ஆடைகளும் நிர்வாணங்களும்

(முகம்மது தம்பி மரைக்கார்)
ஒரு கதை சொல்லவா?

‘முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது. இது முஸ்லிம் பாடசாலை என்பதால், எங்களுக்கென்று இங்கு ஒரு கலாசாரம் உள்ளது. எனவே, இங்கு கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் உடுத்தியுள்ளமை போன்று, நீங்களும் ஹபாயா அணிந்துதான் வர வேண்டும். முடியாது விட்டால், எங்காவது இந்துக் கல்லூரியொன்றுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுங்கள்” என்று கூறுகிறார்.

இப்போது, தமிழர் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் ஆசிரியை, என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

இந்த விடயத்தில், தமிழர் சமூகத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? இது தொடர்பில், தமிழ் ஊடகங்கள் எப்படியெல்லாம் செய்திகளை வெளியிட்டிருக்கும் என்பதை ஊகிக்க உங்களால் முடிகிறதா?

சீருடை

இலங்கையிலுள்ள அரச தொழில்களில் சிலவற்றுக்கு மட்டுமே சீருடைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொலிஸ், முப்படை, தாதியர், கலால் உத்தியோகத்தர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுகின்றவர்கள், சீருடைகளை அணிந்தே ஆகவேண்டும்.

மதம், கலாசார அடையாளங்களுக்கு ஏற்றவாறு இந்தத் தொழில்களுக்கான சீருடைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. மேற்படி தொழில்களை மேற்கொள்கின்றவர்களுக்கு சீருடைக்கான கொடுப்பனவுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.

ஆனால், இலங்கையில் ஆசிரியத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கென எவ்விதமான சீருடைகளையும் அரசு இதுவரை நிர்ணயிக்கவில்லை. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஆசிரியர்களுக்கான ஒழுக்கக் கோவையில், ‘சீரான ஆடைகளை ஆசிரியர்கள் அணிய வேண்டும்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சீரான’ என்பதற்குரிய வரையறை என்ன என்பது தொடர்பில், விளக்கங்கள் எவையுமில்லை.

தாய்ச் சட்டம்

இந்த இடத்தில், நமது நாட்டின் தாய்ச் சட்டமான அரசமைப்பின் மூன்றாவது அத்தியாயம் அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறது.

அதில் 14(உ) பிரிவு, ‘ஒவ்வொரு பிரஜையும் தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ, நம்பிக்கையையோ வழிபாட்டிலும் உபசரிப்பிலும் சாதனையிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கு உரித்துடையவராவார்’ என்று கூறுகிறது. அதேபோன்று, 14(ஊ) பிரிவில், ‘தனியாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து, தனது சொந்தக் கலாசாரத்தை அனுபவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், அத்துடன் தனது சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்குமான சுதந்திரம், ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஆசிரியர்கள், அவர்களுக்கு விருப்பமான, ‘ஹபாயா’ எனும் ஆடையை அணிந்து செல்வதற்கு, அந்தக் கல்லூரியின் நிர்வாகம் தடை விதித்ததால், எழுந்த பிரச்சினைகள் குறித்து அறிவோம்.

முஸ்லிம் ஆசிரியைகள் ‘ஹபாயா’ அணிவதற்கு எதிராக, சண்முகா கல்லூரி சமூகத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியதும், அதைத் தொடர்ந்து, அங்கு கடமையாற்றிய ஐந்து முஸ்லிம் பெண் ஆசிரியர்களும், தற்காலிகமாக வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றப்பட்டமையும் அறிந்தவைகளாகும்.

இந்த விவகாரத்தில் பல்வேறு விதமான அபிப்பிராயங்களும் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இருந்தபோதும், இது தொடர்பாக நீதி மற்றும் நியாயம் என்கிற மதிப்புக்குரிய விடயங்கள் இருக்கின்றமை குறித்து மறந்து விடலாகாது.

சமூக நல்லிணக்கம்

சமூக நல்லிணக்கம் என்கிற வாசகமொன்று குறித்து, அநேகமாக அறிந்து வைத்துள்ளோம். ஆனால், அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் அதை உச்சரிக்கின்றோமா என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.

‘வேறுபாடுகளைக் கடந்து ஒரு மனிதனை இன்னொரு மனிதன் புரிந்து கொள்வது, ஒரு சமூகத்தின் செயற்பாடுகளை மற்றைய சமூகம் சகித்துக் கொள்வது, ஓர் இனத்தை மற்றோர் இனம் அனுசரித்துச் செல்வது, சமூக நல்லிணக்கமாகும்’ என்று கூறப்படுகிறது.

