வட்டமடு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டமடு விவசாயிகள் முன்னெடுத்து வந்த கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (20) தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக, வட்டமடு கமக்காரர் அமைப்பின் தலைவர் எம்.ஐ. அப்துல் றஸீட் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல். அதாஉல்லாவோடு, நேற்று (19) மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, எமது பிரச்சினைகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி, மிக விரைவில் சாதகமான தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் தற்காலிகமான கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆண்டாண்டு காலமாக வேளாண்மை செய்து வந்த எமது காணிகளை மீட்டு வேளாண்மைச் செய்கையில் ஈடுபட நடவடிக்கை விரைவாக முன்னெடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எமது போராட்டம் தொடருமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, மணிக்கூட்டுக் கோபுரச் சுற்று வட்டாரத்தில் வட்டமடு விவசாயிகள் தமது பூர்வீக காணிகளை மீட்டெடுக்க சாத்வீக ரீதியில் மேற்கொண்டு வந்த காணி மீட்பு போராட்டம், கடந்த 48 நாட்களாக இடம்பெற்ற வந்தது.

வட்டமடு 444 ஏக்கர், வேப்பையடி கண்டம் 202 ஏக்கர், வட்டமடு புதுவெளி 180 ஏக்கர், தோணிக்கல்கொக்குளு கண்டம் 300 ஏக்கர் நெற்செய்கை காணிகளை வேளாண்மைச் செய்கைக்கு அனுமதிக்க வேண்டுமெனக் கோரியே, விவசாயிகள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.