. காரணம் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரசன்னம் ஒரு மொழி பேசும் இரு இன கலப்பு. அதிலும் கிழக்கில் புட்டும் தேங்காய் பூவும் என சொல்லின் செல்வர் சிலாகித்து பேசும் முஸ்லிம் சகோதரர் வெற்றி பெற்ற மூன்று மாதம் கழித்து வருவது என்பது பாலுடன் சேர்ந்து தேயிலையும் தேநீராக மாறும் நிலை அல்லவா?

புத்துணர்ச்சி தரும் தேநீர் அருந்த பேரவை காரியாலத்தில் காத்திருந்த வேளை, தலைவரே நான் தான் ஹனிபா என்ற இன்ப தேன் என் காதில் பாய்ந்தது போல் இதம் தந்த குரல் ஒன்று கேட்டேன். நிமிர்ந்து பார்த்தேன். மெலிந்த உடல்வாகு. அரசு உத்தியோகத்தர் பாணி ஆடை. நன்கு படிய வாரிய தலை முடி. நேர் கொண்ட பார்வை கூசும் கருவிழிகள்.

மார்பகங்கள் மட்டும் இருந்தால் மான் விழி என விழித்திருப்பேன். பாவி என் முன்னால் தட்டை மார்புடன் காட்சி தந்தார். காம கண் ஒரு கணம் நீங்கி காரிய கண் கொண்டு பார்க்கையில் ஏனிவர் எல்லாம் என்னை தலலைவரே என் விளிக்கும் நிலை ஏற்ப்பட்டது என ஒரு கணம் என் மனசாட்சி என்னை குற்றவாளி கூண்டில் நிறுத்தியது.

நீ இல்லை அதற்கு காரணம் என்று எதோ ஒன்று எனக்கு சொன்னது. நம்பிய தலைமைகள் தம்மை நட்டாற்றில் கை விட்டபோது ஆயுதம் ஏந்தி களமாடி தம் இன் உயிர் நீத்தவர் பெற்று தந்த பதவியை உன் தலைமையே உனக்கு தந்தது. அதனால் சிறுமை கொளாது சிறப்பாக செய் என கூறியது உள்மனம். குருவி தலை பனங்காய் என்றாலும் சுமக்க துணிந்தேன். அதனால் தான் தலைவர் என்ற விளிப்பு.
.
கரம் நீட்டி அவரை அமர சொன்னேன். மூன்று மாதங்கள் எடுத்ததா உங்களுக்கு இங்கு வர? என நேரடியாக கேட்டேன் இறுமாப்புடன். இல்லை தோழரே எம் நிலை அப்படி அது கட்சி முடிவு நாம் கட்டுண்டோம் என்றார். என் கர்வம் காற்றில் கரைந்தது. எமக்குள் இணைப்பை தந்த தோழர் என்ற சொல் என்னை கட்டிப்போட கூடவே கட்சிக்கட்டுப் பாடு என்ற செய்தியும் என்னை சிந்திக்க வைத்தது.

மாக்சிசம் படித்தவர் மட்டுமல்ல ஐந்து நேரம் தொழுபவரும் மனிதர்களை படித்தவர்கள் தான் என்ற உண்மை எனக்கு புரிந்தது. செக்கு மாடுபோல் சுற்றி சுற்றி குறுகிய வட்டத்துக்குள் கூண்டு கிளியாக வாழ நிர்பந்திக்கபட்ட என் மனம் சிட்டு குருவி போல் சிறகடித்து பறந்தது. எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா என்று பாரதியார் பாடலை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.

தமிழ் என்றால் தமிழர் மட்டுமே என இருந்த என் கர்வத்தை முதலில் உடைத்தது என் சம கால றோயல் கல்லூரி மாணவன் ரவுப் ஹக்ஹீம். இன்று அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர். விவாத குழு, நாடக மேடை, தமிழ் கலை விழா எதுவும் ரவுப் மற்றும் ராம் இன்றி கல்லூரியில் இடம் பெறாத காலம் அது. கூடவே அவர் ஆசிரியர் சர்மாவுடன் வானொலியில் சங்க நாதம் நிகழ்சி நடத்திய காலம்.

வியந்து போவேன் அந்த இஸ்லாமிய தமிழர் நாவில் அசையும் தமிழ் கேட்டு. அதன் பின் நான் வியந்து கேட்டது ஹனிபா குரல். ஹக்கீம் குரலில் கர்வம் இருக்கும். ஹனிபா குரலில் இனிமை இருக்கும். அதனால் அவர் எனக்கு இனிய தமிழ் பேசும் நண்பர் ஆனார். இந்த இடைவெளியில் யு என் பி உறுப்பினராய் வந்தார் மர்கூம் மசூர் மொலானா.