‘ஏதேனும் பன்மைத்துவ சூழலில் நிலவும் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை மதித்தல், ஒன்றாகக் கூடி வாழ்தல், தாம் விரும்பும் கருத்துகள் சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஏனையவர்களுடன் விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மையுடன் செயற்படுதல் சமூக நல்லிணக்கமாகும்’ என்கிற வரைவிலக்கணமொன்றும் உள்ளது.

‘ஒரு சமூகத்தின் செயற்பாடுகளை மற்றைய சமூகம் சகித்துக் கொள்வது’ என்கின்ற அம்சம் இங்கு முக்கியமானதாகும். அதுவும் இலங்கை போன்ற பல சமூகங்கள் வாழும் நாட்டில், மற்றைய சமூகத்தின் செயற்பாடுகளைச் சகித்துக் கொள்ளாமல், நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது.

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும், பொது நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் வருகின்றன. எனவே, அங்கு எந்தவொரு சமூகத்தவரின் மதத்தையோ, கலாசாரத்தையோ உயர்த்திப் பிடிக்க முடியாது.

முஸ்லிம் பாடசாலையொன்றில் கற்பிக்கும் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரை, ‘ஹபாயா’ உடுத்த வேண்டும் என்று, அந்தப் பாடசாலையின் நிருவாகம் வற்புறுத்துவது எத்தனை அநீதியோ, அதேபோன்றதொரு செயற்பாடுதான் திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் பணியாற்றிய முஸ்லிம் பெண் ஆசிரியர்களைச் சேலை உடுத்துமாறு, அந்தப் பாடசாலையின் நிர்வாகம் வற்புறுத்தியமையுமாகும்.

சண்முகா இந்துக் கல்லூரிக்குள் முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் ‘ஹபாயா’ அணிந்து செல்கின்றதாலோ, முஸ்லிம் பாடசாலைக்குள் தமிழர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் சேலையுடுத்திக் கொண்டு செல்கின்றமையாலோ, சம்பந்தப்பட்டோரின் கலாசாரங்களில் என்னதான் சீரழிவுகள் ஏற்பட்டு விடப்போகின்றன?

அடுத்த சமூகத்தவரின் செயற்பாடுகளை சகித்துக் கொண்டு, அவற்றை அனுமதிப்பதில்தான் சமூக நல்லிணக்கம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக, நம்மில் கணிசமானோர் உள்ளனர்.

சிங்கள பாடசாலைகளில் ‘ஹபாயா’

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிங்கள, கிறிஸ்தவ பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஆசிரியர்கள், தாம் விரும்பியவாறு ‘ஹபாயா’ அணிந்து கொண்டுதான், கடமைக்குச் செல்கின்றனர் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

அதேபோன்று, முஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசியர்களும், அவர்களின் விருப்பத்துக்குரிய ஆடை வகையான சேலையை, அணிந்து கொண்டு செல்வதற்கு எவ்வித தடைகளுமில்லை.

குறிப்பாகத் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிங்கள மகா வித்தியாலயம், சென் ஜோசப் கல்லூரி, வித்தியாலோக சிங்கள வித்தியாலயம் மற்றும் கந்தளாய் அக்கரபோதி சிங்கள வித்தியாலயம் உள்ளிட்ட, முஸ்லிம் பாடசாலைகள் அல்லாத மாற்று இனத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள பாடசாலைகளில், கடமையாற்றுகின்ற முஸ்லிம் ஆசிரியைகள், ‘ஹபாயா’ அணிந்து கொண்டுதான் செல்கின்றனர்.

அவர்களின் ஆடைகளுக்கு அங்கு எவ்வித எதிர்ப்புகளுமில்லை. அதிலும், கந்தளாய் அக்கரபோதி சிங்கள வித்தியாலயத்தின் அதிபர் பௌத்த மதகுருவாக இருந்து கொண்டே, முஸ்லிம்களின் ‘ஹபாயா’ ஆடையைத் தமது பாடசாலையில் அனுமதித்துள்ளமையை இங்கு சுட்டிக்காட்டி ஆகவேண்டும்.

மொட்டைத் தலையும் முழங்காலும்

இந்த விவகாரத்தில் ‘ஹபாயா’ என்கிற ஆடை பற்றிய விமர்சனங்களை சிலர் முன்வைத்துப் பேசுகின்றமை, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற செயற்பாட்டுக்கு ஒப்பானதாகும்.

