இது பாஜக பெற்ற வெற்றி அல்ல… தோல்வி: ஜிக்னேஷ் மேவானி

ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் கடந்த 22 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுத முற்பட்ட 3 இளைஞர்களில் ஒருவர். தற்போது குஜராத் தேர்தலில் பாஜக கடும் பின்னடைவைச் சந்திக்கக் காரணமாக இருந்தவரும்கூட. இந்தத் தேர்தலில் பாஜக-வை எதிர்த்து வட்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர், சுமார் 18,150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து மழையில் நனைந்துக்கொண்டிருந்தவரிடம் ‘தி இந்து’-வுக்காக பேசினோம்.

வாழ்த்துக்கள், இந்த வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?

மக்கள் என் மீது கொண்ட அன்பாகதான் இந்த வெற்றியை உணர்கிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு எதிரான துவேஷத்துடன் என்னைப் பார்த்தார்கள். அந்த வகையில் பாஜக-வின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரான வெற்றியாக இதனை உணர்கிறேன்.

காங்கிரஸின் ஆதரவில்லாமல் இந்த வெற்றியை நீங்கள் பெற்றிருக்க முடியுமா?

நான் எந்தக் கட்சியின் சார்புடையவனும் இல்லை. சொல்லப்போனால் மனு தாக்கல் இறுதி நாளைக்கு முந்தைய நாள் வரை போட்டியிடும் எண்ணமே எனக்கு இல்லை. மக்களின் அன்புக்குக் கட்டுப்பட்டே கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தேன். காங்கிரஸின் வெற்றித் தொகுதியாக கருதப்படும் இந்தத் தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்தாததன் மூலமாக எனக்கு ஆதரவு அளித்திருந்தது. அந்த வகையிலும் கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்திருக்கலாம்.

காங்கிரஸுடன் இணையும் வாய்ப்பு இருக்கிறதா?

என்னைப் பொறுத்தவரை ஒரு கட்சியிலிருந்தால் அந்த கட்சியின் கண்கள் வழியாக மட்டுமே மக்களை காண முடியும். ஆனால், மக்களின் கண்களின் வழியாக மக்களைக் காண விரும்புகிறேன்.

குஜராத்தில் பாஜக-வின் வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?

சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் அந்தக் கட்சி கணிசமான அளவு தொகுதிகளை இழந்திருக்கிறது. ஏராளமான தொகுதிகளில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சமீபத்தில் மோடி பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்திய போர்பந்தர் தொகுதியில் 1850 சொச்சம் வாக்கு வித்தியாசங்களில்தான் அந்தக் கட்சி போராடி வென்றிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்திலிருக்கும் அந்தக் கட்சி 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்திருக்கிறது என்றால் அது பாஜக-வுக்கு கிடைத்த தோல்விதான்.

ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கோர், நீங்கள்… மூவரும் பாஜக-வுக்கு எதிராக கடும் பிரச்சாரம் செய்தீர்கள். இத்துடன் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அதிருப்தி இத்தனை இருந்தும் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறித்து..?

குஜராத்தின் சாமானியனுக்குக்கூட இந்த வெற்றியின் பின்புலம் தெரியும். குஜராத்திகள் பாஜக மீது வைத்திருப்பது பாசம் அல்ல, பயம். பாஜக தோல்வியடைந்தால் பாஜக-வினரே மதக் கலவரத்தை ஏற்படுத்துவார்கள் என்பது மக்களுக்கும் தெரியும். அதன் காரணமாகவே வணிகர்களும் நடுத்தர மக்களும் பாஜக-வுக்கு ஓட்டு போட்டுள்ளனர். இந்த முறை கணிசமான தொகுதிகளில் அந்த பயத்தை நாங்கள் போக்கியுள்ளோம். வருங்காலத்தில் குஜராத் மக்கள் பயத்திலிருந்து விடுபடுவார்கள். அன்றைய தினம் பாஜக முழுமையாக துடைத்தெறியப்படும்.