அந்த நாளில் வடக்கில் தவில் கச்சேரி என்றால் தட்சணா மூர்த்தி சின்ன ராசா கைதடி பழனி என்றும் நாதஸ்வரம் என்றால் பத்மநாதன் பஞ்சாபி கேசன் பிரபல்யம். கோடை இடி போல இருக்கும் அவர்களின் தவில் வாசிப்பு. குளிர் தென்றல் போல நெஞ்சை ஊடறுக்கும் நாதஸ்வரம். அப்படித்தான் இருக்கும் மொலானா மற்றும் ஹனிபா பேச்சு. ஆனால் மௌலானா வுடன் மட்டும் ஏனையவர் சூடான வாதம் செய்வர்.

சூடு தணிக்க ஹனிபாவை பேச அழைப்பேன். குளிர் தென்றலாக வார்த்தைகள் கோர்வையாக வந்து நாயனம் வாசிக்கும். மகுடிக்கு கட்டுப்பட்ட நாகங்கள் போல் சீறியவர் சினம் விட்டு மேசையில் தட்டி ஒலி எழுப்புவர். உணவு வேளையில் யு என் பியும் முஸ்லிம் காங்கிரசும் கூடி குலவுவர். அரசியலில் இது எல்லாம் சகஜம் அப்பா என்பது போல் அன்பு பரிமாறுவார்.

அந்த சபையில் இருந்த தமிழ் உறுப்பினர்களில் அதிகம் பேர் நல்லுறவு கொண்டது ஹனிபாவுடன் தான். அடுத்து மௌலானாவுடன். மௌலானா ஏற்க்கனவே அரசியலில் பிரபலம். ஆனால் எம்முடன் அன்பினால் நல்லுறவு கொண்டவர் ஹனிபா. தோழரே என அழைக்கும் பாணியில் இருந்தே அவரின் வெள்ளாந்தி மனம் எமக்கு புரியும். நாபா என்ற மனிதத்தின் நெருங்கிய நண்பரானார் ஹனிபா.

அந்த நாட்கள் இன மத கட்சி பேதம் இன்றி அந்த சபை இயங்க காரணமானவர்களில் ஹனிபாவும் ஒருவர். மௌலானா மற்றவர். வேறு வேறு கட்சியில் இருந்தாலும் கனவான்கள். மௌலானாவை சீண்டுவதே திருமலை உறுப்பினர் ஜவாத் மரைக்காரின் தொடர் செயல். பதிலுக்கு சீறும் மௌலானாவுடன் ஏனைய காங்கிரஸ் உறுப்பினரும் தர்க்கிக்க பொறுமை காத்து நடுநிலை வகிப்பார் ஹனிபா.

கட்சிக்காக கண்ணியமற்ற சொற் பிரயோகம் பேசும் சாதாரண அரசியலை அவர் செய்யவில்லை. அதனால் தான் அவரால் தந்திரிகள் அரசியலில் கூடி கும்மியடிக்க முடியவில்லை. நேர்மை சத்தியம் அரசியலில் சாத்தியம் இல்லை என்ற நிலை வந்ததால் தான் இன்று ஹனிபா போன்றவர்கள் அரசியல் களத்தில் இல்லை. அது கேடிகளின் கோடி சேர்க்கும் அலிபாபா குகை ஆகி பல காலம் கடந்துவிட்டது.

இன்று உண்மையான மக்கள் நலன் விரும்பி சேவகன் யார் யார் என்று பூத கண்ணாடி கொண்டு தேடும் நிலையில் சாமானியனான ஹனிபா போன்றவர்கள் அந்த சகதியில் வீழ்ந்து விடாது விட்டு விலகியதே சாலச்சிறந்த செயல் என்பேன். நேற்றுவரை சாரக்கட்டுடன் சந்தியில் நின்று மக்களை சந்தித்தவர் இன்று மந்திரி ஆனதும் ஏசி வாகனத்தில் அமர்ந்த படி வாக்காளர் குசலம் விசாரிக்கின்றார்.

சாத்தியம் இல்லை இது ஹனிபா போன்ற மனிதம் போற்றும் மானிடனுக்கு. ஏனென்றால் சோனியை விரட்ட தேரரை கூட்டிவந்த செய்தியை அறிந்த பின்பும் பூ பறித்து வந்த பூவையரிடம் முறாவட ஆக்களுக்கு மீராவோடை ஆக்கள் பூ தாராங்களா? என்ற கேள்வி மூலமே மனிதம் மதம் கடந்தது என்ற செய்தியை பிடரியில் அறைந்தது போல் பதிவிட ஒருவரால் தான் முடியும்.

அவர் தான் என் இனிய தமிழ் பேசும் ஓட்டமாவடி எஸ் எல் எம் ஹனிபா. வாழ்க நீ எம்மானே!

– ராம் –