‘ஹபாயா’ ஆடை என்பது, அரேபியக் கலாசாரத்துக்கு உரியதாகும் என்றும், அந்த ஆடை முறைமை, பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் இந்த விவகாரத்தை வைத்து, சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். அதிலும், முஸ்லிம் அல்லாதவர்கள்தான் இந்த விடயத்தில் அதிகம் கவலைப்படுவதாகத் தெரிகிறது.

‘ஹபாயா’ என்கிற ஆடை தேவையா இல்லையா என்பதை, அதை அணிகின்றவர்தான் தீர்மானிக்க வேண்டும். தவிர, வெளியிலிருந்து யாரும் அதை முடிவு செய்ய முடியாது.

இன்னொருபுறம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கலாசாரங்களுக்கு அடிமைப்பட்டுக் கொண்டு, அவர்களின் ‘ஷேட்’, ‘ட்ரவுசர்ஸ்’, ‘கோட்’ போன்ற ஆடைகளை அணிந்து அழகு பார்க்கும் போது, முஸ்லிம்கள் தமக்கு மிகவும் நெருக்கத்துக்குரிய அரேபிய கலாசாரத்தின் ஆடை முறைமையொன்றைப் பின்பற்றுவதில் குற்றங்கள் எவையும் இருந்து விடவும் முடியாது.

இன்னொருபுறம், சேலையைக் கூட இஸ்லாமிய வரைமுறைகளுக்கு உட்பட்டு, முஸ்லிம் பெண்கள் அணிய முடியும் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

இலங்கையில் ‘ஹபாயா’ எனும் ஆடை வகை அறிமுகமாவதற்கு முன்னர், சேலைதான் முஸ்லிம்களின் ஆடையாக இருந்தது. தற்காலத்திலும், முஸ்லிம் பெண்களில் கணிசமானவர்கள் சேலை அணிகின்றனர்.
முஸ்லிம் பெண் ஆசிரியரொருவர், சேலையணிந்து கொண்டு பாடசாலைக்குச் செல்ல விரும்பினால், அதைத் தாராளமாக அவர் நிறைவேற்ற முடியும்.

ஆக, முஸ்லிம் பெண்கள் ‘ஹபாயா’ அணிவதா, சேலை அணிவதா என்பது, இங்கு பிரச்சினையான விவகாரமல்ல. ‘சல்வார் கமீஸ்’ என்கிற ஆடைகளையும் முஸ்லிம் பெண்கள், இலங்கையில் அணிகின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால், “இந்த ஆடையைத்தான் நீ அணிய வேண்டும்” அல்லது “இந்த ஆடைகளை நீ அணியக் கூடாது” என்று, யாரும் யாருக்கும் நியாயத்துக்கு அப்பாற்பட்டு, உத்தரவுகளை வழங்க முடியாது.

ஆடைகள் பற்றிய வரையறை

ஆடைகள் தொடர்பான வரையறைகள் மற்றும் உத்தரவுகளைச் சில இடங்களில் பேண வேண்டியுள்ளமை குறித்தும் மறுப்பதற்கில்லை. உதாரணமாக, நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குள் ஆண்கள் நுழையும்போது, மேலாடைகளைக் களைய வேண்டும் என்பது கண்டிப்பாகும்.

இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களும் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குள் நுழைந்த போது, மேலாடைகளைக் களைந்திருந்தார்கள்.

இந்தச் சமய மரபை இந்துக்கள் அல்லாதோரும் மீறியதில்லை. காரணம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இந்து மதத்தினருக்குச் சொந்தமானது. அங்கு பேணப்படும் நடைமுறைகளை, மாற்று மதத்தினர் அனுசரிப்பது அவர்களை மதிப்பதாக அமையும்.

ஆனால், இதேபோன்றதொரு பிரத்தியேக செயற்பாட்டை, அரச பாடசாலையொன்றில் நடைமுறைப்படுத்த முடியாது. கோவில்களுக்குள்ளும், பள்ளிவாசல்களுக்குள்ளும், தேவாலயங்களுக்குள்ளும், விகாரைகளுக்குள்ளும் நடைமுறையில் இருக்கின்ற செயற்பாடுகளை, அரச பாடசாலைகளான பொது நிறுவனங்களுக்குள் கட்டாயப்படுத்தி அமுல்படுத்த நினைப்பது சட்ட விரோதமானதாகும்.

