இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (2)

(மாதவன் சஞ்சயன்)

இறுதித் தீர்வு 13ல் தானா என கேட்கும் பலர் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தை நினைவில் கொள்ளவேண்டும். இன்று பறையடித்து “வீ வோன்ட் தமிழ் ஈழம்” என கத்துபவர்களில் பலர் அன்று பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்தியா எம்மை ஏமாற்றிவிட்டது என்பவர்களில் பலர் அன்று போராட்ட காலத்தில் ஒதுங்கி இருந்தவர்கள். சம்மந்தரையும் சுமந்திரனையும் சீண்டுபவர்கள் ஒருதடவை பொலிஸ் அடியுடன் அடங்கியவர்களும், வழக்கில் தப்பியபின் தம் வாழ்க்கையை கொழும்பில் முடக்கியவரும், கொழு கொம்பு கிடைத்ததும் பற்றிப் பிடித்து படர்ந்து, தலைமையை துதிபாடி குளிரவைப்பவரும், புலம்பெயர் தமிழர் சாவிக்கு ஆடும் பொம்மைகளும் தான் என்பது பகிரங்க உண்மை.

1983ல் உக்கிரமடைந்த ஆயுத போராட்டம் 1987 இந்திய அமைதிப்படை வரவுடன் நிறுத்தப்பட்ட போது இறந்த போராளிகள், பொதுமக்கள் தொகை சில ஆயிரத்தை தாண்டவில்லை. அதிலும் ராணுவத்தால் கொல்லப்பட்ட இளைஞர்களை விட புலிகளால் கொல்லப்பட்ட ஏனைய இயக்கத்வர்களே அதிகம். உட்கட்சி கொலைகள் செய்த புளட் மட்டும் விதிவிலக்கு.

முக்கிய தலைவர்களான தருமலிங்கம் ஆலாலசுந்தரம் முதல் ஆனந்தராஜா மாஸ்டர் போன்ற கல்விமான்களும் ராணுவத்தால் கொல்லப்பட வில்லை. போராளிகளால் நடத்தப்பட்ட முகாம் தாக்குதலின் போது ஏற்பட்ட இடப்பெயர்வுகள் உட்பட வடமராட்சியை ராணுவம் கைப்பற்ற முற்பட்ட போது மக்களுக்கு ஏற்பட்ட உயிர், உடமை இழப்புகள் கணிசமானவை.

பொருளாராத தடை விதித்து வடமராட்சியை ராணுவம் தாக்கிய போது இந்திய படையின் வரவுக்காய் கூக்குரல் இட்ட மக்களை, இந்திய விமானங்கள் போட்ட உணவு பொட்டலத்தால் மனம் மகிழ்ந்த மக்களை, இந்திய அமைதிப்படை எம் மக்களை கொல்லும் படை என வெறுக்க வைத்தவர் பிரபாகரன்.

திலீபனை உண்ணாவிரதம் இருக்கச் செய்தும், குமரப்பா புலேந்திரன் உட்பட பிடிபட்டவர்களை சயனைற் கடிக்கவைத்தும் மரணிக்க செய்து, இந்திய சமாதான படையை இந்திய ராணுவமாக மாற்றி மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாரிய சேதத்தை ஏற்படுத்தியவர் பிரபாகரன்.

1983 கலவரத்தின் பின் தெற்கில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் வடக்கு, கிழக்கை தம் வாழ்விடமாக கொண்டனர். அவ்வாறு வந்த பல இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். குறிப்பிட்ட தொகையினர் மட்டுமே புலம் பெயர்ந்தனர். ஆனால் அந்த நிலை பிரபாகரனின் சகோதர படுகொலை ஆரம்பித்ததும் மாறியது. பெற்றோர் தம் பிள்ளைகளை காணி விற்றாவது ஏஜன்சிகள் மூலம் நாடு கடத்தினர்.

இந்திய ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதும் லொறிகளில் மிளகாய் மூடைகளுக்கு பின் ஒளிந்து கூட இளைஞர்கள் தெற்கிற்கு தப்பி சென்று அகதிகளாய் அகிலமெங்கும் சென்றனர். இதை விட கேவலம் புலிகளின் தாக்குதலில் தப்ப அருகில் இருக்கும் ராணுவ முகாங்களில் தஞ்சம் அடையும்படி அத்துலத்முதலி விட்ட அறிக்கை. பிரபாகரன் செயல் எதிரியிடம் எம் இளைஞர்களை சரணடைய செய்தது.

ஆனால் தம்மிடம் சரணடைந்த சகோதரர்களை கந்தன் கருணையில், பெருமாள் கோவிலடியில், சாவகச்சேரி கல்வயலில் என பல இடங்களில் பரலோகம் அனுப்பியது பிரபாகரன் கூட்டம். இந்த சூழ்நிலை தான் ராணுவம் வடமராச்சியை கைப்பற்றும் திட்டத்துக்கு வித்திட்டது.

சில ஆயிரம் போராளிகள் பொதுமக்கள் உயிரிழப்பு, குறைந்தளவு இடப்பெயர்வு, கணிசமான உடைமைகள் இழப்பு என இருந்த சூழ்நிலையில் வந்த ஒப்பந்தம் தந்த 13ஐ முழுமையாக்க முனைந்த வடக்கு கிழக்கு மாகாண முதல்வரை பிரேமதாசாவுடன் கூட்டமைத்து முடக்கினர் பிரபாகரன் கூட்டம்.

பின் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி லட்சக்கணக்கான மக்களை பலிகொடுத்து, கோடிக்கணக்கான மக்கள் சொத்துக்களை நாசமாக்கி, அவர்களின் நிலங்களை ராணுவ முகாங்களாக்கி, அவர்களை அகதிமுகாம் வாசிகளாக்கி, இத்தனையும் இவர்களே செய்து விட்டு தீர்வு 13ல் தானா என முக்குவது என்ன நியாயம் ?

ஸ்ரீலங்கா விடயத்தில் குறிப்பாக எம்மவர் விடயத்தில் டெல்லி நிகழ்ச்சி நிரல்ப்படிதான் காட்சிகள் மாறும். அழுத்தங்கள் வரும்போது எல்லாம் டெல்லி மௌனம் காக்கும். பிரேரணைகள் நிறைவேறும் போதெல்லாம் பாராமுகம் காட்டும். தனது பிராந்திய நலனை பாதிக்காத முடிவுகளை தான் அது என்றும் எடுக்கும்.

தனது தலையில் இருக்கும் கஸ்மீர் பிரச்சனை சர்வதேச பிரச்சனை ஆகக் கூடாதென்றால், அண்டை நாடுகளில் தன் தலியீட்டையும் அந்த கணிப்பில் தான் அது செய்யும். இந்த இடத்தில் தான் எம்மவர் செயல் எப்படி அமையவேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

மகிந்த 13 + எனக் கூறி பின்னர் சீனாவின் பின்னணியில் மனம் மாறியது போன்ற நிலைமை இன்று இல்லை. சர்வதேசத்தின் 25 நாடுகள் அமெரிக்க பிரேரணையில் வரவேற்ற நிலையில் இந்தியா 13ஐ பற்றி குடிப்பிட்டதை சமஸ்டி வரை நகர்த்த சம்மந்தர் சுமந்திரன் முயலவேண்டும்.

– தொடர் 3ல் –