பழைய நினைவு

1990ஆம் ஆண்டின் முற்பகுதியில், நடந்த சம்பவமொன்று இங்கு நினைவுக்கு வருகிறது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் அம்பாறை மாவட்டத்தில் மூன்று நாட்களைக் கொண்ட இளைஞர் முகாம் ஒன்று நடாத்தப்பட்டது.

முஸ்லிம், சிங்களம், தமிழர் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஏராளமானோர் அந்த முகாமில் கலந்து கொண்டனர். தமிழர்கள்தான் அங்கு குறைவானவர்களாக இருந்தனர்.

அது கந்தசஷ்டி விரத காலமாகும். முகாமில் கலந்து கொண்ட தமிழ் இளைஞர்கள், தமக்கு மச்சம் – மாமிசம் கலக்காத உணவுகள் தேவையென்பதைத் தெரிவித்தனர்.

இதையடுத்து, முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் அனைவரும் இணைந்து, முகாமுக்குப் பொறுப்பான இளைஞர் சேவை உத்தியோகத்தரைச் சந்தித்து, முகாமில் இருந்த எல்லோருக்கும் சேர்த்து மச்சம் – மாமிசமற்ற, மரக்கறி உணவைத் தயார் செய்து தருமாறு கேட்டோம். இந்து மதத்தைச் சேர்ந்த நண்பர்களுக்காக அவ்வாறு நடந்து கொண்டமையை முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் பெருமையாக நினைத்தார்கள். அந்த நிகழ்வு மறக்க முடியாததாகும்.

முட்டாள்களின் செயற்பாடு

ஆனால், இப்போது இந்த மனநிலை ஏன் கணிசமானளவு இல்லாமல் போய் விட்டது என்பது கேள்விக்குரியதாகும்.

மக்களின் மூளைகளுக்குள் இனவாதச் சிந்தனைகள் திட்டமிட்டுப் புகுத்தப்பட்டு விட்டன. இன்னொருபுறம், இனவாதச் செயற்பாடுகள் அனைத்துக்குப் பின்னாலும், அரசியல்வாதிகள் ஏதொவொரு முகத்துடன் இயக்கிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் ‘ஹபாயா’ பிரச்சினை உருவானமையை அடுத்து, அந்தப் பாடசாலைச் சமூகத்தினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திலும், அதைக் கண்டித்து முஸ்லிம்கள் செய்த ஆர்ப்பாட்டங்களிலும் இனவாதக் கருத்துகளும், அடுத்த சமூகத்தவரை அவமானப்படுத்துகின்ற சுலோகங்களும் காணப்பட்டமை வெட்கக்கேடானதாகும்.

‘ஹபாயாவா?’ ‘சேலையா?’ சிறந்த ஆடை என்கிற ‘லூசுத்தனமான’ வாதத்தை முன்வைத்து, தமிழர் அடையாளத்தைக் கொண்ட சிலர், யாரோ முஸ்லிம் பெண்களின் படங்களைப் ‘பேஸ்புக்கில்’ காண்பித்து, அசிங்கமாக எழுதித் தள்ளுகின்றனர்.

இன்னொருபுறம், முஸ்லிம் பெயர்களுடன் ‘பேஸ்புக்கில்’ செயற்படுகின்ற சிலர், படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் படத்துக்கு ஆங்காங்கே வட்டமிட்டு, அடையாளப்படுத்தி அந்தப் பிள்ளை தொடர்பில் அருவெறுப்பாக எழுதியிருக்கின்றனர்.

எல்லா சமூகங்களிலும் இப்படிச் செயற்படுகின்ற முட்டாள்கள் இருக்கின்றார்கள். ஒரு சிறிய நெருப்புப் பொ‌றியைக் காட்டுத் தீயாக இவர்கள் மாற்றி விடுவார்கள்.

எனவே, உணர்வுபூர்வமான விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றவர்கள் இவை குறித்தெல்லாம், ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிக்க வேண்டும்.

இன்னொருபுறம், முட்டாள்கள் கும்பலாக ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காக, படித்தவர்களும் சேர்ந்து, அவர்களுடன் ஓடவும் கூடாது; ஓடிவிடவும் முடியாது.

இன்னுமொரு முப்பது ஆண்டுகளுக்கு சந்தோஷங்களைத் தொலைத்து விட்டு, ஓடுவதற்கான வல்லமை, நம்மில் எவருக்கும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள மாட்டீர்களா?

இந்த விவகாரத்தில் ஆடைகள் பற்றிப் பேசுகின்றவர்களில் அதிகமானோர், தம்மை நிர்வாணப்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை நினைக்க வெட்கமாக உள்ளது.